எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

(தொடர்ச்சி..)

2.

(தொகுப்பாசிரியர் : மகரம்)

ஒரு பத்திரிகை ஸ்தாபனத்தில் பார்த்தேன். நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்ப கையெழுத்து பிரதிகளுக்கென்று ஒரு முழு அறையை ஒதுக்கி யிருந்தது (இருக்கிறது). கூரைவரை ஓங்கிய ஷெல்புகள் நிறைந்து, சுவரோரம் வேறு. இடுப்பளவு ஆழத்துக்கு அடுக்கி, இன்னும் கோணிகளில் (தபால் தலைகளுடன் வந்தவை, வராதவை) பிரிக்க.. எனக்குத் தலை சுற்றியது. இந்த சமுத்திரத்தை நீந்தியா, வாராவாரம் அந்த 60 65 பக்கங்களுள் இடம் பெற்றிருக்கும் மீன்கள்? இவைதவிர, பிரசுரத்துக்கு ஏற்கப்பட்டு, வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் (ஆம், வருடக்கணக்கில்) க்யூவில் காத்திருக்கும் கதைகள்.!

எனது “பிள்ளை நாட்களில்” இவ்வளவு உற்பத்தி இருந்ததாகத் தெரியவில்லை. அதற்குப்மேல் ஆயிரம் பத்திரிக்கைப் பெருக்கம் வந்துவிட்டதென்றாலும், இந்தப் புற்றீசல் படையெடுப்புக்கெதிர், பத்திரிகைகள்தான் என்ன செய்ய முடியும்? இது திகைப்புக்குரியதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது? தடம் மாறிப் போனதால் தரம் குறைந்து போன சரக்கு எழுத்தாளனுடைய சுய கௌரவத்தையும் வளர்ச்சியையும் முழுக அடித்துக் கொண்டிருக்கிறது.

எப்படியேனும் என் பெயரை என் எழுத்துடன் அச்சில் கண்டால் சரி எனும் இளவல் ஏக்கம் எனக்கு புரியாததி ல்லை. ஆனால் அது முறையான நோக்கு இல்லை. ஆனால் அதுதான் இப்போது நிலவுகிறது. இதை களையுமளவுக்குத் திட சித்தமும் பொறுமையும், நன்றாக எழுத வேண்டும் என சங்கல்பம் வேண்டும் புது ஆரம்பம் இனியேனும் எனும் நம்பிக்கையைப் பயிர் செய்துகொள்ளல் வேண்டும். ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இந்தப் புதுத் தொடக்கத் தீர்மானமே எழுத்து பயக்கும் ஒரு சந்தோஷம் ; அந்த சந்தோஷத்தில் ஊறும் பலம். எழுத்துக்குள்ள சுய கௌரவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, இந்த அவல நிலையினின்று மீண்டாக வேண்டும்.

உள்ளதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டுவதாக, யதார்த்த வெளியீடு எனும் பெயரில் இலக்கியத்தின் சுகாதாரமே கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. உடல் கழிவுகள் முதற்கொண்டு பச்சையாக, சாவதானமாக, விவரமாக வர்ணிக்கப்படுகின்றன – அதுவும் அவசியமே இல்லாமல். படுக்கையறையில் நடப்பது, பட்டப்பகலில். பட்டை வாசலுக்கு (slow motion) இல் கொண்டு வரப்படுகிறது. பேச்சின் சுயேச்சை இந்த மட்டிற்குத் தன்னை இழிவுபடுத்திக் கொண்டாகிவிட்டது. இறைவன் இதற்காக எழுத்தை அறிவிக்கவில்லை. சுயதுலக்கத்துகுத் தவச்
சாதனையாகத்தான் அளிக்கப்பட்டது.

