மிட்டாய் தாத்தா/?டி.குலசேகரன்

இவரின் வயது அதிகம் இல்லை. 113 தான். தற்சமயம் தஞ்சாவூர் பகுதியில் ஒரு ஐம்பது சதுரஅடி அறையில் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்.

இவரின் பெயர் முகமது அபுசாலி. இவரிடம் எந்தவித மத அடையாளங்களும் இல்லை. எந்த மதத்தையும் சாராமல், மனிதத்தை சார்ந்திருக்கிறார். அத்தனை ஆரோக்கியமாக, உற்சாகமாக இருக்கிறார். ஒரு குழந்தையின் மனநிலையோடே, அத்தனை குதூகலமாய், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படி குஷியாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு ஐம்பது வயது ஆகிற வரை பர்மாவில் வசித்திருக்கிறார்.

அப்போது பர்மா வந்திருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து பேசி இருக்கிறார். உடனே தமிழகம் வருகிறபோது, எந்த உதவி தேவைப்பட்டாலும் வந்து சந்திக்கும்படி தெரித்திருந்தார். ஆனாலும் மிட்டாய் தாத்தா அப்படி போய் பார்க்கவே இல்லை. தன் கையை நம்பி கடைசி வரை வாழ முடியும் என்கிற நம்பிக்கை.

இப்போது வரை தனிக்கட்டை தான். இல்லாதவர்களுக்கு எல்லோருமே உறவுகள் தானே.

தாத்தா தனக்கான உணவிற்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம், தன்னிடம் அன்றாடம் எஞ்சுகிற பணத்தை தந்து, அவர்கள் தருவதை சாப்பிட்டு கொள்வார்.

பர்மாவில் இந்தியர்களை அடித்து துரத்தும் கலவரம் நடந்தபோது, இவரது குடும்பத்தார் அனைவரும் பலியாகி விடுகிறார்கள். இவரைத் தவிர.

அப்போதைய பிரதமர் நேருவின் அறிவுறுத்தலின்படி, இவர் தமிழகம் கப்பல் மார்க்கமாக வந்து சேர்ந்திருக்கிறார்.

முதலில் கும்மிடிபூண்டி வந்து சேர்ந்திருக்கிறார். பிற்பாடு வியாசர்பாடி.. பிற்பாடு பாண்டிச்சேரி அதன் பிற்பாடு தஞ்சாவூர் என்று ஒவ்வொரு ஊராக வாழ்க்கையை தேடி கால்நடையாகவே நடந்து நடந்தே அத்தனை ஊர்களுக்கும் பயணித்திருக்கிறார்.

ஏன் என்று கேட்டால், பொக்கை வாய் தெரிய கணீர் குரலில், ‘அப்போ கையில காசு எதும் இல்லை’ என்கிறார்.

இப்போது இருக்கிறதா? என்று கேட்டால், இப்போதும் இல்லை. ஆனால், மிட்டாய் வியாபாரம் செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். கையில் எதுவும் இல்லாததை அத்தனை மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

இவரின் நண்பர்கள் பெரும்பாலும் பத்து வயது சிறுவர்சிறுமிகள் தான்.

இவர் தஞ்சாவூர் வந்து சேர்ந்து 63 வருடம் ஆகிவிட்டது. வந்த புதிதில் பேருந்து நிலையம் அருகே ஒரு டீக்கடையில் வேலை பார்த்திருக்கிறோர். அங்கே இருக்கிறவர் தான் குளுகோஸ் மிட்டாய் தயாரிக்க இவருக்கு கற்று கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு இவர் தனியாக குளுகோஸ் மிட்டாய், இஞ்சி மரப்பா, தேங்காய் மிட்டாய் தயாரித்து, மூங்கில் தட்டில் ஏந்திக்கொண்டு தானே தெருத்தெருவாய் நடந்து போய் விற்றுவிட்டு வருகிறார்.

அதில் கிடைக்கிற சொற்ப வருமானத்தில், நிறைவாய் எதிர்பார்ப்பற்ற வாழ்வை தஞ்சாவூர் ஆட்டக்கார தெருவில், வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எளிய பருத்தி சட்டை, நான்கு முழ வேட்டி, வெயிலுக்கு ஸ்டைலாக ஒரு தொப்பி இவ்வளவு தான் மிட்டாய் தாத்தாவின் அடையாளம்.

இப்போதும் இவரின் அகம் மகிழ்வில் நிறைந்து ததும்புகிறது. எப்போதும் குழந்தைகளோடு கதைகள் பேசி மகிழ்ந்திருக்கிறார் இந்த குழந்தைமை மாறாத மனிதர்.

மிட்டாய் விற்றபடி இப்போதும் தினமும் பத்து கிலோமீட்டருக்கு குறைவில்லாமல் நடக்கிறார். குரல் தெளிவாக கம்பீரமாக இருக்கிறது.

இந்த 113 வயது இளைஞருக்கு இன்னுமே முதியோர் பென்சன் வழங்கப்படவில்லை. இப்போது தான் அங்குள்ள கலெக்டர் இவரின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் கேள்விப்பட்டு, புதியோர் பென்சனுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறார்.

திவ்யா, வேதா என்கிற தன்னார்வலர்கள் இருவரும் தங்களின் யூ ட்யூப் சேனல் மூலம் பலரும் அறியச் செய்திருப்பதோடு, தாத்தாவை தங்கள் குடும்ப உறுப்பினராகவே பாவிக்க துவங்கி இருக்கிறார்கள். மிட்டாய் தாத்தா தனித்தே வாழ்ந்து வந்தாலும், இந்த புதிய சொந்தத்தால் நெகிழ்ந்து தான் போகிறார். உறவில்லாமல் போனவருக்கு உலகமே உறவான கதை இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறது.

இவரை பொறுத்தவரை எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்கிறவர். இல்லையென்று ஒரு நாளும் நினைத்தவரில்லை. எதுவுமே இல்லாதிருந்த போதும்.

குழந்தைகள் மிட்டாய் வாங்குகிறபோது, கையில் காசில்லாமல் மிட்டாய் வாங்க அம்மாக்களிடம் காசு கேட்டு அடிவாங்கும் குழந்தைகளின் அம்மாக்களிடம் குழந்தைகளை அடிக்க மட்டும் செய்யாதீர்கள் என்று சொல்லி விட்டு, அவர்கள் என் சகாக்கள் என்று சொன்னபடி, அவர்களிடம் காசு வாங்காமலேயே மிட்டாய் கொடுத்து விட்டு வந்து விடுவது, இவரின் அன்றாட வாடிக்கை.

இவரிடம் இல்லையென்று சொல்லாமல் கொடுக்க எவ்வளவோ இருக்கிறது. பறவையை போல அன்றைய வாழ்க்கையை பற்றி மட்டுமே யோசிக்கிறார். எப்போதும் புன்னகை தான். குழந்தைகளோடு அரட்டை தான். பரவசம் தான். குதூகலம் தான். கொண்டாட்டம் தான்.

மகிழ்ச்சி என்பது சௌகர்யத்தில் இல்லை. எதுவுமேயில்லாவிட்டாலும் எல்லாமும் இருக்கிறதை உணரத் தெரிகிற மனதில் இருக்கிறது என்பதன் உயிர்ப்பான நிரூபணம் இந்த மிட்டாய் தாத்தா.