தங்கேஸ்/காடை

                    

                 

அம்மைக்கு ரொம்பவும் சுகமில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறாள் என்று தாக்கல் வந்ததும் இனியும் கிளம்பாமல் வீம்பு புடிக்க முடியாது என்று குடும்பம் மொத்தமும் ஊருக்கு கிளம்பி விட்டோம்.  அம்மையை நானும் வசந்தியும் பார்த்தே பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. குழந்தைகள் நவீனுக்கும் , திவ்யாவுக்கும் சுத்தமாக பாட்டியைப் பற்றி ஒன்றுமே தெரியாது.. அம்மை சொந்த ஊரை விட்டு அனேகமாக எங்கேயும் வெளியே சென்றதில்லை. .அவளுக்கு தெரிந்ததெல்லாம் வீடு ,வாசல் ,வயல் , வரப்பு ,களையெடுக்கிற சிறு கொட்டான் , பண்ணரிவாள் இவ்வளவுதாள். 

ஊரு உலகத்தில் எது நடந்தாலும் கவலைப்பட மாட்டாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருப்பாள்.

ஒரு முறை எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் பெரிய சாதிக் கலவரம் வந்தது. அண்ணன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அரிவாள் கம்புகளோடு  ஊரில் உள்ள இளவட்டப் பயல்களோடு சேர்ந்து கொண்டு கலவரத்திற்கு சென்று விட்டான்.

இதை கேள்வி பட்டதும்  ‘’ கலம் குடுத்து வளர்த்தாலும் காடை காட்டுலதேன் ‘’ .  என்று சொல்லிவிட்டு , அவ  பாட்டுக்கு சுளகில் அரிசியை போட்டு புடைத்துக்கொண்டிருந்தாள் அம்மை.. 

அரிசி புடைக்கும் போது எப்போதும்  இப்படி இரண்டு   கால்களையும்    நெட்டாக நீட்டித் தான் உட்கார்ந்திருப்பாள். கல்லு உரலிலே போட்டு குத்தி எடுக்கப்பட்ட அரிசியும் உமியும் குருணையுமாக  சுளகில் அரிசி ஒரு சேர குவிந்து  கிடந்தது. . ‘’  ஆனால் சோ சோ என்று அவள்  தானியத்தை காற்றில்  மேலே தூக்கிப் போட்டு புடைத்த வேகத்திலேயே   உமி காற்றோடு பறந்து  காணாமல்  போய் விட்டது.. .இது போல  இரண்டு மூன்று முறை புடைத்து முடித்த  போது  செக்கச் சிவீர்னு   பச்சரிசி மட்டும்  அன்னம் போல தனியாகப்  பறந்து வந்து சுளகினில் விழுந்தது. .. கடைசியில் அதையும் .  தெள்ளித் தெள்ளி அரிசியையும் குருணையைம் தனித்தனியாகப் பிரித்து குண்டானில் போட்டு விட்டுத்தான்  தலை நிமிர்ந்தாள்.  

பிறகு எங்கள் நினைப்பு வந்தவள் போல சுளகில் மீதியிருக்கும்   குருணாவை ஒரு குத்து அள்ளி  எனக்கும் அக்காவுக்கும் தின்னத் தந்தாள் . 

புது பச்சரி  வாயில் பட்டதும் தேன் பாகாக அப்படியே  கரைந்து கொண்டு உள்ளே இறங்கியது..  . எவ்வளவு வேண்டுமானாலும்  மென்று தின்று கொண்டேயிருக்கலாம்.  .  அவ்வளவு  ருசியாக இருந்தது.. .அரிசிச் சாறு நெஞ்சுக்குள் இறங்கும் போது பச்சை வயல் வாசமெல்லாம் கமகமவென்று உடம்புக்குள் முழுவதும்  மிச்சமில்லாமல் இறங்கி விட்டது..

அம்மை  எப்போதும் இப்படித்தான் பேசுவாள்.  நேரடியாக எதையும் சொல்லவே மாட்டாள்.  நாம் எதிரிலேயே நின்று கொண்டிருந்தாலும் வேறு  .யாருக்கோ சொல்வது போல் தான் சொலவடையாகச் சொல்வாள்..   இப்பொழுது கூட   இந்த காடை சொலவடையை  யாருக்காக சொன்னாள் என்று எனக்கு சரியாகத்  தெரியவில்லை. .  அண்ணனையா அக்காவையா என்று நான் அண்ணாந்து  பார்த்தேன்.  

 ‘’அவ பாட்டுக்கு சொல்லிக்கிட்டு கெடக்கட்டும் ‘’ என்று   நினைத்துக் கொண்டு அக்கா  ஊர்ச்சாவடிக்கு  முன்னால் கிடந்த உரலில்  மாங்கு மாங்கென்று  நெல்லைக் குத்திக் கொண்டிருந்தாள்.  .

அய்யா நான் நான்காம் வகுப்பு  படிக்கும் போதே இறந்து போய் விட்டார். அதற்குப் பிறகு குடும்பத்தில் அன்றாடங் கஞ்சிக்கு கூட அவ்வளவு  கஷ்டமாகப் போய் விட்டது. ‘’ ஒரு நாள் கஞ்சி கெடச்சாலே  கட்டை நிச்சயம் ‘’ என்ற நிலைக்கெல்லாம் கூட  போய்விட்டது. ‘’ .உங்க அண்ணன் தலையெடுத்த பெறகு தான் நீங்க  வயிறாற கஞ்சி குடிக்கீக மக்கா  ‘’  என்று அம்மை அடிக்கடி என்னிடமும் அக்காளிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள். .  

