தங்கேஸ்/காணாமல்  போனவர்கள்

நான் கீழக்கரை  பேருந்து நிலையத்தில்  இறங்கி தர்க்காவுக்குப் போய்சேர்ந்த போது வெய்யில்  கொஞ்சம் கூட தாழ்ந்திருக்கவில்லை. சிறு சிறு மணல் துகள்கள் செருப்புக்குள் புகுந்து கொண்டு  குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது  வறுத்தெடுத்த உப்புத்துகள்கள்  மின்னுவது போல கண்களுக்கு தெரிந்தது. 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிற  கடலும் , ஆர்ப்பரிக்கும் அலைகளும் பொங்கிச் சிதறிக்கிடக்கும் வெண் நுரைகளும் எதையோ மனதிற்கு உணர்த்தின.  கடற் கரையெங்கும்  எதையோ தொலைத்து விட்டு  தேடிச் செல்லும் பாவனையில்   மனிதர்கள் சிலர் மணல் வெளியெங்கும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். 

காலையில் எழுந்ததும் எழாததுமாக அம்முவிடம் சென்று ** இன்னிக்கு ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கீழக்கரை வரைக்கும் போயிட்டு வந்திடுறேன் ‘’ என்றதும் அவள் முகம் மெல்ல மாறுவதை கண்டு  தலைகுனிந்து கொண்டேன்.    

    ‘’ ஏன் ஒரு வருசம் அதுக்குள்ள  திரும்பியிருச்சா இல்ல வருச வருசம் போகனும்னு ஏதாவது நேர்த்திக்கடன் இருக்கா ?  என்று கேட்டாள். 

‘’ அதில்ல இராத்திரி அம்மாவும் பெரியம்மாவும் கனவுல வந்ததாங்க ‘’

‘’ அது தான பார்த்தேன் ‘’

அம்மா  இன்று அதிகாலைக்கும் முன்பே கனவில் வந்தாள் . என்னைப்பார்த்ததும் வெற்றிலைக்காவி பற்கள் தெரிய  மனதாரச் சிரித்தாள்.  பிறகு பாதியிலேயே  ஞாபகம் வந்தது போல சிரிப்பை  நிறுத்தி விட்டு  ‘

’ ஏம்பா  டவுனுக்காரா ! எங்களையெல்லாம் ஞாபகமிருக்கா  “ என்று கேட்டாள். “” 

ஏம்மா கோபமிருந்தா இரண்டு அடிகூட அடிச்சிப்பிடு அதற்காக இத்தனை நாள் கழிச்சி வந்து என்னைப்பார்த்துட்டு இப்படியா கேட்ப  “” என்று அழுதேன் 

உன்னை வளர்த்து வாலிபமாக்கினது யாரு ? என்று கேட்டாள் 

‘’  நீ தான்  ‘’ 

 **அப்ப ஏன் என்னை தேடல  ?  

‘’ ஆனா  எங்க போய் தேடுவேன்  ? ‘’ என்று என்னையைறியாமல் கேட்டு விட்டேன். 

அடுத்த நொடி அம்மாவின் உருவம் குளிர்காற்றில் கலைந்து போகும் மேகங்கள்போல மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்ததது. கடைசியில்அவள் நின்ற இடத்தில் சில மஞ்சள் அரளிப்பூக்கள் மட்டுமே வட்டமாக உதிர்ந்து கிடந்தன. 

‘’ அம்மா ரொம்பவும் கோபமா இருந்துச்சு . ‘’ 

‘’ ஓ\ஹோ ‘’

‘’குறிப்பா உம் மேலதான் அதுக்கு ரொம்பக்கோபம் ‘’

ஏன் நான் என்ன பாவம் செஞ்சேன் நானா அவுங்களை  வீட்டைவிட்டுப்போகச் சொன்னேன் ?

நான்  ஒன்றும் பேசவில்லை .

. இல்லை என்று சொல்வேனென்று  எதிர்பார்த்திருப்பாள் போல .முகத்தில் எரிச்சல் மண்டிக் கிடந்தது-

‘’ புறாக்கூண்டு போல இருக்குற இந்த பிளாட்டுக்குள்ள வந்து அவங்க  எங்களை எல்லாம் படுத்துன பாடு உங்களுக்கு மறந்து போச்சான்னு கேட்கிறேன் ?              

