பஞ்சாக்ஷ்ரம் செல்வராஜன்/வெறி

(Appeared in Virutcham Issue 68-69th issue – October 2005)

                                                  

                அந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று மாலை 5.50க்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் என்னை ஒருவன் தாக்கினான்.

                எனது அலுவலகத்தில் முக்கியத்துவம் என்பதே சிறிதும் இல்லாத பலபேரில் நானும் ஒருவன்.  வீட்டில் மாதச் சம்பளத்திற்குள் பட்ஜெட் போட்டு மனைவிக்கு பட்டுப்புடவை, நகை சீட்டும், மகளுக்குப் பாத்திரச்சீட்டும் கட்டி கணக்குப் பார்க்கும் சாமானியன் நான்.  என்னிடம் பகைக்கொள்ளும் அளவு விஷயமும் இல்லை – அப்படித்தான் அதுவரை நினைத்திருந்தேன்.

                சம்பவம் நடந்த அன்று எனது மோட்டார் சைக்கிளில் (முப்பது கிலோமீட்டருக்கு மேல் வேகம் போகாத அகிம்சை வாகனம் அது), வீட்டை நெருங்கும்போது, நடு ரோட்டில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.  அவனைக் கடக்கும்போது கையில் வைத்திருந்த ஏதோ ஒன்றால் என்னைத் தாக்கினான்.  (அதை நான் ஒரு üஸ்கேல்ý என நினைத்ததும், அதற்கு முன்பு என் வாழ்வில் கடைசியாகத் தாக்கப்பட்டது எட்டாம் வகுப்பில், கட்டுரை நோட்டு எடுத்து வராத காரணத்தால் எனது தமிழாசிரியரால் ஒரு ஸ்கேலால்தான் என்பதும் என் அப்பாவித்தனத்திற்கு உதாரணங்கள்).

                கீழே விழுந்த நான், “ஏண்டா அடிச்சே, டேய்,”என்றபோது, அவன் பதில் கூறாமல் ஓடிவிட்டான்.  நான் எனது வழக்கமான பாணியில், ஆட்டோவிலிருந்து வயதான ஒருவர் இறங்கி,üஎங்கப் பையன்தான் சார்..டைபாய்ட் சுரம் வந்து புத்தி மாறாட்டமாயிட்து  என்று சொல்லப்போகிறார் என நினைத்தால்…ஆட்டோவும் எதிர்த்திசையில் பறந்துவிட்டது.

                பிறகுதான் கவனித்தேன்..அவன் “ஸ்கேலால் அடித்த” இடத்திலிருந்து ரத்தம் பீறிட, சட்டையும் கிழிந்து, ரத்தத்தில் ஊறிப் போய்விட்டது.  வலி உடனே தெரியவில்லை.  எனவே மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

                மனைவி பதறிப்போனாள் : “ஐயோ…ரத்தம் நெறய வருது.

பஞ்சு வச்சு அமுக்கிப் புடிங்க..”

                பிடித்தும் ரத்தம் நிற்கவில்லை.  அதற்குள் பக்கத்துவீட்டுக்காரர் – விடுப்பில் இருந்த அரசு ஊழியர் – ஓடிவந்தார்.  “ஐயய்யோ…என்ன சார் இது?  கத்தியால வெட்டியிருக்கான். இதப்போய் ஸ்கேல்ல அடிச்சானாம் ..சீக்கிரம் பேலீசுக்கு போன் பண்ணணும்..”

                அவரே அவசர பேலீஸ் உதவிக்கு டயல் செய்தார்.  அடுத்த சில நொடிகளில் வந்த வயதான போலீஸ்காரர்.  “இங்க யாரு நமச்சிவாயம்?” என்றார்.

                “நான்தான்..”

                என்னை மேலும் கீழும் பார்த்தவர் கண்ணில் என்னையே குற்றம் சொல்லும் பாங்கு தெரிந்தது.