அண்ணன் இப்போது    கலப்பை , உழவு மாடு எல்லாம் எங்களுக்கே சொந்தமாக வாங்கி விட்டான்.  நாலு பேர் இது ஒரு சம்சாரிக் குடும்பம்  என்று  நினைக்கிற அளவுக்கு எங்கள் குடும்பமும் வளர்ந்து விட்டது-  

வழக்கமாக  அண்ணன்  கருக்கலிலேயே எழுந்திருச்சு  ரெண்டு காளை மாட்டையும் பத்திக் கொண்டு  ‘’ அட்ரா எங்குட்டைக் காளான் கண்டுகளா ‘’ என்று சத்தம் கொடுத்த படி தெருவில் இறங்கி  நடக்க ஆரம்பித்து விடுவான். சாதாரணமாக மண் வெட்டியை தோளில் சாத்திக் கொண்டு போவது போல கொழுவோடு இருக்கும் கலப்பையை தோளில் சாத்திக் கொண்டு  உழவுக்கு செல்வான்.  அதிகமாக  இரட்டைப்புளியமரத்துப்பக்கம் தான் வேலை இருக்கும்  சம்சாரி வயல்களுக்குத்தான் உழவுக்குப் போவான்.  .அவனுக்கு காலையிலேயே வெங்கலத்தூக்குச்சட்டி நிறைய கூழும் கடிச்சிக்கிறதுக்கு சின்ன வெங்காயமும்  பச்சை மிளகாயும் அம்மை கொடுத்தனுப்பி  விடுவாள்.

அக்கா விடிஞ்சும் விடியாமலும் தெருமுக்கில் வந்து நின்று பாம் பாம் என்று  ஆரண்  அடிக்கும்  தீப்பெட்டி ஆபிசு பஸ்ஸை பிடிக்கிறதுக்கு கையில சில்வர் தூக்குச்சட்டியோட ஓட்டமும் நடையுமா குமரிப்புள்ளைகளோட சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பாள். .

எல்லாரையும் வேலைக்கு அனுப்பிய பிறகு அம்மை ஒரு வாய் கூழை கரைச்சு குடித்து விட்டு கிடைத்த சம்சாரி வேலைக்கெல்லாம் போவாள்., நாத்து நடுகிறது.  பருத்தி எடுப்பது , களை வெட்டுறது ,கதிர் அறுப்பு  என்று  இப்படியே அவள் பொழப்பு போய் கொண்டேயிருக்கும் . கதிர் அறுப்பு காலத்தில் வயலில் சிந்திக் கிடக்கும்  கதிர்களையெல்லாம் அள்ளி மடியில் கட்டிக் கொண்டு வந்து  வீட்டில வைத்து  உதிர்த்து நெல்லுக்கஞ்சி காய்ச்சித்தருவாள்.

வீட்டில் என்னை  ஆறாவது படிப்பதற்கு பக்கத்து ஊரில் இருக்கும்  பாண்டியபுரத்தில் அரசு பள்ளியில்  சேர்த்துவிட்டார்கள்.. அங்கேயே மாணவர் விடுதியும் உண்டு. .விடுதியில் காலையிலும் இரவிலும்  கஞ்சிச்சோறு தான் ஊற்றுவார்கள்.  அதில் ஊதாக்கலரில் பழுத்த   புழுக்கள்  மிதந்து கொண்டிருக்கும். . தொட்டுச் சாப்பிடுவதற்கு  பொரிகடலை துவையலை ஒரு சின்ன கரண்டியில் அள்ளி கஞ்சிக்கு மேலே வீசி விட்டுப் போவார்கள்..

வெள்ளிக்கிழமையானால் நான் எப்படியும் வீட்டுக்கு நடந்தே வந்து சேர்ந்து விடுவேன்.  இரண்டு நாட்களும்   வீட்டில் டேரா போட்டு வீட்டு திங்கள் கிழமை காலையில் தான் மறுபடியும் பள்ளிக்கு கிளம்புவேன்.  அம்மை ஒரு நாள்   கண்டிப்பாக கருவாட்டுச்சாறு வைத்து எனக்கு கொடுத்து விடுவாள்..அதோடு .பள்ளிக்கூடம் போகும் போது முந்தியில முடிந்து  வைத்திருக்கும்  ஒரு ரூபா காசை அவிழ்த்து என் சட்டைப் பையில் போட்டு விடுவாள். வேர்வை பட்டு வேர்வை பட்டு அந்தக்காசே கறுத்துப்போயிருக்கும். அதை நான்  ஒரு வாரத்துக்கும்  செலவுக்கு வைத்துக் கொள்வேன்.

நான்  எப்போதும் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்பும் போது  வழக்கம் போல அம்மை சொல்லுவாள்  .’’ ஏலே மக்கா  படிச்சு ஒரு நாள் ஒரு பொழுதாவது நீ கவர்மெண்ட் வேலைக்குப் போகனும்.  . உங்கப்பன்  சம்முகத்துகிட்ட வித்த நம்மை ஏழு ஏக்கர் பிஞ்சையையும் நீ தான்  மறுபடியும் மீட்டு கொண்டு வரனும். அதை  கண்ணால பார்த்துட்டுத்தேன்  அம்மை சாவேன் ‘’ .

ஒரு நாள் ரோதைக்குப் போகும் போது அக்கா அம்மாவிடம் ‘’ ஏம்மா அய்யா அம்புட்டுப்  பிஞ்சையும் வித்துப்புட்டாரு ,’’  ?   என்று கேட்டாள்..நானும் ஒரு சின்ன மூட்டை நிறைய கேப்பையை தலையில் சுமந்து கொண்டு அவர்களோடு சென்று கொண்டிருந்தேன்..

 அம்மை அவ்வளவு சடைத்துக் கொண்டு  சொன்னாள்.    

‘’ உங்கய்யாவையாடி கேக்க., அந்த மனுசன் காலுல சக்கரமில்ல கட்டியிருந்தாக. ஒரு எடத்துல என்னைக்கும் நெலையா நிலைச்சு நின்னதா சரித்திரமேயில்லையே ‘’ என்று சொல்லி விட்டு இதுவரைக்கும் வாயில் அதக்கி வைத்திருந்த வெற்றிலையை துப்பி விட்டு நிமிர்ந்தாள்..

‘’ அந்தக்காலத்துலயே ஒரே எடத்துல ஒரே நெட்டா ஏழு ஏக்கர் புஞ்சையை வச்சுப் பொழைச்ச குடும்பம் இவுகளைத் தவிர  இந்த ஊருக்குள்ளயே யாரும் இல்ல பார்த்துக்கோ.  உங்க அய்யா முத்து மேஸ்திரிக்கு மொத்தம் அஞ்சு பொம்பளப் பிள்ளைக ஆனா ஒரே ஒரு ஆம்பிளைப் பையன் மட்டும் தான்.  உங்க  அத்தமாருக  . தம்பியை தரையில இறக்கி விட மாட்டாங்களாம் . அவ்வளவு செல்லம்.  உங்க அய்யாவோட அய்யாவும் அம்மையும் பச்சைக் கூமாச்சி மலையிலயும் வண்டிப் பெரியாரு எஸ்டேட்டுலயும் மழை தண்ணிக்குள்ளயும் ,அட்டைகடிக்குள்ளயும்  அரும்பாடு பட்டு தேடி கொண்டு  வந்த முதலை வச்சு தான்  இந்த ஊருல இந்த பிஞ்சையை வாங்கியிருக்காக..’

