செல்லம்மாள் பாரதி/11. நவ இந்தியா உதயம்

வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்யத்தின் அவசியம் இவைகள் தேசமெங்கும் அலையடிப்பதுபோல் முழங்க ஆரம்பித்தன. நம் மக்களின்
மனதில்கூட (அந்த அடக்குமுறை ஆளுகையினால்) அடிமை மனப்பான்மை தகர்க்கப்பட்டுவிட்டது. ‘விடுதலை’யில் பேராவல் எங்கு பார்த்தாலும் அதிகமாயிற்று. இந்த ஆவலுக்கு ஒரு புது பலம் கொடுத்துப் பொது ஜனங்கள் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி, தமது மின்சார சக்தி கொண்ட, இனிய, எளிய அமிழ்தத் தமிழ் மொழியில், ‘இன்னிசைத் தீம்பாடல்கள்’ மூலமாக வழிகாட்டியது பாரதியாரின் தனிப்பெருமை. “இந்த அரிய, உன்னதமான, உத்கிருஷ்டமான தெய்வப் பணி செய்வதற்கு ஒரு பத்திரிகை வேண்டும். அதில் நமது விருப்பங்களை உள்ளதுள்ளபடி வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப் பூரண உரிமை நமக்கு வேண்டும்” என்று அவர் உள்ளத்தில் அவா ஏற்பட்டது.


அவர் எட்டயபுரம் ராஜா அவர்களிடம் வேலை பார்க்க ஆரம்பித்து, “சுதேசமித்திரன்” பத்திரிகையில் வேலை பார்த்தது வரையில், ஒருவரது உத்தரவிற்குப் பணிந்தே நடக்க வேண்டியிருந்ததால், அது அவர் மனதை வேல் கொண்டு குத்துவதைப் போலத் துன்புறுத்தியது. தங்கு தடையின்றி அவருடைய அபிப்பிராயங்களைப் பொது ஜனங்களுக்கு அறிவிக்க முடியவில்லை. இந்தத் துயரத்தையே மனதில் வைத்து, “என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்?” என்று பாடினார். தமது சுதந்திர ஆவலையும் – எஜமானர்களது அடிமை மோகத்தை யும் அவ்வண்ணமே குறிப்பிட்டார்.

கையிலோ பணம் கிடையாது. கிடைத்தாலும் நிற்காது. பத்திரிகை வெளியிட வேண்டுமென்ற ஆவல் மட்டுமே அபார மாயிருந்தது. காலமும் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. அவருக்காகவேதான் தோன்றிற்றோ என்னவோ தெரியாது, சென்னை திருவல்லிக்கேணியில் சில வைஷ்ணவ நண்பர்கள் ஒரு பத்திரிகை நிறுவ ஆவல் கொண்டு முயற்சி
செய்துவந்தனர்.

ஏற்கனவே ஆங்கிலத்தில் ‘பிரம்மவாதிகள்’ என்ற பத்திரிகையைத் திருவல்லிக்கேணியிலிருந்த ஸ்ரீ.ந.திருமலாச்சாரியார் நன்றாக நடத்திக் கொண்டிருந்தார். அது மத சம்பந்தமான பத்திரிகைதான். அதன் சொந்தக்காரர் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள். அவ்வமயம் அரசியலுணர்ச்சியை ஜனங்களுக்குப் புகட்டுவதற்கு அந்தப் பத்திரிகை பிரயோஜனமில்லையென்று ஸ்ரீ திருமலாச்சாரியார் யோசித்து, ‘ஆங்கில மோகம்’ தலைவிரித்தாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் தமிழிலேயே ஒரு உயர்ந்த பத்திரிகை நடத்த வேண்டும் என்று, அதற்கான அச்சு யந்திரம் முதலியவைகளைச் சேகரித்துக் கொண்டு ஒரு தகுந்த பத்திராசிரியரைத் தேட ஆரம்பித்தார்.

‘தேடப்போன மருந்து காலில் அகப்பட்டதுபோல’ப் பத்திரிகை நடத்துவதில் ஆர்வங்கொண்ட பாரதியார் வந்து சேர்ந்தார். பத்தராதிபரின் எல்லாப் பொறுப்புக்களும் பாரதியாரின் தலையிலேயே சுமந்தது. முழு மனதோடு பாரதியாரும் அதை ஏற்றார். அவருடைய எழுதுகோல், ‘தேசாவேசக்கனலை’ உதிர்க்க ஆரம்பித்தது. அவரது உயர்ந்த. எண்ணங்களையும், அக்காலத்தின் நாட்டின் நிலைமையையும் கண்ணாடி போல ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியது.

