எழுதுவது எப்படி?/லா.ச.ராமமிருதம்

தொகுப்பாசிரியர் : மகரன்

லால்குடியில் 1916இல் பிறந்த லா.ச. ராமாமிர்தம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை உலகின் ஜாம்பவானாக இன்று விளங்கும் லா.ச.ரா, தமக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதி வருபவர். ‘ஜனனி’ ‘இதழ்கள’ ‘பச்சைக் கனவு’ ‘கங்கா’ ‘அஞ்சலி’ ‘அலைகள்’ ‘தயா’ ‘த்வனி’ ‘மீனோட்டம் ‘ ‘உத்தராயணம்’ இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். ‘புத்ர’ இவருடைய முதல் நாவல். ‘அபிதா’ ‘கல் சிரிக்கிறது’ இவருடைய மற்றைய நாவல்கள். இவருடைய சில சிறுகதைகள் டாக்டர் ஸ்வலபில் அவர்களால் செக்கோஸ் லோவேகிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கதைகள் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தம்முடைய இலக்கிய வாழ்க்கை அனுபவங்களைச் சுயசரிதமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஏன், அதற்கென்ன, எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.

தி ஜ ர சொல்வார்: ‘தெருவில் ஒரு தரம் நடந்து விட்டு வா, சிறுகதைக்கு விஷயம் கிடைத்தாயிற்று.’

அவர் கூற்று முற்றிலும் உண்மை.

ஆனால் ‘எப்படி எழுதுவது?’ பற்றி அவர் அவ்வளவாய் அனாயாசமாகப் பேசிவிடவில்லை. பலே ஆள். அவருக்குத் தெரியும்.

ஐயா. இதோ பாருங்கள் முதலில் இது பற்றி பேச எனக்கு தகுதி பற்றி சொல்லி விடுகிறேன். எட்டு வருட காலமாக இந்தத் துறையில் ஈடுபாடு. என்னைச் சிறுகதை ‘பிதாமகர்’ ‘ஜாம்பவான்’ என்று எழுத்துப்பூர்வமாக பத்திரிகைகள் குறிப்பிட்டிருக்கின்றன. எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘மார்க்கண்டன்’ என்று அழைக்கக்கூடாதா ? ஏனெனில், எழுத எழுத மெருகு. புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கும் பாடப்பாட ராகம்.

எழுத்துக்கலையின் ஒரு பிரிவு, சிறுகதை.அந்த அமெரிக்காவில் தான் துள்ளும் குட்டியிலிருந்து கடாக்கன்றாக செழித்தது என்று பொதுவாக நோகாமல் சொல்லிக்கொள்ளும் ஐதீகமாக இருந்த காலம் உண்டு. சிறுகதை மன்னர்கள் ஹெமிங்வே, ஸாரோயன், ஸாலிங்கர்,
ஓ ஹென்ரி, அப்டைக் – புதிது புதிதாக அங்கும் பெயர்கள் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.

நம் எழுத்தாளர்களிடையே அவர்களுக்குப் பயன்படக்கூடியதாக ஒரு காலத்தில் மாம், மாப்பஸாம் என்று அடிபட்டுக் கொண்டிருந்தன. ஸாத்ரே, காமு, கொஞ்சம் கூர் மூக்கு படைத்தவர் காப்கா, செகாவ் என்று ஜெபித்தது உண்டு.

பெயர்களை உதிர்த்து கொண்டே போகலாம் ஒருநாமச்செண்டே கட்டலாம்.

ஆனால் யார் யார் எம்மட்டில், அவர்கள் குறிப்பிட்ட எழுத்துக்களைப் படித்து இருப்பார்கள் என்பது எந்த நாளிலும் அவரவர் ரகசியம்.

எங்கள் நாளில் சிட்டுகள் நாங்கள் இம்மாதிரி பெயர்ச் சீட்டு விளையாடினால், “நீ அவர்களைப் படித்திருக்கிறாயா? எங்கே, இந்த இடத்தில் அவன் என்ன சொல்லி இருக்கிறான், நீ சொல்? என்று எங்களைப் பல்லைப் பிடித்துப் பார்க்க ஆட்கள் இருந்தார்கள். நாங்களும் அவர்கள் காட்டிய வழியில் நடந்தோம். அந்தந்தச் சமயத்துக்கு, இதற்குப் பின் இது என்று அவர்கள் சிபாரிசு செய்த எழுத்துக்களைப் படித்தோம்.

ஒரு தினுசில் இதெல்லாம் வீண் பேச்சு. (Harold Robins உம், James Hadlley Chase உம் நம் வாலிபத்தையும் அதற்கேற்றபடி எழுதும் எழுத்தாளர்களையும் ஆட்சிபுரியும் இந்நாளில், புதுவெள்ளம் என்கிற பெயரில் எதற்கும் ஒரு முறை உண்டு. (கனவும் கற்றுமற) என்கிற சாங்கியமே போய்விட்டது. ஆகவே எதை வேணுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற அவசரம் வந்துவிட்ட பிறகு, எது வேணுமானாலும் என்பதற்கு எல்லை இப்போது ஆகாயம் ந்தான், முடிந்தால் ஆகாயம் தாண்டி. அவசரம் என்பது ஒரு தீ நாக்கு. அதற்குத் தீனி கொடுத்து மாளாது. அதுவும் இப்போது
எழுத்து ஒரு தொழிற்சாலை ஆகிவிட்டபின், எல்லாம் அசெம்பிளி லைன் விவகாரந்தான். எத்தோடு எதைச் சேர்த்தாலும் சில பேரின் ஏக முடிச்சுக்கு லட்டுவாகக் காத்திருக்கும் வாசக மக்கட்குப் பத்திரிகைகள் புகட்டுவது தான். அன்றையப்படி. (கோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும்) மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு. “பாருங்கள் இது ஒரு பிறவி!”

அதுவும் பத்திரிகையில் வைத்ததுதான் இப்போது சட்டம். “ஆனந்தவிகடன் சைசுக்கு மூன்று பக்கங்களுக்கு மேல் போகாமல்” என்று அளவு முதற்கொண்டே நிர்ணயித்து விடுகிறார்கள். திட்டம் மீறிப்போனால், கத்திரிக்கோல் பார்த்துக் கொள்கிறது. தையல் கடை கத்திரிக்கோல், அவர்களுக்குப் பக்கப் பொருத்தந்தான் முக்கியம். விஷயம் அதற்குள் அடங்கினால் சரி ; அடங்காட்டிப் போனாலும் சரி.

இந்த சூழ்நிலையில் சிறுகதை எழுதுவது எப்படி எனும் கேள்வியின் குறிக்கோள் மாறாட்டம் காண்கிறது. ஆம், எழுதுவதே எப்படி?

(1987ல் எழுதிய கட்டுரை)

(இன்னும் வரும்)