உண்மையில்  எனக்கு  எதுவுமே மறந்து விடவேயில்லை. .கார்களும் பேருந்துகளும் மோட்டார் வாகனங்களும் அசுர வேகத்தில் இரைந்து செல்லும் இந்த நகரத்து சாலையில்  , உதவிக்கு ஆளில்லாமல் தன்னந் தனியாக நின்று கொண்டிருப்பது போல் தான்  இருந்திருக்கும் அம்மாவுக்கு. ஆனால் எனக்குத்தான் எதுவுமே தோன்றாமல் போய் விட்டது.

ஆனால் ஒன்று அவள் இங்கேயிருந்து காணமல் போய் விட்டதாக எல்லோரும் சொன்னாலும் , இந்தச் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டதாகத்தான் அவள் நினைத்திருப்பாள் . 

கீழக்கரையில் தர்காவை ஒட்டியிருந்த அந்த வளாகத்திற்குள் புதிதாக அரசு மனநல மருத்துவமனை ஒன்று முளைத்திருந்தது. வெள்ளையுடை அணிந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கையில்ல பச்சை வண்ண பைல்களுடன் குறுக்கும் மறுக்குமாக நடந்தவண்ணமேயிருந்தார்க்ள். நடந்து போகும் சனங்களில் யார் மனநலமுடையவர்கள் யார் மனநலமற்றவர்கள் என்று கண்டு கொள்வது அத்தனை எளிதாக இல்லை. ஆனால் இங்கே தெருக்களிலெல்லாம் மனநலமற்றவர்கள் திரிவதாக பேசிக்கொண்டார்கள்.

சுற்றுச்சுவருக்குள்ளே  அங்கங்கே உட்கார்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருக்கும்  .ஒவ்வொரு முகமாக பார்த்துக் கடந்தேன்  . முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாக இருந்தன. சிரித்தபடி, அழுதபடி தனக்குத்தானே , பேசியபடி  வெறும கைகளாலேயே வண்டி ஓட்டியபடி , இன்னும் கடலைப்பார்த்து சபித்தபடி  . சில முகங்கள் எந்த பாவங்களும் காட்டாமல் மேலே வானத்தை வெறித்தபடியே     இருந்தன.  . 

அம்மாவின் முகம் எங்ககுமே தென்படவில்லை. ஒரு வேளை  அப்போதே கடலில் விழுந்து செத்துப் போயிருப்பாளோ என்ற எண்ணம் அடிக்கடி மனதுக்குள் எழுந்த போது பயத்தில் இதயம் வேகமாக துடித்தது. . 

சரி அவ்வளவு தான்  கிளம்பலாம் என்று நினைத்த போது  பெரியவர்  வாஹாப் பாயை பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. 

 தர்காவின் வாயிற்கதவை ஒட்டியிருந்த வரவேற்பறை அலுவலகத்திற்குள் நுழைந்த போது அங்கே பாய்  இல்லை .. அவரது இருக்கையில் நரையோடிய தாடிக்குள்ளே மெல்லிய புன்னகையை தேக்கி வைத்திருந்த  ஒரு புதிய மனிதர் அமர்ந்திருந்தார் . அவரது மேசைக்குப் பின்புறம் சிவப்பு டிஸ்பிளே போர்டில் காணாமல் போன மனிதர்களின் புகைப்படங்கள்  அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்  என்று ஒரு பத்து பேர்களின் மார்பளவு புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்ததன. சில புகைப்படங்களுக்கு கீழே மார்க்கர் பேனாவினால் முக்கியமான குறிப்புகள் எழுதி டிக் அடிக்கப்பட்டிருந்தது. அம்மாவின் புகைப்படமும் இதே வரிசையில் முதல் வருடம் ஒட்டடப்பட்டிருந்தது.