                “எப்படி ஆச்சு?”

                “யாரோ ஒருத்தன் ஆட்டோவுல வந்து வெட்டிட்டு ஓடிட்டான்,”என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

                “நீங்க சொல்லுங்க..” என்றார் போலீஸ்காரர்.

                நானும் சொன்னவுடன், “ஆட்டோ நம்பர் தெரியுமா?” என்றார்.

                வீட்டுக்கு வந்தபோது, சம்பவத்தைத் தூரத்திலிருந்து பார்த்த சிறுவன் துண்டுக் காகிதத்தில் எழுதிக்கொடுத்த ஆட்டோ நம்பரைச் சொன்னேன்.

                “வெட்டுனான்னு சொல்றீங்க..அப்புறம் எப்படி வீட்டுக்கு வந்தீங்க?”

                “பைக்லதான்.”

                “வெட்டுனவன் யாருன்னு தெரியுமா?”

                “பதனெட்டு, இருபது வயசு இருக்கும்..அவனுக்கு.. மீசைக் கூட சரியா முளைக்கலை.”

                “எந்தப் பக்கம் போனான்?”

                “மெயின்ரோடு பக்கம் ஓடினான்.”

                “ஆளை அடையாளம் காட்டத் தெரியுமா?” யோசித்தேன்.

                “என்ன சார், இது?  வெட்டுனான்…ஓடுனான்னு சொல்றீங்க..ஆளு அடையாளம் தெரியலன்னு..ஒரு ஆட்டோ நம்பரத் தர்றீங்க..சரி, சரி போன் இருக்குதா?”

                “பக்கத்து வீட்ல இருக்கு..”

                பக்கத்து வீட்டில் சென்று டயல் செய்தார்.  மறுமுனையில் பேசியவரிடம், “சின்னக்காயம்தான் சார்…வீட்ல ஏதோ கசாமுசா ஆயிட்ருக்குது..நான் கேட்டுக்குனு வரேன்,” என்று வரும்போது நண்பருக்குக் கோபம் வந்துவிட்டது.  “நீங்க என்னா, நாங்க சொல்றதையே சந்தேகப் படற மாதிரியில்ல இருக்கு..கசமுசா, அது

இதுன்னு..எந்த ஸ்டேஷன் நீங்க?”

                “நீங்கதான் போன் பண்ணினது, இல்லே?”

                “ஆமா…அவசர போலீஸ் உதவிக்குன்னு எல்லா எடத்துலயும் எழுதிட வேண்டியது..கடைசில இப்படிப் பண்றீங்க?  நீங்க போங்க..எனக்கு எப்படி வேலை வாங்கறதுன்னு தெரியும்..”

                நண்பர் தனது மைத்துனருக்கு டயல் செய்தார்.  அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் பெயர் எஸ்.கே சாரி.  என்னிடம் நேரடியாக விபரம் கேட்ட அவர், “நான் பி சி கிட்ட பேசுறன்..கவலைப் படாதீங்க..சுடலையாண்டி உங்க கிட்ட பேசுவார்,” என தொடர்பைத் துண்டித்தார்.

                சற்று நேரத்தில் ஒரு ஜீப்பும்..அதன்பின் இரு கார்களும் வர, வீடு நிறைய போலீசார் நின்றபடி,”உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் உண்டா?  யாராவது எதிரிகள் உண்டா?  கையில் எவ்வளவு பணம் வச்சிருந்தீங்க? எதுனா பொருள் மிஸ்ஸிங்கா..”எனக் கேள்விகளை அடுக்கினர்.  முதலில் வந்த போலீஸ்காரரும் கூட மறு அவதாரம் எடுத்து வந்து பணிவும் அக்கறையுமாய் விசாரித்தார்.

                என்னைத் தனியே அழைத்துச் சென்று, “சார், முழுசா üஎன்கொயரிý பண்ணலாமா?  வேணாம்னா வுட்டுடலாம்,” என்றனர்.

