பி. ஆர்.கிரிஜா/நதிக்கரை

நதிக்கரை ஓரம் ஒரு அழகான குடிசை. தினமும் நரேஷ் தன்னுடைய கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு அந்த நதியைக் கடந்துதான் செல்ல வேண்டும். வழக்கம் போல் தோணி
ரெடியாக இருக்கும். ஆனால் அன்று அதை ஓட்டும் பழனிச்சாமியைக் காணவில்லை. அந்த குடிசைதான் அவரது வசிப்பிடம். அன்று
அவரைக் காணாமல் நரேஷ் தவித்துப் போய் விட்டான். இன்று பள்ளியில் முக்கியமான தேர்வு . போகவில்லை என்றால் வேண்டும் என்றே விடுப்பு எடுத்ததாக ஆசிரியர் தண்டனை கொடுப்பார். அவனுக்கு அழுகையாக வந்தது. நொந்து போய் அந்தக் கரையிலேயே அமர்ந்து விட்டான். சுற்று முற்றும் பார்த்தான். இப்போதுதான் புதிதாகப் பார்ப்பது போல எல்லாவற்றையும் பார்த்தான்.
ஆஹா, என்ன அழகு, வரிசையாக தென்னை மரங்கள், அழகான பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதி, கரையில் துடுப்புடன் படகு. வரப்பின் விளிம்பு முழுவதும் கம்பளம்
விரித்தாற் போல் புல் வெளி. நம் கிராமம் இவ்வளவு அழகா ! இத்தனை நாள் இயந்திர கதியில் பள்ளி சென்று வந்துள்ளேன். மனதில் ஒரே பிரமிப்பு. உடனே
நோட்டுப் புத்தகத்தை எடுத்து வரைய ஆரம்பித்தான். அவன் நன்கு வரைபவன் ஆதலால், அங்குள்ள அனைத்தையும் அழகாக வரைந்து முடித்தான். அதற்குள் பழனிச்சாமியும் வந்து விட்டார். உடனே படகில் ஏறி பள்ளி வந்தடைந்தான் . மதியம் தான் தேர்வு என்றார்கள். அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான்
வரைந்ததை டிராயிங் மாஸ்டரிடம் கொடுத்தான்.
மதியம் நன்கு தேர்வு எழுதி விட்டு மாலை வீடு வந்து சேர்ந்தான்.
இரவு அவன் அப்பாவின் கை பேசியில் ஒரு குறுஞ்செய்தி. நரேஷுக்கு டிராயிங் போட்டியில் முதல் பரிசு என்று.
பழனிச்சாமி தாமதமாக வந்ததால்தான் தனக்கு முதல் பரிசு என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மன நிறைவோடு அடுத்த நாள் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தான் நரேஷ்.


14/10/2023