 ‘’ அதனால தான் நம்மை வீட்டை மலைக்காரங்க வீடுன்னு ஊருக்குள்ள சொல்றாங்களா ? ‘’என்று அக்கா  கேட்டாள் 

‘’ பெறகு  ?  சும்மாவா சொல்லுறாங்க ? பொய் சொல்லக்கூடாது  அப்ப இந்தப் பிஞ்சை  செல்லம் பொழியுமாம்.  நானே உங்கப்பனுக்கு வாக்கப்பட்டு வந்த காலத்தில அதை என் கண்ணால பார்த்திருக்கேன் . ‘’ என்று சொல்லி விட்டு சிறிது நிறுத்தி விட்டு தொடர்ந்தாள்  ,

‘’ நெல்லுப் போட்டா  பொன்னு வெளையும்   பருத்தி போட்டா பவுனு விளையும்.  நூறு தென்னைமரம் ஒரே நெட்டா வளர்ந்து நிக்கும்  ,.. வீட்டுக்குள்ள எங்க பார்த்தாலும் தானியம் தவசமாத்தான்  தான்  கிடக்கும்.   மச்சு வீட்டுக்குள்ள ஆளு உசரத்துக்கு நாலு குலுக்கைகள் இருந்துச்சு பார்த்துக்கோ . எல்லா குலுக்கையும்   எப்பமும்  நிறைஞ்சுதான் இருக்கும். இப்பம் மாதிரி தன் தரையை தடவிக்கிட்டா இருந்தோம் அந்தக்காலத்துல ?

‘’ அப்புறம் ஏம்மா ஒண்ணுமில்லாமலே போச்சு  ‘’ ?.

 அம்மை தலைச்சமையை கீழே இறக்காமலேயே செத்தோடம் அங்கனக்குள்ளயே கால் மாற்றி நின்றாள். பிறகுஆழமாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு  தொடர்ந்தாள். ‘’ அதை ஏன்  கேக்க ?  உங்கய்யன் உசுரோட இருந்தப்ப அவுககிட்டயில நீ இதே  வார்த்தையை கேட்டுருக்கனும். . அப்படி கேட்டிருந்தைன்னா நம்ம  புள்ளையே  நம்மளை இப்படி கேட்டுப்புடுச்சுன்னு அந்த மனுசன் தலை குனிஞ்சு  நின்னுருப்பாரு . பிறகு என்ன பதில் சொல்லிருப்பாருன்னு   நானும் பார்த்திருப்பேன்ல ?

‘’ சரி நான் இப்ப கேக்கேன். ஏன் காடுகரை மத்த மொதலு எல்லாம் நம்மளை விட்டுப் போச்சு  ? ‘’  

‘’  உங்கப்பன அவுங்க வீட்ல உச்சி மேல தூக்கி வச்சு கொண்டாடுனாங்கல்ல அதான் அவர் கெட்டு கீழவழியாயிட்டாரு. சின்ன வயசுலயே சேர்க்கை சரியில்லாம போயிருச்சாம்.  வயசுக்காலத்துல அது   வரம்பு மீறி போயிருச்சாம். .சரி தான் புள்ளைக்கு ஒரு கால் கட்டு போட்டா சரியாப் போயிரும்னு உங்க தாத்தாவும் ஆத்தாவும் உள்ளுருக்குள்ளயே என்னையை  புடிச்சு கட்டி வச்சாங்க. மனுசன் ..கொஞ்ச நாள்  அப்பிடியும்  இப்பிடியும்   இருந்து பார்த்தாரு  முடியலை . பழைய குருடி கதவை திறடின்ற கதையா மறுபடியும் அவர் வேலையை ஆரம்பிச்சிட்டார். ‘’

‘’  ஒரு வெள்ளாமை விளைஞ்சு வீடு வந்து சேர்ந்துட்டா போதும். மகராசனுக்கு உள்ளங்கை அரிக்க ஆரம்பிச்சுரும். உடனே  வெள்ளையும் சொள்ளையும் போட்டுகிட்டு  வெளிய கிளம்பிருவாரு. கூடப்போறதுக்கு  நாலஞ்சு வெட்டிப்பயல்கள்   இதுக்குன்னே இருப்பாய்ங்க . இப்படியே மைனர் வேலை பார்த்து பார்த்து தான்டி உங்கப்பன் சொத்து சுகம் தோட்டம் தொறவு அத்தனையையும் இழந்துட்டு வெத்து ஆளா வந்து சேர்ந்தாரு ‘’

அக்காவும் நானும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமலே தலைச்சுமையோடு நடந்து கொண்டிருந்தோம்.

 அம்மையும்  கொஞ்ச நேரம் எதுவும் பேசாமலே கூட நடந்து வந்து  கொண்டிருந்தாள்.  அய்யாவோட நெனப்பு வரும் போது எப்பவும் இப்படித்தான் விருமத்தியடித்துப் போய் இருப்பாள் .. அந்தக்காலத்துலயும் அய்யாவை ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டாளாம்..நாம் அம்மையை நிமிர்ந்து பார்த்தேன்.  கண்ணுலயிருந்து சாரை சாரையாக கண்ணீர் உருண்டு வந்தது. .பிறகு முந்திச்சீலையை வச்சு கண்ணை  துடைத்துக் கொண்டே  சொன்னாள்.