                “அது என்னா முழுசா என்கொயரி, பாதி என்கொயரி எல்லாம்?”

                “மத்தவங்களுக்குத் தெரிய வேண்டாத விஷயம்னு சிலது இருக்கும்..அதுபோல எதுனா..”

                “அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது..நல்லா விசாரிக்கலாம்..”

                அன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரம் வீட்டில் ஒரே கும்பல்.  பார்வையாளர்களாக உறவினர்கள், நண்பர்கள் குவிந்தனர்.

                மாடி வீட்டிலிருந்த நான்கு வயதுக் குழந்தை வரும் பொருட்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்தது.  ஒரு ஹார்லிக்ஸ், இரண்டு ஆப்பிள், ரெண்டு பிஸ்கட் பாக்கெட் எனப் பட்டியல் நீண்டது.

                வருபவர்கள் அனைவருமே,”உங்களுக்கு யார் சார் வேண்டாதவங்க?  ஆச்சர்யமா இருக்குது..” என்றனர்.  ஒரு சிலர், “உங்களைத் தாக்கணும்னு வரலை..வேற யாருக்கோ வச்சக்குறி நீங்க வந்து மாட்டிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்,” என்றனர்.  ஆனாலும்

அடிப்பட்டவுடன் காவல் நிலையம் சென்று, அங்கிருந்து அரசு மருத்துவமனைக்குச் சென்றதால் முறைப்படி வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் என்றார்கள்.

                தாக்கியது யார் என்று ஆளுக்கு ஒரு யூகம் சொன்னார்கள்.  உறவினர் ஒருவரது திருமணத்தில் நடந்த வாக்குவாதத்தின் போது பெண் வீட்டுக்கு நான் வக்காலத்து வாங்கியது, பக்கத்துத் தெருவிலுள்ள டாக்டர் தன் டிரைவரை வேலையைவிட்டு நீக்கியபோது டிரைவரிடம் பேசியது, கையில் நன்கொடை புத்தகத்தோடு வந்த தொழுநோய் பிச்சைக்காரர்களை விரட்டியடித்தது போன்ற பல சம்பவங்கள் அலசி ஆராயப்பட்டன.

                பக்கத்து வீட்டுப் போனில் எஸ்.கே.சாரி என்னை அழைத்து, ஐ பி எஸ் அதிகாரி ஒருவரின் நம்பரைக் கொடுத்து என்னைப் பேசச் சொன்னார்.

                பலமுறை நான் முயன்றபோதும் அவரது எண் பிசியாகவே இருந்தது.

                ஒருநாள் இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்தார்.  “நீங்கதான் ….அடிப்பட்டது?”

                “ஆமா..”

                “இங்க பேசலாமா?  இல்ல, வெளியே எங்கனா போயிறலாமா?”

                “ஏன்? இங்கயே பேசலாமே..”

                “அதுக்கில்லே…வீட்டுல வச்சி, இந்த மேட்டரு பேச வேணாமேன்னு பாத்தேன்..”

                “எனக்கு ரகசியம் எதுவும் இல்லை…இங்கியே பேசலாம்..”

                சற்று தயங்கிய அவர், “உங்களத் தாக்குனது ஒரு பொம்பிள விஷயமாத்தான்…தெரியுமா?”என்றதும், அதிர்ந்தேன்.  “என்ன சொல்றீங்க?”

                “ஆமாங்க..ஒரு பொம்பிள சம்பந்தப்பட்டிருக்கா.”

                “யாரது?”

                “அப்புறமா சொல்றேன்,” என்று சிரித்தார்.

                எனக்கு ஆவலை அடக்க முடியவில்லை.

                “உங்க ஆபிஸ் ஆளுதான்,” என்று பெயரைச் சொன்னார்.  “நம்பவே முடியலியே..” என்றேன்.

