
தானெங்கும் நகர்வதில்லை.
தனிமையும் எளிமையும் நிரந்தரம்.
தவ வாழ்வாய் அக ஒடுக்கம்.
நூற்றாண்டு ஆயிரமாண்டு தாண்டும்
வேரின் ஆழமது மிகப் பழமை.
வேய்ந்த புதுக்கூரை
கட்டிய புது மண்டபம்
புதுக்கலசம் பொம்மைகள்
கோபுரங்கள் என
எப்போதேனும்
கால இடைவெளியில்
வாய்ப்பதுண்டு.
வேர் பற்றி
உயர்ந்து பறந்து
விரிந்த
வம்ச வழிபாட்டுக் கிளைகள்
உலகளக்கும்.
பல வருடங்கழித்து
சரண் பாதமென
தேடி வந்து நின்றாலும்
நேற்றுப் பார்த்தது போல்
புன்னகைத்து
சிறு ஆரத்திக்கும்
நெய்விளக்கிற்குமே
அகமகிழ்ந்து
வேண்டுவன தாண்டி
தோன்றும் வளம் யாவையுமே
அத்தனை ஆசையாசியாய்
தந்தருளும் குலதெய்வம்
எப்போதும் நமக்கு
இறைவடிவில் உறைந்தருளும்
தொன்மைத்
தாத்தாவோ பாட்டியோதானே!

குல தெய்வம் நம் முன்னோர்களே! அருமையான விளக்கம்