‘’ பெறகென்ன இவர் கூட சுத்திகிட்டு இருந்த சண்முகம் தான் இந்தப் பிஞ்சையை வாங்கினான்.. உங்கய்யாவோட  அம்மாவும் அய்யாவும் இத நெனச்சு நெனச்சே கவலைப்பட்டு சீவாத்தையும் விட்டுட்டாக..  கடைசீல                               சொந்தப்பிஞ்சைக்கே கூலிவேலைக்குப் போற நிலைமை வந்திருச்சேன்னு உங்கப்பனும்  குடிச்சிக் குடிச்சி கொடலு வெந்து அவுக பின்னாலேயே போய் சேர்ந்துட்டாரு ‘’  .என்று சொல்லி விட்டு  வரட்டு வரட்டு என்று மூக்கைச்சீந்தினாள் ‘’.

பிறகு என்ன நினைத்தாளோ  ஐயா தலைக்கு மேலே  வானத்தில்  நிற்பது போல  நினைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தபடி பேச ஆரம்பித்தாள்                                   ‘’ ஏ பிச்சுவட்டியான் பேரா கேட்டுக்கோ  நீ அழிச்ச காட்டை என் புள்ளைக ஒரு நாள் ஒரு பொழுதாவது விலைக்கு வாங்கிப் பொழைக்கத்தான் போறாக .நீ மேலயிருந்து பார்த்து பெருமைப்பட்டுக்கோ நான்  அம்புட்டுத்தான் சொல்லுவேன்‘’ என்றாள் .கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றாள். அக்காவும் கேவி கேவி அழுதாள். 

நானும் அழுது கொண்டே நின்றேன்

‘’ வாங்க மக்கா ‘’ என்று அம்மை நடந்தாள்.  ..

‘’ அய்யா எவ்வளவுக்கு நம்ம புஞ்சையை வித்தாரும்மா ?’’

‘’  அத ஏன் கேக்குற . அம்புட்டும் பவுனு வெளையுற பூமிடி. ஆடைக்கும் கோடைக்கும் வத்தாத கிணறு. இருபத்தி நாலு மணி  நேரமும் பம்பு செட்டு போட்டாலும் ஓடிக்கிட்டே தான் இருக்கும் . இதை எப்படி உங்க அய்யாகிட்டயிருந்து எழுதி வாங்கினான்னு அந்த கடவுளுக்குத்தான் தெரியும் . பவுனுல பவுன   எம்புட்டுக்கு குடுத்தாருன்னு யாருக்குத் தெரியும் ? . போயிச் சேர்ந்த அந்த மனுசன கேட்டாத்தான தெரியும் . ஆனால்  ஒண்ணு இப்பவும்  அவன் தான் அந்தப் பிஞ்சையை  பாடு பட்டுகிட்டு இருக்கிறான்.. ‘’ 

அம்மைக்கு மூச்சிரைத்தது. ஆனால் விடாமல் மறுபடியும் பேசிக்கொண்டே போனாள்,.

‘’ துட்டுன்னு ஒண்ணும் உருப்படியா வீடு வந்து சேரலை. நாலு இடம் வெள்ளையும் சொள்ளையுமா போனாரு. கூட சம்மூகம்  தான் போனான். வீட்டுக்கு  வரும் போது செழிக்க செழிக்க உங்களுக்கு உங்க திங்கன்னு  திம் பண்ணடங்கள் வாங்கி கிட்டு வந்தாரு.. கடைசில பார்த்தா ஒரு நாள்  சம்முகத்திடம் பட்ட கடனுக்கு புஞ்சையை எழுதிக் கொடுத்திட்டேன்னு  உங்க தாத்தாவுக்கு முன்னால வந்து தலையை சொரிஞ்சிகிட்டு  நிக்காரு ‘’

‘’ அப்பிறகு ?’’

‘’ அப்பிறகு என்ன உங்க  தாத்தாவும் ஆத்தாவும் தலையில தலையில அடிச்சிட்டு சம்முகத்துக்கிட்ட போய் நியாயம் கேட்டு நின்னாங்க. அவன் ஒன்னும் பேசல உள்ள போயி உங்கய்யா எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரத்தை எடுத்துட்டு வந்து அவுங்க முன்னாலே போட்டான் ‘’

பிறகு உங்க தாத்தாவைப் பார்த்து ‘’ பெரியாம்புளை  நான் ஏமாத்தி எதையையும் எழுதி வாங்கலை. உங்க மகன் சுய புத்தியோட சுவாதீனமா  எழுதிக் கொடுத்த பத்திரம் இது- இந்த தொகையை கொண்டு வந்து கொடுத்துட்டு மறுபடியும் எப்ப வேணுமின்னாலும் உங்க புஞ்சையை திருப்பி வாங்கிட்டுப் போங்க. .உங்க மகன் என்னைக்கும் போல பிஞ்சையை மேற் பார்வை பார்த்துக்கிட்டு இருக்கட்டும்  ‘’ .என்று  சொன்னானாம்,

பத்திரத்தில் ஏழு லட்சத்துக்கு கிரயம் பண்ணப்பட்டிருந்ததாம்,. தாத்தாவும் பாட்டியும் பத்திரத்தை பார்த்ததிலிருந்து விருமத்தியடித்துப் போனார்களாம். சோறு தண்ணி இறங்கவில்லை.. அவர்கள் பச்சை கூமாச்சி மலை,  வண்டிப்பெரியாறு எஸ்டேட் என்று அட்டைக் கடிக்குள் அரும்பாடு பட்டு தேடிய சொத்து  முழுவதும் கண் முன்னாலேயே கரைந்து போனதைப் பார்த்து அரை உசிராக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் நீண்ட நாள் உயிரோடு இல்லை. முதலில் பெரியாம்பளை அடுத்து கிழவி என்று போய் சேர்ந்து விட்டார்கள். அய்யாவும் புஞ்சையை கொஞ்ச நாள் மேற்பார்வை செய்து பார்த்து விட்டு , சொந்த பிஞ்சையிலேயே கூலி வேலைக்குப் போவதற்கு பிடிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.   

 யாருக்கும் சொல்லாமல் வெளியூர்களுக்கு சென்று சுற்றி வந்திருக்கிறார். கடைசியில் வீடு வந்து சேர்ந்த போது அரை உசிராக  வந்திருக்கிறார்.. கடைசி கடைசின்னு  யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. தனது அய்யா அம்மா சாவிற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதில் கெழுத்தி  முள்ளைப் போல குத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. ஊரும் உறவும் அவரது காது படவே அதை பேசவும் அவருக்கு  வேதனை அதிகரித்து விட்டது. மீண்டும் புஞ்சையை திரும்ப வாங்குவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கிறார். 