நான் என் சட்டைப்பையிலிருந்த அம்மாவின் புகைப்படத்தை எடுத்து அவரின் மேசைமீது வைத்துவிட்டு

‘’ சார் இது எங்க அம்மா கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால இங்க சிகிச்சைக்காக கொண்டுவந்தோம் கொண்டு வந்த அன்னிக்கே இங்கிருந்து  காணாமப்போயிட்டாங்க .எங்கெங்கோ தேடியும் கண்டு பிடிக்க முடியலைல ‘’  என்றேன்.  

‘’ எத்தனை வருசம் ஆயிட்டதுன்னு சொன்னீங்க ? என்று அந்தப் புதியவர் கேட்டார்.

‘’ சுமார் அஞ்சுவருஷம் இருக்கும் ‘’  சார் 

 புகைப்படத்தை கையிலெடுத்தவர் சற்று  நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு  கோபமாக என்னைப் பார்த்து  ‘’ ‘ஏன் சார்  நேத்து இங்கயிருந்து தப்பிச்சுப்போனவங்களையே எங்களால கண்டுபிடிக்கமுடியலை .இதுல அஞ்சுவருசத்துக்கு முன்னால காணாமப்போன உங்க அம்மாவை எங்கபோய் கண்டுபிடிக்கிறது . சொல்லுங்க ‘’ என்று கேட்டார்.

‘’  ‘சார் இந்த அஞ்சுவருஷமும் நான்  அப்பப்ப வந்து விசாரிச்சுக்கிட்டுத்தான் போயிட்டிருக்கிறேன் என்றேன்.  சற்று நேரத்திற்கு பிறகு ‘’ இதுக்கு முன்னால இருந்த வஹாப்பாயை கூட  எனக்கு நல்லாத் தெரியும்  ‘’ என்றேன்.

இப்பொழுது அவர் கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப்பார்த்து ‘’ வஹாப்பாய் ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முன்னால அல்லாகிட்ட போயிட்டார்  ‘’என்றார்.

சட்டென்று எனக்குள் ஒரு மௌனம் கவிந்தது . 

‘’ நீங்க  இந்த அம்மாவைப்பற்றி போலிஸ்ல ஒரு கம்ளையின்ட் கொடுக்கலாமே ‘’என்றார் 

‘’ சார் அஞ்சுவருஷத்துக்கு முன்னாலேயே கொடுத்தாச்சு. அவங்களும் நீங்க சொன்னதைத்தான் சொல்றாங்க ‘’

‘’ தப்பா நினைச்சுக்காதீங்க சில பேர் இங்க இருந்து ஓடிப்போய் இராமேஸ்வரம் கோயில் முன்னால கடலைப்பார்த்தபடி  இருக்கிற தெருவில பிச்சையெடுத்துகிட்டு இருப்பாங்க  அங்க இல்லன்னா இராமர் பாதம்  தீர்த்ததொட்டி , கலாம் நினைவிடம் அப்படின்னு சுற்றுலாத்தலங்கள் அங்கங்க கையில தட்டோட உக்காந்து இருப்பாங்க அந்த இடங்களையெல்லாம் நீங்க போய்  பார்த்தீங்களா ?.

சார் நான் இங்க வந்தா வழக்கமா அதிகாலையிலயே  இராமேஸ்வரம் ஏரியா முழுவதும் சுத்தி விசாரிச்சுட்டுத்தான்  வருவேன்

அங்க ஏதுன்னா  சொன்னாங்களா ?

‘’ சில பேர் போட்டாவைப் பார்த்துட்டு இங்க பார்த்தேன் அங்க பார்த்தேன் அப்படின்னு சொல்லுவாங்க  .நானும்   அதை நம்பி தனுஷ்கோடி வரைக்கும் போய் விசாரிச்சு  பார்த்துட்டு வந்துட்டேன் .’’ என்றேன்.

‘’ இரயில்வே ஸ்டேசன்ல விசாரிச்சீங்களா ? ‘’ 

‘’  போன தடவை   இரயில்வே ஸ்டேசன்ல விசாரிச்சதுல சிலபேர் இந்த அம்மா சில பிச்சைக்காரங்களோட சேர்ந்துகிட்டு கன்னியாகுமரி ரயில்ல போனத பார்த்தேன்னு சொன்னாங்க. சரின்னு நான் அங்கேயும் போய் விசாரிச்சுப்பார்த்துட்டேன் ஆனா யாருக்குமே எதுவுமே தெரியலை ‘’

முதியவர்  உண்மையிலேயே என்னை ஆர்வமாகப் பார்த்தார்.