அவரது அகத்தின் ஆழத்திலிருந்து எழும் உணர்ச்சி வெள்ளத்தை விறுவிறுத்த வார்த்தைகள் மூலமாக ‘இந்தியா’ப் பத்திரிகை வெளியிட்டது. மனங்கொதித்து எழுதும் விஷயங்கள்கூட அவரது அபாரமான காந்தருவ சங்கீத இனிமை கொண்ட சொற்களாகத்தான் இருக்கும். அழுகையில் ஒரு தீரம்; வசவிலும் கூட ஒரு இனிமை.

1907-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் ‘இந்தியா’ப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. அப்பால் நடந்தவையெல்லாம், இடியும், புயலும், சுழற்காற்றும், சூறாவளியும் – ஊழிகாலத்துப் பிரளய மெனப்படும் யுக முடிவு என்று வர்ணிக்கின்றார்களோ, அது போன்றவைகளுந்தான்.

திருவல்லிக்கேணி கடற்கரையில் பிரசங்கங்கள் விபின சந்திரபாலர் வரவேற்பு — லாலா லஜிபதிராயரை நாடு கடத்தியது – சூரத் காங்கிரஸ் கலாட்டா – சிதம்பரம் பிள்ளை ராஜத்துவேஷ வழக்கு – ஆகிய இத்தனை காரியங்களும் பின்பு நடைபெற்றவென்று நினைக்கிறேன். இவை ஒவ்வொன்றிலும் பாரதியாருக்குப் பங்குண்டு. இராப்பகலாக எழுதித் தள்ளுவார். சின்னஞ்சிறு பாடல்கள் மூலமாக பண்டிதர்களிலிருந்து, பாமரர் வரை அறியும்படி அரிய தொண்டு புரிந்தார்.

இப்பொழுது திருவல்லிக்கேணி கடற்கரையில் நாம் எல்லோரும் சந்தோஷமாக உட்கார்ந்து நமது வித்வான்களின் சங்கீதத்தை ரஸிப்பதற்காக ‘ரேடியோ’ அமைத்திருக்கும் இடத்திலேதான் விபின சந்திரபாலரை அழைத்து வந்து பிரசங்கமாரி பொழியச் செய்தார். (திருவல்லிக்கேணி கடலுக்கு ஸ்ரீ வ.வெ.சு.அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரத்தைப்’ போல் பேசும் சக்தி இருந்தால் அன்றிலிருந்து இன்றுவரை கடற்கரை நிகழ்ச்சிகளை என்ன ரஸமாகக் கூறியிருக்கும்!)

பாரதியார் மிக மெலிந்த சரீரமுள்ளவர். இருந்தாலும், தமது தொழிலாற்றுவதில் சளைக்காமல் நிற்பார். இக்காலத்தில் எல்லோரும் மேடையேறிப் பிரசங்கம் புரிந்து வருகின்றார்கள். அந்தக் காலங்களில் மிகவும் வல்லவர்களென்று கியாதி படைத்தவர்கள்தான் பேசுவது வழக்கம். யார் பேசினாலும் பாரதி பேசாவிட்டால் சபையோருக்கு ருசி ஏற்படாது. பாட்டைக் கேளாமல் திரும்ப மாட்டார்கள். உணர்ச்சி மிகுதியினால் குரல் ஸ்தாயி மட்டுக்கு மிஞ்சிவிடும். அச்சமயம் சிம்ம கர்ஜனை செய்வார். சமுத்திர ராஜனும் நடுங்கிவிடுவான். அக்காலங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி வைக்கும் வழக்கம் கிடையாது. தமக்கு உடம்பு எவ்வளவுதான் அஸௌக்கியமாயிருந்தாலும் ஜனங்களைத் திருப்தி செய்வதற்காகப் பாடல்களைப் பாடுவார். குதிரையைப் போல உழைப்பார். பெரிய மிதவாதிகளுக்குக்கூட பாரதியாரின் தீவிரவாதத்தில் மனதிற்குள் நம்பிக்கைதான். அவரது வீர தீரப் பிரசங்கத்தைக் கேட்கவும் பாடல்களை ரஸிக்கவும் வந்து மறைவிலிருந்துகொண்டு கேட்பார்கள். இந்த நிகழ்ச்சிகளை ராஜத்ரோகமான தென்று அரசாங்கத்தார் நினைக்கலாயினர். பாபு விபினசந்திர பாலர் கல்கத்தா சென்றபிறகுங்கூட நமது சென்னைப் பொது மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் மனக்கிளர்ச்சி குறைந்து போக விடக்கூடாதென்று பாரதியார், ஸ்ரீ எதிராஜ சுரேந்திரநாத் ஆரியா, ஜி. சுப்பிரமணிய அய்யர் முதலியோர் இந்தக் கடற்கரை மகாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

செல்லம்மாள் பாரதி/எட்டயபுரத்தில் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)