விட்டல்ராவ் அவர்களின் புலி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி


ரேஞ்சர் குரூப் நாகு என்றழைக்கப்படும் நாகப்பன்  பார்வையில் இக்கதை நகர்கிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு  அலுவலக வேலையாக அக்காட்டுப் பகுதிக்கு காட்டிலாகா அதிகாரிகள் ஏலம் விட்ட மரங்களைக் கணக்கிட  கோப்புகளுடன் வருகிறான் நாகப்பன்.அவனுக்கு  அக்காடு வெகுவாய் சுருங்கியிருப்பதைக் காண்கின்றான்..மக்கள் குடியிருப்பு விரிவடைந்து  காட்டை ஒதுக்கி விட காடும் ஒதுங்கியிருப்பது  நன்கு தெரிகிறது.
நாகப்பனுக்கு தன்னுடைய  சிறுவயது நினைவுக்கு வருகிறது. தன்னுடன்  இரண்டாம் படிவம் படித்த நண்பன் பாலனுடன் காட்டுப்பகுதிக்குள் சென்று அங்கு கிடைக்கும் பழவகைகளை எடுத்து வருவதும்  நன்கு முதிர்ந்த காட்டிலந்தைப் பழத்தில் தன் அக்கா செய்யும் இலந்தை வடையும்  நினைவிற்கு வருகிறது.
  
அக்குடியிருப்புப் பகுதியில் கோர்ட்டில் வேலை பார்க்கும் மூன்று குமாஸ்தாக்கள் குடிமிருக்கின்றனர்.அதில் முனுசாமிக்கு மட்டும் திருமணமாகவில்லை.முனுசாமியின் மீசை முரட்டுத்தனமாக இருந்தாலும் அவரின் கண்கள் கருணை மிகுந்து இருக்கிறது.எப்போதும் வேட்டைத் துப்பாக்கியொன்றைத் தோளில் மாட்டியபடியே இருப்பார்.அடிக்கடி காட்டுக்குள்  வேட்டைக்காக சென்றாலும் சொல்லும்படி எது ஒன்றையும் வேட்டையாடியது இல்லை. இதற்கு வேட்டையாடுவது பாவம் ..அதனால் வேட்டையாடக்கூடாதென்று தான் சத்தியம் வாங்கிக் கொண்டதாகக் கூறுகிறாள் நாகப்பனின் அக்கா. இதைப் போல் பல சத்தியங்கள் முனுசாமி நாகப்பனின் அக்காவிற்கு செய்து கொடுத்திருக்கக் கூடுமென்பது பிறகுதான் தெரிய வருகிறது.
ஒருநாள் காட்டுப்பகுதிக்கு பாலனுடன் செல்லும் நாகப்பன் புளியமரத்திலிருந்து புளியம்பழங்களைப் பறித்து வேண்டுமட்டும் சாப்பிட்டு விட்டு டிராயர் பாக்கெட்டிலும் சேகரித்துக் கொண்டு புளியமரத்திலிருந்து இறங்கும் போது குத்தகைக்காரரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவர் தண்டனையாக பாலனைப் பார்த்து டிரௌசரை கழட்டச்சொல்கிறார் அவன் ரேஞ்சரின் மகனென்று நாகப்பன் கூற அப்படியெனில் நீ டிரௌசரை கழட்டு என்கிறார் குத்தகைக்காரர்.இந்த தண்டனை வித்தியாசமாக இருக்க மெல்ல சட்டையை கழட்டுகிறான் நாகப்பன். இதனை வேடிக்கைப் பார்க்க
அங்கு ஆணும் பெண்ணுமாய் வந்து நிற்க ஏதோவொரு வழியாக அங்கு வரும் முனுசாமி  இந்த வயதில் இதுபோலெல்லாம் செய்யாமல் வேறெப்போது  செய்வார்கள் இது இயற்கைதானே என திட்டுகிறார்.இதனால் தண்டனை தராததோடு கைநிறைய புளியம்பழங்களையும் தந்து அனுப்புகிறார்.
அதிலிருந்து  குடியிருப்புப் பிள்ளைகளோடு சேர்ந்து நாகப்பனும் முனுசாமி வீட்டிற்குச் சென்று  அவர் கூறும் வேட்டைக் கதைகளை கேட்பதோடு கணக்கும் அவர் சொல்லித் தர போட்டு வருகிறான்.மேலும் தன் அக்கா தரும் பைண்டிங் செய்யப்பட்டப் புத்தகங்களை முனுசாமியிடம் கொடுத்து அவர் திருப்பித் தருவதை வாங்கி வந்து அக்காவிடம் கொடுக்கிறான்.
காட்டுக்குள் மேயச்சென்ற மாடுகள் திரும்பி வராததும்  கள்ள வழியாய் காட்டுக்குள் சென்று மரம் வெட்டி விறகுக்காக விற்று வருபவர்கள் தலை துண்டித்த நிலையில் மாடு ஒன்று காட்டுக்குள் கிடப்பதையும் பார்க்கின்றனர்.காட்டுக்குள் சிறுத்தைப் புலி உலாவுவது செய்தியாகிறது.மாலை ஏழு     மணிக்கெல்லாம் குடியிருப்புப் பகுதி ஆளரவமற்று முடங்கிப் போகிறது.புலியை கொல்பவருக்கு பரிசு தருவதாக செய்தித்தாளில் அறிவிப்பு வருகிறது.ஒலிபெருக்கியில் புலியின் நடமாட்டம் பற்றி கூறுகின்றனர்.