‘ அவங்க உங்க அம்மாவா ?

‘ ஆமா சார் ‘’

அவங்களால உங்களுக்கு என்ன லாபம்  ஏன் தொலைச்சிட்டு மறுபடியும் தேடி வர்றீங்க  ஏதாவது சொத்தை லீகலா எழுதி வாங்கனுமா ?

‘’ சார் புரிஞ்சுக்கோங்க , நாங்க தொலைக்கலை அவங்களே தான் காணாமப்போயிட்டாங்க ,நாங்க சிகிச்சைக்காகத்தான் இங்க கூப்பிட்டு வந்தோம் தவிர எழுதி வாங்குறதுக்கு அவங்க பேர்ல எந்த சொத்தும் கிடையாது..ஒரு பாசத்துல தான் தேடி வர்றேன். ‘’

என் தொனி சற்று கோபமாக இருந்திருக்க வேண்டும் 

சார் தப்பாக நினைச்சுக்காதீங்க இங்க இப்டியெல்லாம் நடக்குறது வாடிக்கை அதான் கேட்டேன்  சரி நீங்க எங்கயிருந்து வர்றீங்க ?

‘ சார் நான் சென்னையிலயிருந்து வர்றேன். அங்க ஒரு ஐடி கம்பெனியில சீனியர் புரோகிராம் ஆபிசரா வேலை பார்க்குறேன். என்னோட சொந்த ஊர் தேனிப்பக்கம் முத்துநாயக்கன் பட்டின்னு ஒரு கிராமம். ‘’ என்று சொல்லி விட்டு அவர் மேலும் முழுக்கதையையும் பொறுமையாகக் கேட்பாரா என ஒரு நோட்டம் விட்டேன்..

முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் எப்படி முடிச்சுப்போடப்போகிறேன் என்று அவர் ஆர்வமுடன் காத்திருந்தார்.

‘’ .சார் என் சின்னவயசுலயே எங்க அப்பா குடிப்பழக்கத்தால  இறந்து போயிட்டாரு. நான் வீட்டுல ஒரே  ஒரு பையன் .கிராமத்தில் அம்மா வயல்ல உழைச்சுத்  தான் என்னை வளர்த்து ஆளாக்குனாங்க . நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்சு முடிச்சு சென்னையில ஒரு ஐடி கம்பெனில ஜாயின் பண்ணினே.ன் அடுத்த வருஷத்துல அங்கேயே ஒரு பெண்ணை காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். ‘’

அந்த மனிதர் நாற்காலியில் பின் தலையை சாய்த்து பாதி கண்களை மூடி நான் சொல்வதையெல்லாம் உள் வாங்கிக்கொண்டிருந்தார். 

நான் நிறுத்தியது தெரிந்ததும் மேலே தொடருங்கள் என்பது போல கைகளால் மேல் நோக்கி சைகை காட்டினார். அதற்குள்  உடல் முழுவதும்   பர்தா அணிந்த ஒரு பெண் வந்து என் மேசை மீது  சூடான தேநீரை வைத்துவிட்டுச் சென்றாள். பாய். கழுத்தை முன்னால் நீட்டி எடுத்துக்கொள்ளுங்கள் என்பது போல சொன்னார். அருந்திய தேநீர்  மனதுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.  இந்த தேநீர் தீர்வதற்குள் என் கடந்த காலத்தை முழுவதும் கொட்டி விட மாட்டேனா என்ற  ஒரு அபத்தமான எண்ணம் எட்டிப்பார்த்து விட்டு மறைந்தது. இப்பொழுதெல்லாம் இது போன்ற எண்ணங்கள் மனதிற்குள் தலைகாட்டுவதை  தவிர்க்க முடிவதில்லை.

