ஜெ.பாஸ்கரன்/மேலும் சில படங்கள்!

கனடாவில் குளிர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது – மதிய நேரத்தில் தூங்கினால், இரவுத் தூக்கம் கெடுகிறது என்று ஒரு நல்ல காரணம் இருப்பதாலும், டி.வி யைத் திறந்தால் படங்களின் முன்னோட்டம் கிடைப்பதாலும், விட்டுப்போன, சில படங்களைப் பார்த்தேன்…. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டி…….

Knives out.

2019 ல் வெளிவந்த சஸ்பென்ஸ் த்ரில்லர். புகழ்பெற்ற மர்ம நாவல் எழுத்தாளர்,ஆர்லன் த்ராம்பே, தனது 85 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாட, உறவினர்களைத் தன் பங்களாவுக்கு அழைகிறார். அவர்கள் ஒவ்வொருவரும் அவரிடம் ஏதாவது ஒரு உதவியைப் பெற்றுவருபவர்கள். அன்று ஆர்லன் கழுத்தில் அறுபட்டு இறக்கிறார். தற்கொலை என்று போலீஸ் முடிவு செய்கிறது. ஆனால் டிடெக்டிவ் ப்ளாங்க், அவர்கள் உறவினர்களில் யாருக்கோ தொடர்பிருக்கலாம் என சந்தேகப் பட்டு விசாரிக்கிறார். ஆர்லனின் நர்ஸ் மார்டா அவருக்குத் தவறுதலாக அதிக அளவு மார்ஃபின் (தூக்க மருந்து) செலுத்தியது தெரிய வருகிறது. உறவினர் மீது வெறுபிலிருந்த ஆர்லன், தன் நர்சைக் காப்பாற்ற அவளை வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு, தானே கழுத்தை அறுத்துக்கொண்டு இறக்கிறார். இதன் பின்னணியில் விசாரணை – ஆர்லன் மீது வெறுப்பு கொள்ள, உறவினர் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. ஆர்லனின் வாய்பேசாத அம்மா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆர்லன் தன் சொத்துக்கள் அனைத்தையும் நர்ஸ் மார்டாவின் பேரில் எழுதிவைத்திருக்கிறார். ஆர்லனின் பேரன் ரான்ஸம், சொத்துவிபரமாக அவருடன் சர்ச்சை செய்தது தெரிய வருகிறது. உயில் விவகாரம் முன்னமேயே தெரியவர, நர்ஸ் மார்டாவின் மருந்துகளை மாற்றி வைத்து, பிரைவேட் டிடெக்டிவ் ப்ளாங்க் கை அவருக்கு யாரென்றுதெரியாமலே (anonymouse) ஆர்லின் கொலையை விசாரிக்க வைத்து, மார்டாவை குற்றவாளியாக்க நினைக்கிறான். சொத்து யாருக்குக் கிடைத்தது? மார்டா உண்மையிலேயே அதிக அளவு மருந்தை கொடுத்தாளா? ரான்ஸம் சூழ்ச்சி எப்படித் தெரிந்தது?

அகதா கிரிஸ்டி நாவலைப் போல் திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்த சுவாரஸ்யமான படம். ஆர்லன் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிந்த பிறகும், படம் தொய்வின்றி செல்கிறது – டைரக்‌ஷன் ரியான் ஜான்ஸன்.

Neeyat – ஹிந்தி

முகநூலில் விமர்சனம் படித்து, பார்த்த படம். கிட்டத்தட்ட knives out போன்ற கதைக்களம். பில்லியனர் ஆசிஷ் கபூர் (AK) 20 ஆயிரம் கோடி நஷ்டத்தால், 10,000 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், ஸ்காட்லாந்தில் மறைந்திருக்கிறார். அவரது பிறந்தநாள் பார்டிக்கு வரும் அவர் மகன் (போதைப் பொருளுக்கு அடிமை), அவனுடைய காதலி, ஏகே வின் பழைய நடிகைக் காதலி (இப்போது ஒரு டாக்டரின் மனைவி), ஏகே யின் பிஏ, அவருடைய தெராபிஸ்ட், இப்போதைய காதலி, அவளுடைய கஸின், ஒரு சிபிஐ அதிகாரி (வித்யா பாலன்) என ஏராளமான பாத்திரங்கள் – மகனுடன் ஒரு சண்டை ஏற்பட, மலை மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார் ஏகே – சிபிஐ அதிகாரி விசாரிக்கத் தொடங்க, கொலைகள் (எல்லோருக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கிறது), திருப்பங்கள். ஏகே ஏன் தற்கொலை செய்து கொண்டார்? மற்றவர்களின் நோக்கம் என்ன? சிபிஐ அதிகாரி கண்டுபிடித்தாரா?