                அதற்குள் அவரது செல்போன் ஒலிக்க,  “ஐயா…ஐயா..சரிங்க  ஐயா,” என்று பலப்பல ஐயாக்களுக்குப் பிறகு, “டி சி கூப்பிடறாரு அப்புறமா வரேன்..,” எனப் புறப்பட்டார்.

                சிலநாட்களில் கையிலும் தோளிலும் போடப்பட்ட தையல் பிரித்தெடுக்கப்பட்டது.  காயங்கள் ஆறிவிட்டதால் மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன்.

                அங்கு எல்லோருமே, “நீங்க ரொம்ப தைரியசாலி சார்,” என்று பாராட்டினார்கள்.  யரோ ஒருவன் எங்கிருந்தோ வந்து எதிர்பாராமல் தாக்கியபோது, பின் விளைவின்றிப் பிழைத்தது குருட்டு அதிர்ஷ்டமே!  இதில் தைரியம் எங்கிருந்து வந்தது?

                ஆனால் பக்கத்து வீட்டு நண்பர் மட்டும் எஸ்.கே.சாரி சொன்ன டி.சியப் பாருங்க சார்!  அன்னிக்குச் சொன்னேன்! கேக்க மாட்டேங்கறீங்க..” எனக் கடிந்துகொண்டார்.  “அவரு பேரைச் சொன்னாலே அலறும் டிபார்ட்மெண்ட்..”

                உடனே மறுபடியும் முயற்சி செய்தேன்.  மறுமுனையில், “சுடலையாண்டி,” என்றது ஒரு குரல்.

                “வணக்கம், சார்..என் பேரு நமச்சிவாயம்.  செக்ரடேரியட்லருந்து எஸ் கே சாரி சார் உங்கக்கிட்டப் பேசச் சொன்னாரு..”

                “ஆ..ங் “ என இழுத்தவர், சட்டுன்னு நினைவுக்கு வரல..என்னா மேட்டருன்னு சொல்லுங்க…”

                சொன்னேன்.

                “இப்ப, ஞாபகம் வருது..ஆட்டோவுல வந்து üஅசால்ட்ý பண்ணினதுதான?”

                “ஆமா, சார்!”

                “விவரம் சொல்றன் இருங்க..” என்றவர், சற்று மௌனத்திற்குப் பின், “ஆட்டோ நம்பர் யரோ ஒரு பையன் குடத்தான்..அதை வச்சி, பிடிச்சுட்டோம்..ஆட்டோ இப்போ இஜட் பிளாக்ல போலீஸ் ஸ்டேஷன்ல இருக்குது.  ஆட்டோ டிரைவர் எதைக் கேட்டாலும் தெரியாதுகறானாம்…என்னோட üமெத்தட்ý தெரியுமில்லை..”பெட்ரோல் ஊத்தி ஆட்டோவைக் கொளுத்துங்கடாýன்னேன்..பெறவு, கால்ல வுளுந்துட்டான்”

                “எனக்குத் தெரியவே இல்ல சார்.”

                “வண்டியில வந்த பயலுவோ ரெண்டு பேரும் மூலக்கதை..இவனுகளுக்குக் காசு கொடுத்தவன் ஒரு மேஸ்திரி வேல பாக்கற பயல்தான்..எல்லோரையுமே ஸ்டேஷன்லதான் வச்சிருக்கோம்..போய்ப் பாருங்க..”

                “ரொம்ப சந்தோஷம் சார் !  இவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சுட்டீங்களே !” மகிழ்ந்து போனேன்.

                “ஆமா, எஸ் கே சாரி உங்க ரிலெஷனா?”

                “இல்ல..ரொம்ப நெருக்கமான சிநேகிதம்தான்.”

                “சரி, அவருக்கும் சொல்லிபிடுங்க..நாளை மறுநாள் நானும் அவரைப் பார்க்கப் போறன்.”

                “கண்டிப்பா, சார்.”