‘’ அருமை மேல சொல்லுங்க’’  என்றார் 

‘’ ஊருல அம்மாவுக்கு துணையா இருந்த பக்கத்து வீட்டு பெரியம்மா இறந்த உடனே நான் கிளம்பி போய் அம்மாவை சென்னைக்கு அழைச்சுட்டு போயிட்டேன்  அப்புறம் என்னாச்சு ? என்றார் .பிறகு தான்  வேற மாதிரி பிரச்சினை வந்தது. ‘’ என்றேன்

என்னது ?

‘’ கோயம்பேடுல இருந்து மாம்பலம் போற  வழில தி நகர்க்கும் முன்னால திருநகர்ல ஏழாவது புளோரில  இருந்தது எங்களது பிளாட்  . என் மனைவியும் ஐடி பீல்டுல்ல சீனியர் கன்சல்டன்ட் தான்.. அம்மாவை பிளாட்டிற்குள் அனுமதிப்பதற்கே அபார்ட்மென்ட் செகரட்டரி அவ்வளவு யோசித்தார். அவங்களோட கிராமத்து தோற்றம் தான் காரணம். கொஞ்ச நாள் போனா அம்மா இந்த நாகரிகத்துக்கு பழகிக்கிருவாங்கன்னு நெனைச்சேன் .ஆனா அப்படி நடக்கலை..’’

‘’ சரி தான் ..’’

‘’ எதையெடுத்தாலும் அவர்களுக்கு பயம்.  வீட்டிற்குள்ள  நுழைந்த நாளிலிருந்து அவளாலும் எங்களாலும் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. கேஸ் ஸ்டவ் பற்ற வைப்பதற்கு கூட அது வெடிச்சுரும்னு  பயம்.ஒரு பாத்ரூம்  பயன்படுத்துவதற்கு  சுவிட்ச் போடுவதற்கு கூட கரண்டு பிடிச்சிரும்னு பயம்  .                      என் மனைவி  எல்லாத்தையும்   பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். குழந்தைகளும் கடைசிவரையிலும் அம்மாவிடம் ஒட்டவேயில்லை. அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப்பார்த்து என்ன பேசுவதென்று மிரள மிரள விழித்துக் கொண்டேயிருந்தாள். 

நாள் தோறும் அம்மா பேசும் வார்த்தைகள் சருகுகள் போல உதிர்ந்து கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் அலுவலகத்திற்கும்   குழந்தைகள் பள்ளிக்கும் போன பின்பு அவளுக்கு வீட்டிற்குள் ஒரு கைதி போல இருப்பதற்கு சுத்தமாக பிடிக்கவேயில்லை. வீட்டைவிட்டு படியிறங்கிவிட்டால்  வழி சுத்தமாக மறந்துவிடுவதாகச் சொன்னாள்… எப்பொழுதும் எங்கள் விசிட்டிங்கார்டை அவள் கைவசம் இருக்குமாறு பார்த்துக்கொண்டோம்.’’

சரி தான் ..

ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னிடம் இரகசியக்குரலில் 

‘ என்னை ஊர்லயே கொண்டுட்டு போய் விட்டுர்றயா ? என்று கேட்டாள்

‘’ பார்க்கலாம் என்று  பொதுவாக சொல்லி வைத்தேன் .எனக்கிருந்த வேலைப் பளுவில் அதை சுத்தமாக மறந்து விட்டேன். நாளாக ஆக அம்மா என்னோடும் பேசுவதை குறைத்துக் கொண்டாள்.

வெள்ளிக்கிழமை கொஞ்சம் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் தாமதாக வந்தேன். தரைத்தளத்தில் ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திற்குள் அம்முவும் குழந்தைகளும் நின்றிருந்தார்கள்.  கூட்டத்தை விலக்கிவிட்டு  உள்ளே      பார்த்தபோது அம்மா தலை குனிந்த படி உட்கார்ந்திருந்தாள்

’ செக்யூரிட்டி என்னைப்பார்த்ததும் ‘ சார் இந்தம்மா கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுல கையில காசு இல்லாம ஒவ்வொரு பஸ்ஸா ஏறி ஏறி முத்துநாய்க்கன் பட்டி போகனும்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம், கடைசியில யாரோ டிரைவர் போலிசுல சொல்லி அவர் இவங்ககிட்ட இருந்த விலாசத்தை பார்த்துட்டு ஒரு ஆட்டோவைப்பிடிச்சு இங்க கொண்டாந்து விட்டுட்டு வார்ன் பண்ணிடுப் போறாரு. நம்ம அசோசியேசன் செகரட்டரி  , தலைவர் ரெண்டு பேரும் வந்து  இந்த மாதிரி நான்சென்செல்லாம் எப்படி பிளாட்ல அலோவ் பண்றதுன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு போறாங்க ‘’ என்றான்.