உடனடியாக ஏழு லட்சம் வேண்டுமென்று தெரிந்தவர்கள் ஒவ்வொருவரையும்  கேட்டிருக்கிறார். அவரின் நிலைமையைப் பார்த்து எல்லோரும் நக்கலாக சிரித்து விட்டு கை விரித்திருக்கிறார்களே தவிர யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. ஆனால் ஆளாளுக்கு போதுமான அளவுக்கு புத்தி மதி சொல்லியிருக்கிறார்கள். அய்யாவுக்கு அப்போது தான் உலகத்தைப் பற்றி சிறிது ஞானம் பிறந்திருக்கிறது. 

சில சமயங்களில்  கனவில் கூட ஏழு லட்சம் ஏழு லட்சம் என்று புலம்பியிருக்கிறார். பித்துப் பிடித்தது போல் எங்கேயோ வெறித்துக் கொண்டேயிருந்திருக்கிறார். சோறு தண்ணி கூட சரியாக எடுக்கவில்லை. 

 கடைசி கடைசியாக  அம்மையிடம்  ‘’ நம்ப பிள்ளைக தலையெடுத்து  வந்து நம்ப பிஞ்சையை மறுபடியும் வாங்கிப் பொழைப்பாங்க நீ தைரியமா இரு  ‘’  என்று சொல்லி விட்டு வேதனையிலேயே  தனது  உயிரை விட்டு விட்டாராம். அம்மை சொன்னாள்  ‘’ உங்கய்யா என்ன நோய்யில விழுந்தா செத்துப்போனாக ?    கையை விட்டுப் போன காட்டு நினைப்பு தான  கடைசில அவரை சாய்ச்சிருச்சு ‘

அய்யாவின் சாவைப் பார்த்து அம்மைக்கு அளவில்லாத  வேதனை ஒரு பக்கம்  அய்யா சொன்னதுக்காக அந்தப் பிஞ்சையை ஒரு நாள் ஒரு பொழுதாவது வாங்கியே தீரனும் என்ற வைராக்கியம் மறு பக்கம்  இந்த இரண்டுக்கும் இடையில் தான் அவள் தனது மீதி  காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சும்மா சொல்லக்கூடாது அண்ணனும் அரும்பாடு பட்டுத்தான் உழைச்சான்.

அப்பப்ப அஞ்சு பத்துன்னு அம்மை சுருக்குப் பைக்குள்ள காசை வச்சு அத அடுக்குப்பானைக்குள்ள போட்டு சேத்துவச்சிகிட்டு வந்தாள்.. ஒரு நாள் என்னைப்பார்த்து ‘’ நீ படிச்சு கலெக்ட்டராகி என் புஞ்சைய மட்டும் எனக்கு வாங்கிக் குடுத்துர்றா ராசா  நாங்க அத வச்சு கமலை இறைச்சாவது  பொழைச்சுக்குறோம் ‘’ என்றாள். நான் கலெக்டர் போல நினைத்துக் கொண்டு சரி சரி என்றேன்.

அண்ணன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அம்மையிடம். ‘ ஏம்மா மொதல்ல இந்தப்புள்ளப்பூச்சிப்பயலுக்கு கொழம்பை வச்சிக்குடு. இல்லன்னா  சொளகுல இருக்கிற சோத்துருண்டையைப்பூரா தின்னே காலிப்பண்ணிப்புடுவான் ‘’ என்றான். அம்மை வாய் விட்டு சிரித்து விட்டாள். . அடடா அம்மை முகத்துல சிரிப்பை பார்த்து எத்தனை காலம் ஆகிப்போச்சு என்று நான் நினைத்துக் கொண்டேன்.

இப்படியே எல்லாம் சந்தோசமாகத்தான் போய் கொண்டிருந்தது.  ஆனால் அண்ணன்  மேல யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை .வேலை வேலை என்று ஆளாப் பறந்துகிட்டு இருந்தவன் திடீர்னு  பேச்சி மதினிகிட்ட சிரிச்சு சிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்கான் ..திடீர்னு ஒரு நாள் அவள் கூடயே அவன் ஓடிப் போயிட்டான். முதல்ல சும்மா அண்ணன் கிட்ட லகலை பண்றான்னுதேன் அம்மை நினைத்திருக்கிறாள். ஆனால் விசயம் தெரிந்ததும் அப்படியே விருமத்தி அடித்துப்  போய் உட்கார்ந்து விட்டாள்.

 அரை நாள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தவள் எழுந்திருச்சு  சாவடிக்கு முன்னால் சென்று கை நிறைய   மண்ணை வாரி தூத்தியபடியே  ‘’ கலம் குடுத்து வளர்த்தாலும் காடை காட்டுல தான் ‘’ ‘’ கலம் குடுத்து வளர்த்தாலும் காடை காட்டுல தான் ‘’ என்று சொல்லி விட்டு மறுபடியும் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டாள்.

ஊரில் ஒத்த வீடு விடாமல் எல்லோரும் குசு குசுவென்று பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அம்மையின் முகத்திற்கு நேராகப் பேசுவதற்கு யாருக்கும் தைரியமில்லை.

‘’ பொம்பளை வளர்த்த புள்ளைக புத்தியோட பொழைக்காதுக ‘’’ என்ற பழமொழியை அண்ணன் உறுதியாக்கி விட்டதாக அம்மை அவ்வப்போது அங்கலாய்த்துக் கொண்டாள்.  பிறகு அவளுக்கு மூத்த பிள்ளை என்ற  ஒன்று இருந்தது என்பதையே அடியோடு மறந்து விட்டாள்.

பட்ட காலிலேயே படும் என்பது உண்மை போல அந்தக் காயம் ஆறுவதற்குள் அடுத்த அதிர்ச்சி  அக்காவின் வடிவத்தில் வந்தது. காலையில் தீப்பெட்டி ஆபிசுக்கு எல்லா பிள்ளைகளோடும் கம்பெனி பஸ் ஏறிப்போனவள் அடுத்து  வீட்டுக்கு திரும்பவேயில்லை. அங்கேயே கொடோனில் கட்டையடுக்கி  ஒருத்தனோடு  ஒடிப் போய் விட்டாளாம். அவன் யார் என்ன சாதி சனம் என்று யாருக்குமே தெரியவில்லை..

