ரேவதி பாலு/கபசுர குடிநீர்

ஒரு ஆட்டோவில் இரண்டு அண்டா கபசுர குடிநீர் வந்து இறங்கியதுமே அந்தப் பேட்டை வாசிகள் எல்லாம் வீட்டிற்குள் பதுங்கி கொண்டனர். “இப்பதானே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கொரோனாக்காக கபசுர குடிநீர் குடிக்க வச்சாங்க. எதுக்கு திரும்ப இப்போ?”

“ஏய் ஊர் முழுக்க டெங்கு ஜுரம் வருதில்ல. அதெல்லாம் வராம ஒரு எதிர்ப்பு சக்தி வரணும்னு தானே இது தராங்க” கன்னியம்மா பாட்டி வீட்டுக்குள்ள ஓடுற சின்னப்பசங்கள இழுத்து வச்சு சொன்னா.

“எங்களை விடு நீ போய் குடி” என்று கேலி செய்து பழிப்பு காட்டினர் அந்த சின்ன பிள்ளைகள்.

” உவ்வே! ஒரே கசந்து வழியும் அந்த அசிங்கத்தை யார் குடிப்பாங்க,,?” முகம் கோணிக் கொண்டு போனது பாட்டியின் பேரனுக்கு.

” டேய் பரதேசி பசங்களா! இங்க வாங்கடா. நான் குடிச்சு காட்டுறேன். பாருங்க .எவ்வளவு நல்லா இருக்குன்னு. நீங்களும் வந்து குடிங்க வாங்க. உங்களுக்காக தானே வேல மெனக்கெட்டு இந்த தம்பிங்க கொண்டு வராங்க .”

விடு விடு என்று ஆட்டோ பக்கம் போன கன்னியம்மா கிழவி கபசுர குடிநீரை கொண்டு வந்திருந்த அந்த தம்பிகளிடமிருந்து ஒரு டம்ளர் குடிநீரை வாங்கி மடமடவென்று குடித்தாள். குடித்து முடித்தவுடன் அந்த பொக்கை வாய் முழுவதும் சிரிப்பு.

” ஏய் கிழவி ! கசப்பாக அதை குடிச்சிட்டு உனக்கு சிரிப்பு வேறயா? உனக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் கிழவியின் மருமகள்.

‘ இந்த 80 வயசுக்கு எத்தனையோ கசப்பான நினைவுகளை கடித்து முழுங்கின எனக்கு இந்த கபசுர குடிநீர் கசப்பு எம்மாத்திரம்’ கிழவிக்கு மனதிற்குள் எண்ணம் ஓட ,பொக்கை வாய் சிரிப்பு இன்னும் விரிந்தது.

2 Comments on “ரேவதி பாலு/கபசுர குடிநீர்”

Comments are closed.