என்னைப் பார்த்ததும் அம்மா அழ ஆரம்பித்தாள். ‘’ என்னை ஊருல கொண்டு போய் விட்டுரு ‘’ என்றாள். ஆனால் என் மனைவியும் குழந்தைகளும் அம்மாவை ஒரு ஹோமில் சேர்த்து விடச் சொன்னார்கள். எங்களுடைய கம்பெனியில் இருந்து நாங்கள் மலர் முதியோர் இல்லத்துக்கு சிஎஸ்ஆர் பண்ட் அதிகம் தருவதால் அவர்கள் அம்மாவை எளிதாக சேர்த்துக் கொள்வார்கள். பணம் ஏதும் தரத் தேவையில்லை என்றாள் .நான் அப்பொழுதே இரண்டு மூன்று ஹோம்களுக்கு போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்து விட்டேன். அம்மாவை ஒரு வார்த்தை கேட்கவில்லை.

சரியாக நான்காவது நாள அம்மாவுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்ப சொன்னோம். அம்மா ஊருக்குத்தான் கூப்பிட்டு போகிறார்கள் என்று சற்று மலர்ச்சியுடன் கிளம்பி வந்தாள்.  நகரத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தள்ளியிருந்த மலர் முதியோர் இல்லத்தில் அம்மாவை விட்டு வந்து விட்டேன். 

இரண்டு வாரத்தில் ஹோமில் இருந்து போன் வந்து விட்டது.

நான் போய் பார்த்த போது அம்மா பிரம்மை பிடித்தவள் போல இருந்தாள். என்னை அடையாளம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இறுக்கமாக என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்து கிளம்பும் வரை விடவேயில்லை. இடையில் என்ன நடந்தது அம்மா ஏன் இப்படி சித்தப்பிரமை பிடித்தவள் போல் ஆகி விட்டாள் என்று எனக்குப் புரியவேயில்லை. ‘

‘’ சார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க சித்த சுவாதீனம் இல்லாத மாதிரி நடந்துக்கிறாங்க.  எது சொன்னாலும் கேட்குறதில்லை. இந்த ஹோம்ல நடை முறையில இருக்கிற எந்த ரூல்ஸையும் மதிக்கிறதில்லை. ​​​​​ இவங்க இங்க இருக்கிறதுனால மற்ற முதியவங்க எல்லாம் மனசளவில ரொம்பவே  அப்செட் .ஆயிட்டாங்க’’ என்றார்கள்.

அம்மாவை மறுபடியும் பிளாட்டிற்குள் அழைத்து வந்த போது யாருக்கும் பிடிக்கவில்லை.  அம்மா ஒரு மரப்பாச்சி பொம்மை போல சவரில் சாய்ந்து கொண்டு வெறித்தவண்ணமேயிருந்தாள். சரி தான் ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடலாம் என்றால் கூட இப்படி சித்த சுவாதீனம் இல்லாமல் இருப்பவளை கொண்டு போய் ஊரில் விட்டால்  அங்கே உள்ளவர்கள் எங்களை  தவறாக நினைத்துக் கொள்வார்களே என்ற கவலை வேறு எங்களுக்கு இருந்தது.

அலுவலகத்தில் நண்பர் ஒருவர் தான் சொன்னார்.