அம்மை இதை கேள்விப்பட்டதும் இடி விழுந்த ஆல மரமாக அப்படியே தரையில் சாய்ந்து விட்டாள். ஆடவும் இல்லை அசையவுமில்லை. கொஞ்ச நேரத்துக்கு பேச்சு மூச்சு இல்லாமல் போய் விட்டது. பச்சை தண்ணி பல்லில் படவுமில்லை. அவளாக அவ்வப்போது ஏதோ முனகிக் கொண்டாள் கடைசியில் தான் காதில் கேட்டது.

‘’ காடை வம்சம் அப்படித்தான் இருக்கும்.கலம் குடுத்து வளர்த்தாலும் காடை காட்டுலதேன். காடை காட்டுலதேன் ‘’ என்றே சொல்லிக் கொண்டேயிருந்திருக்கிறாள்..

அதற்குப் பிறகு அவள்  வீட்டை விட்டு வெளியே செல்வதே அபூர்வமாகிப் போனது.  கருக்கலியே வீட்டை விட்டு கிளம்பி காட்டுக்குப் போனால்   சாயங்காலம் மசமசன்னு பொழுதடைஞ்சதும் தான் வீட்டுக்கு வருவாள். குனிந்த தலை நிமிரவே மாட்டாள்.

நான் படித்து  முடித்து  அரசு குருப் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு செய்தி தொடர்பு துறையில்  உதவியாளராகப் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஏற்றுக் கொண்டதைப் பார்த்ததும்,  நான் என்னமோ கலெக்டர் ஆனது போல  அவ்வளவு மகிழ்ந்து போனாள்.  கண்களில் இருந்து கண்ணீர் கர கரவென்று கொட்டியது- முதல் மாத சம்பளத்துடன்  ஊருக்குச் சென்று அவள் கையில் கொடுத்து விட்டு அழைத்த போதும் அவள் என்னுடன் வந்து தங்குவதற்கு சம்மதிக்கவில்லை.

‘’ எனக்கென்ன ஒத்தக் கட்டைக்கு ?  இங்கனக்குள்ளளே கெடந்து முடக்கி எழுந்திருக்கேன். ஓன் கூட வந்து இருந்தா உனக்கு அது அவ்வளவு சவுகரியமாக இருக்காது ‘’ என்று  மறுத்து விட்டாள். ஊருக்கு சென்று பணம் கொடுத்தாலும் ‘’ போதும் போதும் நீ உனக்கு சேர்த்து வச்சுக்கோ ‘’ என்று மறுத்து விடுவாள்…

‘’ சரி .  நம்மை கையை விட்டுப் போன பிஞ்சையை மறுபடியும்  வாங்கிக் கொடுத்தால் ஒரு வேளை அம்மை முகத்துல  சந்தோசம் உண்டாகலாம் என்று நினைத்துக் கொண்டு அலுவலகத்தில் பெர்சனல் லோன் போட்டால்  எவ்வளவு கிடைக்கும் என்று நான் விசாரித்துக் கொண்டு  இருந்த போது தான் சம்முகம் மாமா என்னைத் தேடி வந்தார்..

‘’ மாப்பிள்ளை உங்களைப் பார்த்து பேசனும்னு தான் ஊருலயிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கேன் ‘’ என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து நெற்றி வியர்வையை துடைத்த படி பேசினார்.

அவரை அலுவலக கேண்டினுக்கு அழைத்துச் சென்று மின் விசிறிக்கு கீழே உட்கார வைத்து  டீ வாங்கி குடுத்த பின்பு என்ன விசயம் மாமா என்று விசாரித்தேன்.

‘’ மாப்பிள்ளை நேரா  உங்க வீட்டுக்கு போயி  உங்கம்மையைப் பார்த்து பேசிட்டுத்தேன் இங்க வாரேன். ‘’

‘’ சொல்லுங்க மாமா ‘’ என்றேன்.

மாமா இதற்காகவே காத்திருந்தது போல சடைவாக பேச்சை ஆரம்பித்தார்.

‘’ மாப்பிள்ளை இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்தது ஏதோ கெட்ட கனவா நடந்து போச்சு. உங்கய்யனுக்கும் எனக்கும் எவ்வளவு சிநேகிதம் உண்டுமுன்னு உங்களுக்குத் தெரியாது. ஆனா இந்த ஊரு உலகத்துக்கெல்லாம் தெரியும். எங்க போனாலும் ரெண்டு பேரும் உடம்பும் உசிரும் போல ஒன்னாவே தான் திரியுவோம்.. அப்பவெல்லாம் உங்கப்பன் ஏங்கிட்ட ‘’ டேய் உங்க வீட்டு கடைக்குட்டியை என் வீட்டுக்குத் தான்டா மருமகளாக்கப் போறேன்னு ‘’  அதிகாரமா சொல்லுவான்  ‘

 கொஞ்ச நேரம் பேச்சை  நிறுத்தி விட்டு . மறுபடியும் துண்டை எடுத்து முகத்தை துடைத்து விட்டு தொடர்ந்தார்.

‘’ ஆனா அதுக்கடுத்து என்னென்னமோ நடக்க கூடாததெல்லாம் நடந்து போச்சு .எனக்கும் தான் இடையில கொஞ்ச காலம் புத்தி பிசகிப் போச்சு. மனுசப் பெயல் தான மாப்பிள்ளை  நம்மல்லாம்  கடவுளா  ? எல்லாத்துலயும் கரெக்ட்டா இருக்குறதுக்கு ‘’

‘’ சரி தான் மாமா ‘’

இப்ப நம்ம கடைக்குட்டி வசந்தியும் டிகிரி முடிச்சிட்டு இப்ப வீட்ல தான் இருக்குது. கம்ப்யூட்டரெல்லாம் நல்லாத் தெரியும். நம்ம வீடு வசதியைப் பார்த்துட்டு எங்கெங்கயிருந்தோ பொண்ணு கேட்டு வாராக. .போன வாரம் கூட சென்னையிலயிருந்து வந்திட்டுப் போயிட்டாங்க. ஆனா எனக்கு மத்த பக்கம் பேசும் போதெல்லாம்  உங்க அப்பன்ட்ட வாக்கு  குடுத்துட்டமேன்னு நெஞ்சுக்குள்ள கெதுக்கு கெதுக்குன்னு இருக்கும் அதுக்குத் தான் நேரடியா உங்க கிட்டயே பேசிருவம்னு வந்திட்டேன்’’

‘’ மாமா முதல்ல நீங்க எங்க அம்மைகிட்டயில்ல பேசனும் ‘’

‘’ நானும் உங்கம்மைகிட்ட போய் பேசிப் பார்த்துட்டேன். புடி குடுத்து பேச மாட்டேங்குது.  ‘’

‘’ அப்படியா ?’’

