எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு?/நாஞ்சில் நாடன்

(முகநூலில் : ஆர்.கந்தசாமி)

இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

“ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.

“அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”


நன்றி: விகடன்