                உடனடியாக பக்கத்து வீட்டுக்காரரிடம் விஷயத்தைச் சொன்னேன்.  “அப்பவே சொல்லலை..சுடலையாண்டின்னு சொன்னா டிபார்ட்மென்ட் அலறும்.ரொம்ப முரடன். ஆனா நேர்மையான மனுஷன்..நீங்க எதுக்கும் ஒருமுறை நேர்ல போய்ப்  பார்த்து நன்றி சொல்லிடுங்க,” என்றார்.

                ஆனால் எவ்வளவு முயன்றும் சுடலையாண்டியை நேரில் பார்க்க முடியவில்லை.  ஒரு முறை போனில் சொல்லிவிட்டு நேரில் போனபோதும், “அய்யா இப்பத்தான் போனாரு..சி எம் வீட்டுக்குத்தான்னு நெனைக்கிறேன்,” என்றார் உதவியாளர்.

                பத்து நாட்களுக்குப் பிறகு பக்கத்து வீட்டு நண்பர் ஒருமுறை கூப்பிட்டார்.  “இன்னிக்கு காலைல எஸ.கே சாரிகிட்டே போய் அரைமணிநேரம் பேசிண்டிருந்தேன்..என்ன பண்ணினாராம் தெரியுமா, நம், சுடலையாண்டி.”

                “தெரியாதே..”

                “அந்தப் பொம்பிளய அரெஸ்ட் பண்ணிக் கொண்டாங்க..அந்தப் பய..யாரோ மேஸ்திரியாம்..üமெயின் அக்யூஸ்ட்ý அவனயும் ஜட்டியோட கொண்டாந்து, உங்க வீட்டு வாசல்ல வச்சுப் பின்னிடுவோம்ý னாராம்.”

                “ஐயய்யோ..”

                “தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிக்கிறான்.. நீங்க ஏன் சார் கவலைப்படறீங்க?”

                “அதுக்கில்லே..நான் அந்தப் பொம்பிளைக்கு அட்வைஸ் பண்ணுனது பிடிக்கலே..அதுக்குப் போய் இவ்வளவுதூரம் போவாள்னு நினைக்கவே இல்லே..”

                அவளுக்கும் அந்தப் பயலுக்கும் ஏதோ தொடர்பாம் சார்..நீங்க சொன்னபிறகு கொஞ்சநாள்ல மாற்றல் வந்ததுதான் காரணம்..”

                “அப்படியென்ன சார் கொலை வெறி?  எனக்கே நம்ப முடியலே..”

                “சுடலையாண்டி பேருக்கு என்னா மதிப்பு தெரியுமா?  இந்நேரம் அந்தப் பயலுகளைப் பீஸ் பீஸ் ஆக்கியிருப்பார்..”

                என் பயமோ, அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, üரேப், கீப் ஆகித் தொலைந்தால்..ý

                ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு எந்தவிதத் தகவலும் இல்லை.

                பிறகு ஒருநாள் பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார் : “நேத்து சுடலையாண்டி என் மச்சினரைப் பார்க்க ஆபீஸ÷க்கு வந்திருந்தாராம்.  ஏதோ பெரிய பிரச்னையாம்.  மூணு மணிநேரம் அங்கியே உட்கார்ந்து ஃபைலை எடுத்துட்டுப் போயிட்டாராம்..üமதுவிலக்குலý இருக்கையில வந்த பிரச்னையாம்..என் மச்சினர் கிட்ட வரவே எல்லாரும் தயங்குவாங்க..எஸ் கே சாரின்னா எரிச்சல்காரன்னே பேரு..நம்ப மேட்டர் நிக்குதேன்னு இவருக்கு உதவி செஞ்சிருக்கார்.  உங்க கேஸ் பத்து நாள்ல கோôட்டுக்கு வந்துடும்னாராம்.”