‘’ ஆமா மாப்பிள்ளை ஏக்கா அது என்னைக்கா இருந்தாலும் உன் காடு தான் .உன்னை விட்டுப் போகாது. இருபது வருசத்துக்கு முன்னால உன் கிட்டயிருந்து வாங்கின பிஞ்சைச்கு வட்டியும் மொதலுமா இப்ப உன் பிஞ்சையோட சேர்த்து என் புள்ளையையும் மருமகளா உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கேன் . என்ன சொல்ற அப்டின்னே கேட்டுப்புட்டேன் ‘’

‘’ அதுக்கு அம்மை என்ன சொல்லுச்சு ‘? ’ 

‘’ இருபது வருசம் கழிச்சு இப்பத்தான் உனக்கு வழி தெரிஞ்சதா ?  உன்னால எத்தனை உசிரு  என் குடும்பத்துல போச்சுன்னு தெரியுமா ? அப்டின்னு கேட்குது   நான் என்னத்தை சொல்ல மாப்பிள்ளை. அந்தக் காட்டை நான் உங்கப்பன்ட்ட இருந்து வாங்கலன்னா அன்னிக்கு வேற எவன் கைக்கோ போயிருக்குமே,. பெறகு சென்மத்துக்கும் நீங்க  திருப்பி வாங்க முடியமா ? இதையெல்லாம் உங்க அம்மாவுக்கு சொன்னாலும் புரிய மாட்டேங்குது . நான் ஒத்துக்கிட்டாலும் என் புள்ளை ஒத்துக்கிற மாட்டான்னு சொல்லுது. அதான் சரி படிச்ச புள்ள நீங்க புரிஞ்சிக்கிருவீங்க ,.உங்க பதிலு என்னன்கு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன் ‘’ என்றார்

எனக்கு உடனடியாக என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. ‘’ மாமா இந்த வாரம் லீவுக்கு நான் ஊருக்கு வாரேன். வந்து அம்மைகிட்ட பேசிட்டு நான் உங்களுக்கு பதிலை சொல்றேன் ‘ என்றேன்.  

‘’ மாமா எழுந்து கொண்டே சொன்னார். நல்ல பதிலை சொல்லுங்க மாப்பிள்ளை. வழிய வர்ற சீதேவிய யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. .ஆனா  உங்க குடும்பத்துக்கு இப்ப ரெண்டு சீதேவி வருது. நல்லா யோசிச்சு சொல்லுங்க ‘’ என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

நான் ஊருக்குப் போய் அம்மையிடம் இதைப் பற்றி பேசிய போது ஒரேயடியாக தலையை குலுக்கி விட்டாள். ‘’ உங்கய்யா சாவுக்கு காரணமானவன் மகள் இந்த வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது ‘’ என்றாள் தீர்மானமாக. 

‘ நீ தானம்மா அந்தப் புஞ்சைளை திரும்ப வாங்கிப் பொழைக்கனும்னு சொன்ன ‘

‘’ காச குடுத்து தான் திரும்ப வாங்கி பொழைக்கனும்னு சொன்னேனே தவிர்த்து . அந்த வீட்டுக்குள்ள சம்பந்தம் விட்டுட்டுததான் பொழைக்கனும்னு இல்ல ‘’

‘’ இப்ப நம்ம நினைச்சாலும் அதே விலைக்கு அந்தப் பிஞ்சையை வாங்க முடியாதும்மா. அத மாதிரி பத்து மடங்கு வெல சொல்லுவாங்க ‘’

‘’ பரவால்ல ‘’ 

‘’ அது மட்டுமில்ல அந்தப் புள்ளைய யாரு கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் அந்தப் பிஞ்சையை கொடுப்பாராம்  சம்முகம் மாமா ‘’

அம்மைக்கு கோபம் வந்து விட்டது. .அதே மூச்சில் பொரிந்து தள்ளி விட்டாள்                  ‘’ பெரிய மாமாவ கண்டுக் கிட்டான் மாமாவாம். அப்பிடி குடுக்கலன்னா போறான். அவன் பொண்ணு வேண்டாம் அவன் புஞ்சையும் வேண்டாம் போ ‘’

அதற்கு மேல் அம்மையிடம் பேச முடியாது. தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று ஒத்தைக்காலில் நிற்கும் சுபாவாம் அவளுடையது. 

‘ஊர் பெரியவர்கள் நாட்டாமையென்று யார் யார் எடுத்துச் சொல்லியும் அம்மை கேட்பது போல் இல்லை. கோளாறு சொல்ல வந்தவர்களையெல்லாம் சன்ன வசவா வைதாள் ? ’ அந்தக் காலத்துல அவங்கப்பனை கொன்னான் இப்ப புள்ளையை கொல்லப் பார்க்கான். முத்து மாரி உனக்கு கண்ணில்லையா ? என்று ஊரு கோவிலுக்கு முன்னால் மண்ணை வாரி தூற்றினாள்.

விசயம் ஊர் முழுவதும் பரவி வெளியூர் வரைக்கும் சென்று விட்டது. இனிஎன் புள்ளைய யார் கெட்வாக ? என்று சம்முகம் மாமா மனைவி தலையிலடித்துக் கொண்டு ஒரு பாட்டம் அழுதிருக்கிறாள்.

ஊர் பெரியவர்களும் நாட்டாமைகாரர்களும் சொல்லி சொல்லி என் மனதை கரைத்தார்கள். ‘ அதெல்லாம் ஒரு கல்யாணம் காட்சின்னு முடிஞ்சு பேரன் பேத்தின்னு வந்தா எல்லாம் உங்க அம்மை இறங்கி வந்திருவாப்பா  ..காட்டை உன் பேர்ல எழுதி வாங்கி பத்திரத்தை உங்கம்மைகிட்ட குடுத்தியின்னா சரின்னு சொல்லிருவா. பேசாம கல்யாணத்தை முடிச்சுக்கோ ‘’’ என்று அடித்து சொன்னார்கள்.

