
எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிசம்பர் மாதத்தில் சென்னைக்குச் சென்றிருந்தார். அவர் கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்றார்கள். போகும் சமயத்தில், ” செல்லம்மா வரும் போது உனக்கு தேவையான சாமான்களை வாங்கி வருகின்றேன்” என்று சொல்லிச் சென்றார். நானும் ஆவலாக அவர்கள் திரும்புவதை எதிர்நோக்கி இருந்தேன். 15 தினங்கள் கழித்து எட்டயபுரம் திரும்பினார். குதிரை வண்டிகள் 2 வாயிலில் வந்து நின்றன. ஒன்றிலிருந்து தாம் மட்டும் இறங்கினார். மற்றொரு வண்டியில் இருந்த மூட்டைகளை வண்டிக்காரன் உள்ளே கொண்டு வந்து வைத்தான். மூட்டைகள் கூடத்தை நிரப்பின. அத்தனையும் புடவைகள், வெள்ளிப் பாத்திரங்கள் முதலிவையாகயிருக்கலாமென்று மனம் பூரித்தேன். அவரது நண்பர்கள் முதலியார் வந்து விசாரித்துச் சென்றார்கள்.
நான் கடைசியாக மூட்டைகளை அவிழ்த்து பார்த்ததும் எனக்கு கோபம் தான் வந்தது. அத்தனையும் புத்தகங்கள்! புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், வள்ளுவர், வள்ளலார், கம்பராமாயணம், ஆங்கிலப் புஸ்தகங்கள் ! ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்திருந்தார். “இதென்ன இது! மகாராஜா எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டேன் . “ரூபாய் 500 கொடுத்தார்” என்று உரைத்துப் பனைப்பையை என்னிடம் நீட்டினார். திறந்து பார்த்தால் ரூ 15 தான் இருந்தது. இவருடன் சென்ற. இவருடைய நண்பர், வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு கையிலும். ரூ. 300 கொணர்ந்தாரா. எனது முகக்குறிப்பு உணர்ந்து, “செல்லம்மா ! நீ பணத்திற்கு ஆசைப்படாதே! அழியும் பொருளைக் கொடுத்து அழியாக் கல்விச் செல்வத்தைக் கொணர்ந்தேன். என் மனதிற்குப் புத்தகங்களே ஆனந்தம் கொடுக்கின்றன. எனக்கு சந்தோஷம் – உனக்குத் திருப்தி யில்லையா?” என்றார். “ரொம்ப திருப்தி” என்றேன்.
எட்டயபுரம் மகாராஜா போகும் இடங்களுக்கெல்லாம் இவரையும் அழைத்துச் செல்வார். கழுகுமலை , பாபவிநாசம் முதலிய இடங்களில் உற்சாகமாக நாட்களைக் கழிப்பார்கள். போஜனையும், காளிதாசனையும் கவிதைகள் – காவியங்களில் ரஸத்தை. அனுபவித்துக் கொண்டு பொழுது போக்குவார்கள்.
எட்டயபுரம் ஜமீனைச் சேர்ந்த கழுகு மலையில் மானேஜர் வெங்கட்டராயர். குத்துண்ட துயரமான சம்பவம் பாரதியாரை வருத்தத்திற்குள்ளாக்கியது. மற்றவர்களுக்கும், சாணர்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு உற்சவத்தின்போது தேரை விடக்கூடாதென்று மறித்தார்கள். வெங்கடராயர் பாவம். அப்போதுதான் சாப்பிட இலையில் உட்கார்ந்தவர் சாப்பிடாமல் கலகம் நடக்கும் இடத்தைப் பார்வையிடச் சென்றார். “இவன் யாரடா, பார்ப்பான், வழக்குத் தீர்க்க வந்தவன்!” என்று யாரோ கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். இதுதான் ” ஜாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும் ஒழிய வேண்டும்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் பாரதியார்.
காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டுக்கு அழைத்து வந்தவர் எட்டயபுரம் மகாராஜா தான். அந்த சமயத்தில் நடந்த டில்லி தர்பாருக்குச் சென்றி ருந்த மகாராஜா திரும்புகையில் காசியில் சிவமடத்தில் இறங்கினார். அங்கே பாரதியாரைச் சந்தித்துத் தம்முடன் எட்டையபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார். தாம் அடிமையாக ஓரிடத்தில் கட்டுப்பட்டிருக்க முடியாதென்று பாரதியார் சொன்னார். ” உன் னிஷ்டம் போல் இரு. என்னிடம் அடிமையாக இருக்க வேண்டாம். உனது செலவுகளையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்,” என்று மகாராஜா கூற, அதற்கு மேலும் அவரைத் தட்டிச் செல்ல மனமின்றி, ஊர் வந்து என்னையும் அழைத்துக் கொண்டு எட்டயபுரத்தில் குடித்தனம்
ஆரம்பித்தார்.
மகாராஜாவும் அவர் வாக்களித்தபடியே பாரதியாரே எவ்வளவோ சௌக்கியமாய் வைத்திருந்தார். என்ன இருந்த போதிலும் பாரதியாருக்கு எட்டயபுரத்தில் வாழ்வது ரசிக்கவில்லை. கூண்டில டைப்பட்ட பறவைபோல, பொது வாழ்விற்குச் செல்ல ஆவல் கொண்டார். கேவலம் ‘நரஸ்துதி’ செய்து வயிறு வளர்ப்பது பிடிக்காமல் ஒரு பாட்டு எழுதி நண்பர்களிடம் படித்துக் காண்பித்தார். பாரதியார் பால் பொறாமை கொண்ட நண்பர் ஒருவர் மகாராஜன் சென்று பாரதியார் மகாராஜாவை. தூஷித்து கவிதை கவி எழுதியதாக தெரிவித்தார் அதைக்கேட்டு மகாராஜாவுக்கும் சற்று கோபம் உண்டாயிற்று. பாரதியாருக்கு விஷயம் தெரிந்த போது எட்டயபுரத்தை விட்டுக் கிளம்ப ஒரு காரணம் ஏற்பட்டதென்று நினைத்து ஒருவாறு சந்தோஷம் அடைந்தார்.
(இன்னும் தொடரும்..)

2 Comments on “செல்லம்மாள் பாரதி/எட்டயபுரத்தில்”
Comments are closed.