எழுதி இயக்கியவர் அனு மேனோன். வித்யா பாலன் பாத்திரங்களுடனும், பார்வையாளர்களுடனும் குழம்பி, வேடிக்கைப் பார்க்கிறார். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். எதிர்பார்த்த ‘த்ரில்’ இல்லை. வித்யா பாலன் சரியான கதைகளைத் தேர்வு செய்யவேண்டும்!

Intern

ரிடையர் ஆன பிறகு, ஒரு கம்பெனியில் சேர்கிறார் 70 வயது பென் விடாகர் – அதுவும் கம்பெனியின் முதலாளியிடமே டிரைனிங்! பென் ஒரு சுவாரஸ்யமான மனிதர் – பாரம்பரியங்களை விடாமல், புதியவைகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பவர். கம்பெனியில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். முதலாளி ஜூல்ஸ் ஆஸ்டின் அலுப்பில்லாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பெண்மணி. ஒரு பெண் குழந்தக்குத் தாய். பென் தன் புத்திகூர்மையாலும், அன்பினாலும், புன்னகையாலும் ஒரு தந்தையைப்போல் ஜூல்ஸுக்கு எப்படி உதவுகிறார் என்பதே கதை. தவறவிடக்கூடாத ‘ஃபீல் குட்’ மூவி. ராபர்ட் டி நிரோ பென் ஆகவே வாழ்ந்திருப்பார்! டைரக்‌ஷன் – நான்சி மேயர்ஸ்.

Bucket list

ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்துவிடலாம் என்ற நிலையில் இரண்டு கேன்சர் பேஷண்ட்ஸ்! குணத்திலும், வாழ்க்கை நோக்கிலும் நேர் எதிர் கொள்கை உடையவர்கள். ஒருவர் கார் மெகானிக், மற்றவர் அந்த மருத்துவ மனையின் ஓனர். ஒரே அறையில் இருக்கும்போது நண்பர்களாகி, எப்படி வழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதை மிக அழகான கவிதையாகச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லும் செய்தி; “தனிமை கொடுமையானது; மன்னித்து, மறந்து எல்லோருடனும் அன்பு பொங்க வாழுங்கள். வாழும் நாட்கள் குறைவானவை”. ஜேக் நிகல்சன், மார்கன் ஃப்ரீமன் இருவரின் நடிப்பு extraordinary! டைரக்‌ஷன் ராப் ரெய்னர்.

Wonder

பிறக்கும்போதே அவலக்‌ஷணமாகப் பிறக்கும் குழந்தை – ஏகப்பட்ட ஆப்பரேஷன்களுடன் ஓரளவுக்கு முகமாகத் தெரியும். முகத்தை மூடிய ஹெல்மெட்டுடன் வலம் வரும் குழந்தை, பள்ளிக்கூடம் சென்று எப்படி மிகச் சிறந்த குழந்தை என விருது பெறுகிறது என்பதே கதை. குழந்தைகளின் மனோபாவம், அவர்கள் நட்பும், வருத்தங்களும், பெற்றோரின் கடமை, அன்பு என சிறப்பாகப் பின்னப்பட்டுள்ள கதை (நாவல் அவசியம் வாசிக்க வேண்டும்!). மனது நெகிழ்ச்சியுடன் பார்த்த அருமையான படம். ஜேகப் ட்ரெம்ப்ளே, ஜூலியா ராபர்ட்ஸ் (அம்மாவாக சிறப்பான நடிப்பு), ஓவென் வில்சன், இசபெல விசோவிக் என பல நட்சத்திரங்கள் – டைரக்‌ஷன்: ஸ்டீபன் சபோஸ்கி.