‘’ இந்த மாதிரி கேசுக்கு வேற வழியே இல்லை. சார்  இராமநாதபுரம் கீழக்கரை தர்க்காவுக்குப் போய் ட்ரீட்மெண்ட் எடுக்கச் சொல்லுங்க அங்க அட்மிட் பண்ணிட்டா அவங்களே எல்லாம் பார்த்துக்குவாங்க ‘’ 

அந்த சனிக்கிழமையே வீட்டில் முடிவெடுத்து நானும் அம்மாவும் சென்னையிலிருந்து  இராமேஸ்வரம் ரயில் ஏறிவிட்டோம். அவளிடம்  இராமேஸ்வரம்  கோவிலுக்குப்போயிட்டு வரலாம் என்று சொல்லிட்டு நேரா இங்க  அழைச்சுட்டு வந்துட்டேன். வேறவழி தெரியலை எனக்கு 

மேலும் தொடருவேன் என்று  முதியவர் என்னைப்பார்த்தபடியே இருந்தார். அவருக்கு ஒரு வேளை இது சுவாரஸ்யம் தருவதாக இருக்கிறதோ என்னவோ?

சார் நாங்க  இங்க வந்த நேரம் இருட்டிப்போச்சு .அதனால வஹாப் பாய் அந்த மரத்துக்கு கீழ இருக்குற  ஷெட்ல தங்கிக்கோங்க காலையில விபரமா பேசிக்கலாம்னு சொன்னார் ‘’.

‘ சரி தான் .’’ 

எங்களுக்கும் பயணக்களைப்பு நல்ல பசிவேறு  சரின்னு  .முன்னால் இருந்த கடையில் டிபன் வாங்கி வந்து அம்மாவுக்கு கொடுத்தேன். சரியாக சாப்பிடாமல் . என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தாள்..பிறகு ‘’  என்னிய நம்ம ஊருல கொண்டு போய் விட்டுரு ‘’ என்றாள் 

சிகிச்சைக்குத்தான் வந்திருக்கிறோம் நானளைக்கே  ஊருக்கு கிளம்பிருவோம் நீ தூங்கும்மா ‘’ என்றேன் .

பிரயாணக் களைப்பில் நானும் மணலிலேயே துண்டை விரிச்சு  கண் அசந்துட்டேன். காலையில் எழுந்து பார்க்குறேன். அம்மா படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. நானும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து  பார்த்திட்டு இங்க அங்கனு தேட ஆரம்பிச்சேன். ஆனா ஒரு நாள் முழுவதும் இந்த ஏரியா எல்லாம் தேடியும் எங்கேயுமே அம்மா கிடைக்கலை.  

சரின்னு இங்கேயிருந்து இராமேஸ்வரம் கோயிலுக்குப் போய் அங்க கோயில் பக்கம் கடல்  பக்கம் மற்றும்  சுற்றுலாத்தலங்கள்னு ஒரு இடம் விடாம இரண்டு நாள்  தேடியலைஞ்சேன்… சில பேர் இராமேஸ்வரம் கன்னியாகுமரி ரயில்ல ஏறி கன்னியாகுமரி போனாலும் போயிருக்கலாம்  என்றார்கள் .கன்னியகுமாரிக்கும் போய் ஒரு நாள் முழுவதும் தேடிப் பார்த்தேன். எங்கேயுமே கண்டுபிடிக்க முடியலை ‘

கடைசில  காவல் நிலையத்துல போய் ஒரு  கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு  மறுபடியும் நேரா இங்கயே வந்து வஹாப் பாய்கிட்ட  தகவலை சொன்னேன் .

அவர் தான் ‘’ சார் இந்த மாதிரி மனநல குறைபாடு உள்ளவங்க எங்கெங்கேயோ  சுத்தியடிச்சு கடைசில இங்க வந்து தான் சேருவாங்க நீங்க அந்தம்மாவோட போட்டோவும் உங்க போன் நம்பரும்  கொடுத்துட்டு போங்க அவங்கள  பார்த்த உடனே உங்களுக்கு  தகவல் தெரிவிக்கிறோம் அப்டின்னு சொல்லி அனுப்பினார் அதுலயிருந்து அப்பப்ப இங்க வந்து பார்த்துகிட்டேதான் இருக்கிறேன் என்றே.ன. 

அப்படியா  சார் உண்மையிலே உங்க அக்கறை என்னை ஆச்சரியப்படுத்துது ?  

