டியூஷன் கிளாஸ்!/ஜெ.பாஸ்கரன்

என் பெயர் ஸ்டெல்லா.

எனக்கு பதினேழு வயது. அழகுதான், ஷாம்பூ போட்டதால் காற்றில் பறக்கும் முடி, கழுத்தில் சிலுவை, ஸ்லீவ்லஸ் உடை என மாடர்னாக இருப்பேன். நல்ல வளர்த்தி, யாரும் இரண்டு வயது கூட்டித்தான் சொல்வார்கள்! ப்ளஸ் டூ இந்த வருடம் எழுத வேண்டும். பள்ளிக்கூடத்தில் போன வருடமே எல்லாப் பாடங்களையும் முடித்து விட்டார்கள். இந்த வருடம் முழுவதும் டெஸ்டு, டெஸ்டு, ரிவிஷன் தான். வருடா வருடம் நுறு பர்சண்ட் ரிஸல்ட் வரணும்னு எங்க ஸ்கூல்ல டிரில் வாங்குவாங்க.

இருந்தாலும், மாத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி என ஸ்பெஷல் டியூஷன் கிளாஸுக்கு வேற போகணும். இங்கெ ஏதோ தனியா ஸ்பெஷல் அட்டென்ஷன் கிடைக்கும்னு ஒரு மாயை. அதெல்லாம் ஒண்ணுமில்ல, இங்கேயும் வகுப்புக்கு நாற்பது பேர் போல இருப்பாங்க!

கணக்கு டியூஷன் மட்டும் அதிகாலை ஆறு மணிக்கு. எங்க வீட்டிலேர்ந்து சைக்கிள்ளதான் போவேன். அப்பா வெளியூர்ல வேலை, அதனால அம்மாதான் கொண்டு விடுவாங்க. அப்பொதான் மாரிமுத்து வோட நட்பு கிடைச்சுது. அவன் வேற ஸ்கூல் , ஆனா மாத்ஸ் டியூஷனுக்கு ஆறு மணி கிளாஸுக்கு வருவான். வீடு அடுத்த தெருவிலேதான். அம்மாவுக்கும் வீட்டில வேலை இருக்கறதனாலெ, மாரிமுத்து துணையோட டியூஷன் போக ஆரம்பிச்சேன்.

மாரிமுத்து நல்லா படிப்பான். எல்லாத்துலேயும் செண்டம் எடுக்கணும்னு ஒரு வெறி அவனுக்கு. இது அவனே சொன்னதுதான். கருப்பா இருந்தாலும், களையான முகம், சுருள் சுருளான முடி, மரியாதையான நடத்தை, இதெல்லாம் நான் கவனிச்சது!

கிளாஸுக்குப் போகும்போது வீடு, சினிமா, ரிலேஷன்ஷிப், வாட்ஸ் ஆப் குப்பைகள், காஃபி ஷாப் அரட்டை என எல்லவற்றையும் பற்றிப் பேசுவோம். ஒருநாள், அவன் சைக்கிள் பஞ்சர். அவன் அப்பாவோட ஸ்கூட்டர்ல வந்தான். பாவம், எனக்காகக் கூடவே மெதுவா ஸ்கூட்டர் ஓட்டிக்கிட்டு வந்தான். அம்மா கூட ‘அவன் கூட ஸ்கூட்டர்லயே போயிருக்கலாமே’ என்று யதார்த்தமாகச் சொன்னாள். இன்னொரு நாள் அப்படி அவன் ஸ்கூட்டர்ல வந்த போது, கண்ணியமா, சீட்டப் பிடிச்சிக்கிட்டு, தள்ளி உட்கார்ந்து வந்தேன். காலைக் குளிர்க் காற்று ஸ்கூட்டர் வேகத்துக்கு ரொம்ப இதமா இருந்தது.

சிவா என் வகுப்புல படிக்கிற பையன். சுமாரா படிப்பான். அவனும் அந்த டியூஷன் கிளாஸுக்கு வருவான். நான் இப்படி மாரி கூட டியூஷனுக்கு வருவது அவனுக்குப் பிடிக்காது, என்ன இருந்தாலும் மாரி வேற ஸ்கூல் பையன் தானே! என்ன தோணிச்சோ அவனுக்கு, என் காது படவே என்னைக் கிண்டல் பண்ணுவான். ‘நம்ம பொண்ணுங்க நம்மகூட வரமாட்டாங்கடா. அந்த ஸ்கூல் பசங்கதான் அவங்களுக்கு பிடிக்கும். நம்மகிட்டயும் ஒரு ஸ்கூட்டர் இருந்தா வருவாங்க’. நான் இதெல்லாம் கண்டுக்காம போய்டுவேன். ‘டியூஷனுக்குக் கணக்குக் கத்துக்கத் தானே போறோம்’னு நெனப்பேன். மாரிகிட்ட இதைப் பற்றி நான் பேசவில்லை. தேவையில்லாத குழப்பம் எதுக்கு?

அம்மாகிட்ட சொன்னப்ப, அம்மாவும் வருத்தப்பட்டாங்க. ‘இந்தக் காலப் பசங்க ஏன் இப்படி இருக்காங்க?’ ன்னு விசனப்பட்டாங்க. “சரி, இனிமே நானே உன்னை டியூஷனுக்குக் கூட்டிட்டுப் போறேன்” னாங்க.

வகுப்புக்கு வெளியில் நண்பர்களோட நின்னுக்கிட்டு இருந்தான் சிவா. அம்மா நான் தடுத்தும் கேட்காம, சிவா கிட்ட போய், “ஏன் தம்பி இப்படியெல்லாம் பேசறீங்க? உங்களுக்கு அக்கா, தங்கச்சியெல்லாம் கிடையாதா?” என்று நேராகவே கேட்டுட்டாங்க.

இதை எதிர்பார்க்காத சிவா பயந்துபோய், கொஞ்சம் தயங்கினான். “இல்லே ஆன்டி, அது இல்லே ஆன்டி….. ம் . நான் ஒண்ணு சொல்லலை ஆன்டி..” பம்மினான் சிவா. அம்மா ஒன்றும் பதில் சொல்லாமல் வந்துட்டாங்க.

மாரிமுத்துவுக்கும் சிவா மேல கோபம் வந்தது. ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லவில்லை. வாழ்க்கையில் கல்விதான் முக்கியம் என்பதில் மிகத் தெளிவாக இருந்தான் மாரி. சிவாவுடன் பேசுவதைக்கூட நிறுத்தி விட்டான்.

இது நடந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. இப்பொ என் பொண்ணு, ரேஷ்மி அதிகாலை ஸ்பெஷல் கிளாஸுக்குப் போறா! முதல் நாள் சைக்கிள்ள போறா. “ரேஷ்மி, ஜாக்கிரதையா ரோட்டைப் பார்த்து மெதுவாப் போ. இன்னிக்கு முதல் நாள், அப்பா துணைக்கு அவர் ஸ்கூட்டர்ல வருவாரு. ஆல் த பெஸ்ட்”.

மகளின் பின்னால், ஹெல்மெட் அணிந்து, சிவா மெதுவாகச் சென்றான்!

.