திருச்சிற்றம்பலம்

தனுஷுக்கான கதை – நன்றாகச் செய்திருக்கிறார். அவரை மிஞ்சிவிடுகிறார் நித்யா மேனன்! எழுதி இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவஹர். ஃபீல் குட் மூவி – பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையுடன் ஒட்டவில்லை. பாரதிராஜா தாத்தாவாக ஓகே! எதிர்பார்த்த கதையோட்டமும், முடிவும்! (2022 ல் வந்த படத்துக்கு இப்போ என்னதுக்கு இந்த விமர்சனம் என்பவர்கள் கடந்து செல்லவும்!)

ஜானே ஜான் (ஹிந்தி).

கொடுமைக்காரக் கணவனை எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் கொன்றுவிடுகின்ற மனைவியும், மகளும்- இறந்தவரும் ஒரு போலீஸ் அதிகாரி! பக்கத்து வீட்டு அதிபுத்திசாலியான ஒரு கணக்கு வாத்தியார் – நரேன் – இவர்களுக்கு உதவுகிறார். விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டர் கரண், நரேனின் நண்பர்! அவரால் கண்டுபிடிக்க முடியாதபடி, நரேன் பல உத்திகளை செய்கிறார். கரண் கண்டுபிடித்தாரா? நரேன் ஏன் இவர்களுக்கு உதவினார்? சுவாரஸ்யமான த்ரில்லர். பார்க்கலாம்! டைரக்‌ஷன் சுஜோய் கோஷ். கரீனா கபூர் கான், ஜெய்தீப் அலாவத், விஜய் வர்மா மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.

Khufiya – (ஹிந்தி)

கார்கில் போருக்குப் பின் நடக்கும் கதை. நமது பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டுக்கு வெளியிடும் ஒரு ‘ரா’ ஏஜென்சி நபர்; அவரைக் கண்டுபிடிக்க வரும் இந்திய ஒற்றர் படை, அதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிஷ்ணா மெஹரா (தபு) அவரது காதல் மற்றும் நாட்டுப்பற்று என விறுவிறுப்பான திரைக்கதை. ஐஎஸை க்கு வேலை செய்யும் ஹீனா, பங்களாதேஷ் ராணுவ மந்திரியால் கொல்லப்படுவதிலிருந்து தொடங்கி, கடைசீ ஃப்ரேம் வரை தொய்வில்லாமல் சொல்லப்படுகிறது. பார்க்கலாம்.
டைரக்‌ஷன்: விஷால் பரத்வாஜ். (Escape to nowhere – அமர் பூஷன் நாவலைத் தழுவியது).

ஐந்தரை வாரத்தில் பார்த்த படங்கள் (இரண்டு மூன்று படங்கள் விட்டுப்போயிருக்கலாம்!) பற்றிய ஒரு பருந்துப்பார்வை இது! பல படங்களைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். நான்கைந்து வரிகளில் எழுதிப்பார்க்கலாம் என தோன்றியதின் விளைவு!

2 Comments on “ஜெ.பாஸ்கரன்/மேலும் சில படங்கள்!”

  1. ‘ அருமையான விமர்சனங்கள் டாக்டர் சார். ‘ Intern ‘ படம் நானும் பார்த்திருக்கேன் சார்.நீங்கள் குறிப்பிட்டது போல் ‘Feel Good ‘ படம். சுறுசுறுப்பும் படபடப்புமாக, சாதிக்கத் துடிக்கும் நாயகியாக ஆன் ஹாத்வே வாழ்ந்திருப்பார். நிதானமும் கூர்மையுமாக அவளுக்கு உதவும் கதாபாத்திரமாக ராபர்ட் டீ நீரோ வாழ்ந்திருப்பார்.

    சுதந்திர மனப்பான்மையோடு தன்னைச் சேர்ந்தவர்க்கும் உதவி , தானும் ஒரு தொழில் முனைவராகச் சாதிக்கத் தயாராக விரும்பும் இளம் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப சங்கடங்களையும் அலுவலக சங்கடங்களையும் சித்தரிக்கும் ஒரு ஆதர்ச பெண் கதாபாத்திரம் ஆன் ஹாத்வே . பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் . நமது கலை புதிது குழுவில் , இதன் ஒரு சீனைப் போட்டு சினி குவிஸ் நடத்தி இருக்கிறோம் .

Comments are closed.