திடீரென்று ஒருநாளிரவு காட்டுக்குள் துப்பாக்கியுடன் செல்கிறார் முனுசாமி.
அடுத்த நாள் சிறுத்தைபீ புலியை முனுசாமி சுட்டு விட்டதாக செய்தி பரவுகிறது.காட்டுக்குள் புலிக்குப் பக்கத்தில் முனுசாமியின் கைத்துப்பாக்கி கிடக்கிறது.துப்பாக்கியை ஏன் காட்டுக்குள் போட்டு விட்டு வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.புலியைக் கொன்றது குறித்து பல்வேறு அனுமானங்கள் மக்களிடையே  நிலவுகிறது.முனுசாமிக்கு குளிர் ஜூரம் வந்து மருத்துவரிடம் செல்கிறார்.பலரும் அவரைப் பாராட்டுகின்றனர்.நாகப்பன் அக்கா மட்டும் பாராட்டாமல் தொலைவிலே நிற்பது ஏனென்று நாகப்பனுக்குத் தெரியவில்லை. முனுசாமி தான் வேண்டுமென்று புலியைச் சுடவில்லை என்று கூறுகிறார்.சிறிது நாட்களுக்குப் பிறகு முனுசாமி மாற்றல் பெற்று வேறு ஊருக்குச் செல்கிறார். கூடவே நாகப்பனின் அக்காவையும் அழைத்துச் சென்று விடுகிறார்.நாகப்ன் வீட்டார் யாரும் அவர்கள் திருமணத்தில் பங்கேற்கவில்லை.
வந்த வேலை முடிந்ததும் காட்டிலாகா அதிகாரிகள்  மதிய உணவுக்கு  அழைக்க அங்கே செல்லாமல்  நடந்து வந்து  உறையின்றி வெளியே துப்பாக்கி தொங்கவிடப்பட்ட்டுள்ள வீட்டின் கதவை அக்கா என்றழைத்து நாகப்பன் தட்ட வா என்றபடி கதவை திறக்கிறார்  முனுசாமி என்று கதை முடிகிறது.

இக்கதையில் கதாசிரியர் மனிதர்களின் சித்திரத்தை எழுத்தால் தீட்டியுள்ளார்.இலை மறை காயாக ஒரு காதலைச் சொல்லிச் செல்லும் மெல்லுணர்வுக் கதையாக இது இருப்பினும் மனிதர்களின் சுரண்டல்களை வெளிப்படுத்தும்  இவரின்  பாணி இங்கு  மனிதர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள் அந்த வகையில் இயற்கையின் பிரம்மாண்டம் காடுகள் அதனையும் தாம் பிழைக்கச் சுரண்டி அழிப்பார்கள் என்பதை காட்டை மனிதர்கள் ஒதுக்கி விட்டார்களென்றும் காடு மனிதர்களை விட்டு ஒதுங்கிக் கொண்டது என்னும் வரிகள் புரிய வைக்கிறது.இதற்காக யாரும் கவலையும் படப் போவதில்லை.மாறிக்கொண்டே  இருக்கும் சமூகம்  தன் மதிப்புகளை சிறிது சிறிதாக  விதம்விதமாக இழந்துகொண்டிருக்கிறது  என்பதற்கான காட்சிப் பதிவே இக்கதை .

ReplyForward