சுஜாதா/தீபாவளி மலர்கள்

தீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி “என்னடா ? கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்பார்.
அவருக்கு அன்று அது ஒரு கடமை.
பார்க்கும் எல்லோரிடமும் இதை கேட்பார்.
போன் அடித்தால் அதே “கங்கா ஸ்நானம் ஆச்சா” விசாரிப்புகள்…
என் வீட்டு எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கி விடுவார்.
ஆனந்த விகடன் கொஞ்சம் சைஸ் சின்னதாக இருக்கும்.
கல்கி ஒரு மாதத்து நியூஸ் பேப்பர் எல்லாம் பைண்ட் செய்தால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் இருக்கும்.
எனக்கு ஆனந்த விகடனில் பின் அட்டை , மற்றும் உள்ளே இருக்கும் தலை தீபாவளி, மைசூர் பாக்கில் மண்டை உடையும் ஜோக்ஸ்…..
“ஏங்க…ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது”
“திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது”
போன்ற ஜோக்ஸ் எல்லாம் இப்போது கிடையாது.
தீபாவளி ஸ்வீட் எல்லோர் விட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்பே பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.
அதில் நிச்சயம் தீபாவளி லேகியம் இருக்கும்(தீபாவளி மருந்து என்றும் பாடம்).
பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு என்று எல்லோரும் வீட்டிலிருந்தும் தீபாவளி பக்ஷணம் வரும்.
அதே போல் நானும் எங்க வீட்டு பக்ஷணத்தை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்கணும்.
இன்று கிருஷ்ணா ஸ்வீட், அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்னெக்ஸ் என்று மாறிவிட்டோம். “தீபாவளி பக்ஷணமா ? நோ வே, ஆர் யூ கிரேசி ?”
இப்போது தீபாவளி
“இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக” காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடிகிறது.
நடிகைகளின் அசட்டு பேட்டி, புது பட பாடல்கள், பட்டிமன்றம் என்பது தான் இப்போதைய தீபாவளி மெனு.
இந்த சானலை பார்க்கவா அதை பார்க்கவா என்ற நிலையில் நமக்கு நேரம் சரியாக இருக்கிறது.
“போனை எடுத்து கீழே வை, நல்ல சீன் பார்க்கிறப்ப எவனாவது உயிரை எடுப்பான்”
“சீக்கிரம் பெட் ரூமில் இன்னொரு டிவி வாங்கனும் எந்த பிரோகிரமும் சரியா பார்க்க முடியர்தில்லை” என்று பேசிக்கொள்ளும் நாம் வாழ்கை, உறவுகள், நட்பு என்று எல்லாவற்றை யும் 29 இன்ச்சில் (டிவியில்) அடக்கிவிட்டோம்.
இன்னும் கொஞ்ச நாளில் “தீபாவளிக்கு நாங்க எல்லாம் வாங்கிவிட்டோம் அப்ப நீங்க ?” என்று டிவியில் விளம்பரத்தில் காலி பையை தூக்கி காண்பிக்கும் குடும்பத்தை மட்டும் தான் நாம் பார்க்க போகிறோம்.
பழசை எல்லாம் யோசித்தால் எதோ ‘கருப்பு-வெள்ளை’ திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது

One Comment on “சுஜாதா/தீபாவளி மலர்கள்”

Comments are closed.