ஆகவே, கதையை கதைக்காகவே எழுதுவேன் எனும் திடசங்கல்பத்துடன் இதில் இறங்கத் தயாராக இருப்பவர்களுக்கு , என் அனுபவத்தை ஒட்டி என் யோசனைகளைக் கூற முடியும். பேனா, வயிற்று பிழைப்புக்குச் சாதனமாக எனக்கு வாய்க்கவில்லை. என் உத்யோகம், நாளைக் கவலை எனக்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டதால் நான் இஷ்டப்பட்டதை, என் இஷ்ட வேளையில், இஷ்ட முறையில் பயின்று, சோதனைகளிலும் இறங்க முடிந்தது. எழுத்தாளன் தன் கலையில் முன்னேற வேண்டுமானால் இது ஒரு அத்தியாவசியமான நிலைமை.ஆகையால், இதை வற்புறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வசதியில்லாமையால், முத்தான முன்னோடிகளில் பலர், எழுத்துக்கே பலியாகிவிட்டார்கள்.
ஓரளவு சௌகரியம் வேண்டும். ஓரளவு பசியும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் இந்தக் கலையில் தேடல் தீவிரம் நின்று வளரும்.
மீண்டும் சொல்கிறேன். என் அனுபவத்தை ஒட்டித்தான் இவ்விஷயம்பற்றி என்னால் பேசமுடியும். அம்முறையில் இது
சம்பந்தமாகச் சில தகவல்கள் என்னைப்பற்றி தேவைப்படுகிறது.

சிறுகதைத் தொகுதிகள் மட்டும் என்னுடையது இதுவரை பத்து வெளிவந்திருக்கின்றன. ஜனனி, இதழ்கள், பச்சைக்கனவு, கங்கா, அஞ்சலி, அலைகள், தயா, த்வனி, மீனோட்டம், உத்தராயணம். பட்டியல் தரும் நோக்கம், தேடிப்பிடித்துப் படிப்பவர் பயன்பெற வேண்டும், பெறுவார்கள்.

‘ஜனனி’ எனும் பெயர் இப்போது பல குடும்பங்களில் சூட்டப்படுகிறது.

காயத்ரி எனும் பெயருக்கும் (அஞ்சலித் தொகுதியில் ஒரு கதைத் தலைப்பு) அதே போல், கதை வந்த பிறகு மவுசு கூடியிருப்பதாக என் கருத்து.

‘பச்சைக்கனவு’ எனும் கதை அகில அந்தஸ்துக்குரித்தானது. ஒரு கூட்டத்தில், அமெரிக்க அறிஞரால் குறிக்கப்பட்டது.

மேலும் யோகம், புற்று, பூர்வா, கொட்டுமேளம், குருக்ஷேத்ரம், இதழ்கள் வரிசையில் இரண்டு மூன்று கதைகள், பாற்கடல் இத்யாதி இவை தோன்றி 30/35 வருடங்களாயினும் இன்னும் பேசப்படு கின்றன.

என் பெருமையெல்லாம் இம்மட்டுந்தான். வியாபார ரீதியில் என் எழுத்து சுழி. பணத்தேவை என்பது யாருக்கும் எப்போதும் உளது. ஆகையால், என் எழுத்து அந்த முறையில் எனக்குப் பலன் அளிக்கவில்லை. எனக்குப் பெரிய மனத்தாங்கல் இல்லை. எழுத்துலகில் எனக்குக் கிடைத்திருக்கும் பங்குபற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என் போன்ற வைதீக எழுத்தாளன் அதற்கு மேல் ஆசைப்படுவதில் பயன் இல்லை; படவும் கூடாது. இதையும் மனத்தில் வைத்துக்கொண்டு, சிறுகதை எழுதுவதுபற்றி எனக்குத் தெரிந்ததை இஷ்டப்பட்டவர் தெரிந்துகொள்ளட்டும்.

இந்தத் தலைப்பு கொடுத்து எனக்கு அழைப்பு வந்ததும், எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இந்தக் கட்டுரை, எழுத்தாளனுக்கா? எழுத்தாளனல்லாத வாசகனுக்கா? பிறகு நானே தேறினேன். இருவருக்கும் பிரமாத வித்யாசம் கற்பிக்கத் தேவையில்லை. எழுத்தாளனும் வாசகனே. கலையார்வம் படைத்த வாசகனும் எழுத்தாளனே. கட்டுரையில் அவரவர்க்குப் பொருந்து வதை அவரவர் ஏற்றுக்கொள்ளட்டுமே!

2 Comments on “எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்”

Comments are closed.