                “அந்தப் பொம்பிளய வேற üஅரெஸ்ட்ý பண்ணப் போறாங்களாம்.  ஏதாவது வெவகாரம் ஆயிடப் போவுது! “

                “சுடலையாண்டி சொன்னாராம்..அவ ஊர்லியே இல்லையாம்.”

                “பின்ன?”

                “எஸ்கேப் ஆயிட்டா!  அதனால ஒண்ணும் இல்ல..அந்தப் பயமேலயே கொலை முயற்சி கேஸ்தான் போடப் போவுது..”

                “நிஜமாவா சார்! “

                “கவர்ன்மெண்ட் நினச்சா என்ன வேணா பண்ணலாம் சார்!”

                                                                                                        **************

                ஒரு மாதம் கழிந்தது.  ஒருநாள் நானாகவே போலீஸ் ஸ்டேஷன் சென்று, முதலில் இருந்தே கேûஸ விசாரித்துவரும் இன்ஸ்பெக்டரிடம், என்ன ஆயிற்று என விசாரித்தேன்.

                “இன்னும் நாளாகும்..கோர்ட்டுக்குன்னா சும்மா போயிற முடியுமா?”

                “யாரையெல்லாம் புடிச்சீங்க..அந்த மேஸ்திரிப் பயலையா?”

                “அவன்தான் முன் ஜாமீன் வாங்கிட்டானே?”

                “அந்தப் பொம்பிள..”

                “அவ பிக்சர்லியே இல்லே..”

                “அவ சொல்லித்தான் இந்தப் பய வெட்டுனதா டி.சி சொன்னாரே..”

                “இல்ல சார்! அவன் உங்க ரெண்டுபேருக்குள் குடுக்கல் வாங்கல் தகராறுன்னு சொல்லியிருக்கான்..”

                “அவன்கிட்ட போயி, அதுவும் நான் எதுக்கு சார் பணம் வாங்கப் போறேன்?”

                “முப்பதாயிரம் ரூபா வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க, அதான் வெட்டுனேன்னு சொல்றான்.”

                “என்ன சார், புதுக்கதையா இருக்குது?”

                “எல்லாம் வக்கீலுங்க சொல்லிக் குடுக்கறதுதான் சார்!  முதல்ல எல்லாத்தையும் வாக்குமூலமா குடுத்துருவான்.  கோர்ட்ல வர்றபோது போலீஸ்காரங்க அடிச்சாங்க, அதான் அப்பிடிச் சொன்னேன்னு üபல்டிý அடிச்சுருவான்..”

                “ஆனா டி.சி அவன அப்பிடியே ஜட்டியோட கொண்டாந்து கட்டி வச்சுப் பின்னிடுவோம்னாரே..”

                கொஞ்சம் நம்ப முடியாமல் போனது எனக்கு.

                                                                                                *********

                பக்கத்துவீட்டுக்காரரின் தூண்டுதலால் மறுபடியும் எஸ்.கே சாரியிடம் போனேன்.

                “சுடலையாண்டிய ஒரு பெரிய பிரச்னையிலிருந்து காப்பாத்தி வுட்டது நானு..மூணு வருஷமா பெரிய சென்ஷர் அல்லது தண்டனை வரும்னு பயந்தாரு மனுஷன்..அப்பேர்ப்பட்ட மேட்டரை நான் முடிச்சிருக்கேன்..கடைசில நம்ப கேஸ் அப்படியெல்லாம் போவறதுக்கு உடுவாரா..”

                “இல்ல சார் !  ஏதாவது பண்ணி கேûஸ கலைச்சுடுவாங்களாமே..”

                “நீங்க ஒண்ணு ! சாட்சிகள்லாம் நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா, யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.  இப்ப நீங்க நேரா அவரப் போய்ப் பாருங்க..”

                அதிசயமாக சுடலையாண்டி தன் அலுவலகத்தில் இருந்தார்.

                என்னை அறிமுகம் செய்துகொண்டபோது, நான் யாரென்று அவருக்குப் புரியவில்லை.