எங்கள் திருமணம் பதிவுத் திருமணமாக விழுப்புரத்தில் நடந்தது. அண்ணணும் அக்காவும் குடும்பத்தோடு திருமணத்திற்கு வந்திருந்தார்கள். அம்மை வரவில்லை. அடுத்தடுத்து நவீனும் , திவ்யாவும் பிறந்த போது சொல்லி விட்டும் எட்டிப் பார்க்கவில்லை.. சரி நாங்கள் போய் பார்த்து விட்டு  வரலாம் என்று சொல்லி அனுப்பினால்’ ‘’ அவனோ அவன் பொண்டாட்டி புள்ளைகளோ என்னைப் பார்க்கனும்னு இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சா உசிரில்லாத என் கட்டையத்தான் பார்த்துட்டு போகனும்னு சொல்லிரு ‘’ என்று ஆட்கள் மூலமாக பதில் சொல்லி விட்டாள். அவளது வைராக்கியம் எனக்கு நன்றாகத் தெரிந்ததால் நான் அந்தப் பக்கமே தலைகாட்டவில்லை. ஊரிலிருந்து மாமனார் மாமியார் அண்ணன் அக்கா யாராவது எங்களை பார்க்க வேண்டுமென்று நினைத்தால் இங்கே வந்து தான்  பார்த்து விட்டுப் போவார்கள்.

பத்து வருடங்களுக்கு பிறகு ஊருக்குள் நுழைந்த போது எல்லாமே மாறியிருப்பது போல் தெரிந்தது. ஆனால் எங்கள் ஓட்டு வீடு கொஞ்சம் கூட மாறவில்லை,. அதே ஒற்றை குண்டு பல்பு தான் .எரிந்தது. மேற்கூரை  ஓடெல்லாம் சிதிலமடைந்து நு|லாம் படையாக தொங்கியது- அம்மையை கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள். அரை உசிராகக் கிடந்தாள். பாதி கண்கள் மூடியபடி இருந்தது. தலைமாட்டிலேயே அய்யாவின் புகைப்படத்தை வைத்திருந்தாள்.. அக்கா அம்மையின் காது பக்கத்தில் போய் சொன்னாள்.

‘’ தம்பி வந்திருக்கான் கண்ணை திறந்து பாரும்மா ‘’ அம்மை கண் திறக்கவில்லை.

‘’ தம்பி புள்ளைகளும் வந்திருக்காக. பாரு. .உன் பேத்தியாளைப் பாரு அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கா ‘’ என்றாள்

இதைக் கேட்டதும் அம்மை பிரயாசைப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள். உடலில் அசைவுகள் தெரிந்தன. அக்கா திவ்யாவை இழுத்து அம்மையின் தலை மாட்டில் கொண்டு போய் நிறுத்தினாள். எங்கே தான் இவ்வளவு நாளும் அடக்கி வைத்திருந்தாளோ , அம்மையின் கண்களில் கண்ணீர் புது வெள்ளம் போல பிரவாகமெடுத்து ஓடியது. தன்னையே சிறு வயதுக் குழந்தையாக பார்ப்பது போல திவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யா பாட்டியின் முகத்தை தனது பிஞ்சு கரங்களால் வருடிவிட்டாள். அம்மையின் உடம்பு முழுவதும் சிலிர்த்து அடங்கியது.

அண்ணன் நவீனை இழுத்துக் கொண்டு வந்து அம்மையின் தலைமாட்டில் நிறுத்தினான். சுற்றியிருந்த பெண்கள் எல்லாம் ‘’ இந்தா ஆத்தா  உன் பேரன் கலெக்டர் மாதிரி வந்து நிக்கான்  பார்த்துக்கோ என்றார்கள். ‘’

அம்மை கண்களை மலங்க மலங்க உருட்டி விழித்த படி நவீனைப் பார்த்தாள். அவள்  உடம்பு முழுவதும்  மகிழம்பூவாக மலர்வது எனக்குத் தெரிந்தது. நவீன் எங்கள் காட்டுப் பாத்திரத்தை அம்மையின் கையில் கொடுத்தான். ‘’ பாட்டி இந்தாங்க நம்ம காட்டுப் பத்திரம் வாங்கிக்கோங்க ‘’ என்றான். அம்மையின் கைகள் கிடு கிடுவென்று நடுங்கின. அவள் அதை வாங்கவில்லை. . அண்ணணும் அக்காவும் ‘’ வாங்கிக்கோமா வாங்கிக்கோமா இதுக்குத் தான இவ்வளவு நாளும் உசிரோட இருந்த ‘’ என்றார்கள். நவீன் அம்மையின் கையில் பத்திரத்தை வைத்தபடி நின்று கொண்டேயிருந்தான். அம்மை  அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

அக்கா நவீனிடம் ‘’ ராசா உங்க ஆத்தா அதை வாங்கலைன்னா பரவாயில்லை. உங்க தாத்தா போட்டாகிட்ட வை அவரு வாங்கிக்கிருவாரு ‘’ என்றாள்.

நவீன் பத்திரத்தை தாத்தாவின் புகைப்படத்துக்கருகில் வைத்தான். அம்மை சாரை சாரையாக கண்களில் வழிய அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..பிறகு அவனை அருகே வரச் சொல்லி கண்களால் சாடை காட்டினாள். அவன் அருகே சென்றதும் எலும்பும் தோலுமான தனது கைகளால் அவனது கைகளைப் பிடித்துக் தன் கன்னத்தில் சேர்த்துக் கொண்டு , தனக்குள்ளேயே ஏதோ முனு முனுத்துக் கொண்டிருந்தாள். அவள் வாய் விட்டு வெளியே சொல்லாமல் போனாலும் என்ன முனு முனுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்கு மட்டும் நன்றாக கேட்டது.

‘’ கலம் குடுத்து வளர்த்தாலும் காடை காட்டுலதேன் காடை காட்டுல தேன் ‘’

                 

One Comment on “தங்கேஸ்/காடை”

Comments are closed.