இந்த அஞ்சு வருஷமும் இப்படித்தான் நடக்குது சார் 

‘ .நான் அல்லாஹ்கிட்ட அந்தம்மாவை சீக்கிரம் உங்க கண்ணுல காட்டனும்னு வேண்டிக்கிறேன்’’  . என்றார்

‘’ உங்க வார்த்தைகள் பலிக்கட்டும் நன்றி சார் வர்றேன் ‘’ என்ற படி  கிளம்பி வெளியில் வந்தேன். மனம் வெறுமையாக இருந்தது. 

சிறிது தூரம் நடந்திருப்பேன் ‘’ .சார் சார்  ‘ என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். ஒரு பதினைந்து  வயதுப்பையன் மூச்சிரைக்க ஓடிவந்து  கொண்டிருந்தான்

என்னப்பா ? என்றேன்

‘’ சார் பாய் மறுபடியும் உங்களை உள்ளே கூப்பிடறார் ‘’ என்றான் 

என்னவென்று தெரியாமல் அவனைப்பின் தொடர்ந்தேன். ஒரு வேளை புகைப்படத்தை  மறந்து வைத்துவிட்டு வந்து விட்டேனோ என்னவோ என்று என் பையில் தேடிப்பார்த்தேன். அதற்குள் அவரின் அறைக்கு வந்து விட்டோம்.

‘’ சார் வாங்க உக்காருங்க ‘ என்றார் பாய்.  நான் புரியாமல் 

‘’ மறுபடியும் உங்களை அழைச்சுட்டு வந்ததுக்கு மன்னிக்கனும் இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்ககிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்கனும்னு தான் உங்களைக்கூப்பிட்டு வரச்சொன்னேன் ‘’ 

‘’ சொல்லுங்க சார் ‘’ என்றேன்

‘’ அந்தம்மாவை ஒரு வேளை நீங்க மறுபடி பார்க்க நேர்ந்தா என்ன கேட்பீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?  சார் ‘’ 

நான் சற்று திகைத்து  ‘’ ஏன் சார்  இதை கேட்கறீங்க ? ‘’  என்றேன் 

‘’ சும்மா ஒரு ஆர்வம் தான் சொல்லுங்க சார் ‘’ என்றார்

‘’ அம்மாவைப் பார்த்தா , ஏம்மா என்னை இப்படி தவிக்கவிட்டுட்டு ராத்திரியோட ராத்திரியா காணாமப்போயிட்ட ?  நான் உனக்கு அப்படி என்ன கொடுமை  செஞ்சேன்னு  ?  கேட்பேன் சார் ‘’ 

‘’ நியாயம் தான்  சார்  ஒரு ஆர்வத்துலதான்  கேட்குறேன் இதுவே அந்தம்மா ஒரு வேளை உங்களைப் பார்த்துட்டாங்கன்னா உங்களை என்னா கேட்பாங்கன்னு                நீங்க நினைக்கிறீங்க ,? 

எதுவும் சொல்லத்தோன்றாமல்  திகைத்துப்போய் நின்றேன்.

‘’ என்ன சார் அப்பிடி திகைச்சுப் போயி நிக்கிறீங்க ? அவங்க என்ன கேட்பாங்கன்னு  அவங்க  வாயாலேயே கேட்டிருவோமா ? ‘’ என்றவர் உள்ளே  கதவுப் பக்கம் திரும்பி ‘’ அம்மா இங்க  கொஞ்சம்.  வந்துட்டுப்போங்களேன் ‘’ என்றார்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே  சற்று முன்னர் எனக்கு தேநீர் கொடுத்து விட்டுப்போன அந்த  கருப்பு பர்தா அணிந்த பெண் மீண்டும் எங்களுக்கு முன்னே வந்து தோன்றினாள்.. . 

நான் சர்வமும் அதிர்ந்து உறைந்து கொண்டிருக்கும் போதே நடுங்கும் அந்தக் கரங்கள் தன் முகத்திரையை மெல்ல விலக்கின. 

‘ அம்மா ‘’ என்று அலறிவிட்டேன். 

 அம்மா நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு  வார்த்தையாக என்னைப் பார்த்து கேட்டாள் 

‘’ ஏம்பா என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு 

 ராத்திரியோட ராத்திரியா காணாமப் போயிட்ட?

One Comment on “தங்கேஸ்/காணாமல்  போனவர்கள்”

Comments are closed.