                “ஆட்டோவுல வந்து வெட்டிட்டுப் போனான் ஒருத்தன்னு சொல்லி கேஸ் போட்டமே..”

                சற்று யோசித்தார்..”கன்விக்ஷன் வாங்கிட்டோம் இல்லே?”

                “இல்ல சார்! இன்னும் கோர்ட்டுக்கே வர்ல..”

                “அப்படியா?  எனக்கு நீங்க எந்தக் கேஸ் சொல்றீங்கன்னு புரியல..”

                எஸ் கே சாரியின் பெயரைக் குறிப்பிட்டேன்.

                முகத்தில் எவ்விதப் பாவமும் இன்றி,”நீங்க அவருக்கு என்ன

வேணும்?” என்றார்.

                “அவருடைய மைத்துனர் என் பக்கத்து வீட்டுக்காரர், சார்.”

                “ஆ..ங் இப்ப ஞாபகம் வருது !  நாமம் போட்டுக்கிட்டு, சிவப்பா…ஒல்லியா அவருதானே?”

                üநீங்க üமதுவிலக்குýல இருந்த காலத்திலிருந்து மூணு வருஷமா தொடர்ந்த பிரச்னையைத் தீர்த்து வச்சாராமே, அந்த எஸ் கே சாரிதான், சார்,ý என்று சொல்ல நினைத்தேன்.  சொல்லவில்லை.

                “அந்தக் கேஸ் செக்ஷன்லாம் கூட மாத்திட்டாங்களாம், சார்! நீங்க கொலை முயற்சின்னு போட்டது..அவங்க வெறும் கைகலப்புன்னு ஆக்கிட்டாங்களாம்.”

                “அப்படியா?” என்றவர், என்னைச் சற்று காத்திருக்கச் சொல்லிவிட்டு, தணிந்த குரலில் தொலைபேசியில் யாரிடமோ பேசினார்.  பிறகு என்னிடம் திரும்பி, “அந்த லேடிதான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரியுது.. டாக்டர்கிட்டே சர்ட்டிபிகேட் கூட üஎளிய காயம்ýனு வாங்கிட்டாங்களாமே?  அவ பயங்கரமான ஆளா இருக்கா..”

                “ஒரு சாதாரண ரெகார்டு கிளார்க்தான் சார்..”

                “ஆனா யார் யாரையோ கவர் பண்ணிவிட்டாள்.”

                “நீங்க நெனச்சா செய்ய முடியாதா, சார்?”

                “கோர்ட்டுக்கு வரட்டும்..பார்ப்போம்..”என்ற சுடலையாண்டி திடீரென, “ஆமா..அந்த லேடி என்ன ஜாதி?” என்று கேட்டது என்னை வியக்க வைத்தது.

                கொலைகாரனுக்கும் கொள்ளை அடிப்பவனுக்கும் ஜாதி என்னவா?  ஒரு வேலை இதிலும்கூட ஒரு üகோட்டாý இருக்குமோ?

                ஜாதியைச் சொன்னேன்..அவரும் அதே ஜாதிபோலும்.

                முகம் பிரகாசமாக அவர் மகிழ்ச்சியோடு, “அதானே பார்த்தேன்..அப்படிச் சொல்லுங்க..வலதுகை முஷ்டியை மடக்கி இடது கையில் குத்தியபடி உரத்தக் குரலில் சொன்னார்.

                என் கேஸ் தோற்றுப்போனது.                                                    ய்          

         

          

One Comment on “பஞ்சாக்ஷ்ரம் செல்வராஜன்/வெறி”

  1. இப்போதைய நாட்டு நடப்புதான் இந்தக்கதை. இந்த சுதந்திர நாட்டில் நல்லது கெட்டது எதையும் கண்டும் காணாமல், மனதில் பட்டதை சொல்லாமல் இருப்பதே உத்தமம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் கதை. நல்ல நடை. பாராட்டுகள்

Comments are closed.