எழுதுவது எப்படி? – 3/லா.ச.ராமாமிர்தம்

(தொகுப்பாசிரியர் : மகரம்)

(தொடர்ச்சி..)

3.

மனிதனின் புற, அக வளர்ச்சி-அந்தந்த நாட்டின் பூமி, சீதோஷ்ணம், தாவரம், உணவு பாக்கியம், உயிர்வளர்ச்சி நிலைக்கேற்றபடி அவர் நடை, உடை, மொழி, பாவனை, பழக்க வழக்கங்கள், பண்புகள், தாபங்கள், நினைவுகள், சிந்தனை, தத்துவம்-(இந்த வகையில் சொல்ல விட்டுப்போனவை) எல்லாம் அமைகின்றன என்று பெருவாரியாகச் சொல்லலாம் என்பது என் துணிபு. அந்தந்த நாட்டின் இலக்கியமும், இந்தத் தன்மைகளின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கமுடியும். அப்படி இருந்தால்தான் அது அந்நாட்டின் உண்மையான இலக்கியம். ஆங்காங்கே எப்படி எப்படியோ, அப்படி அப்படி, அவரவர் உடைகளை அணிந்து அவரவர் உணவுகளை உண்டு, எண்ணங்களை எண்ணி, ஆசாரங்களைப் பேணிச் சொல்லும் எழுத்தின் சுவை சுவைதான்; அதற் குரிய மதிப்பும் தனிதான்.

ஆகவே, ப்ளூ ஜீன்ஸ், பிக்கினி-ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் தெரியாமல் ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்று திரிசங்கு நாகரிகம், மொழி ( ஹாய், Howde?Yar, Yar? Hooi, Whoopee”) ஒன்று நம்மை வாட்டிக்கொண்டிருக்கிறதே அதில் முழுக்கவனம் இழக்காமல்:

காவிரியின் படித்துறையில் குதிகால் ஜலத்தில் நின்றபடி மாலைவேளையில் சந்தியாவந்தனம் செய்பவர்களையும்,

இந்தப் பக்கம் மலைக்கோட்டை, அந்தப் பக்கம் ஆனைக்கா கோபுர திக்கை நோக்கி இருகைகளையும் ஏந்தி வணங்குவோரையும்.

நெற்றியிலும், பாதங்களிலும் பசு மஞ்சள் பளிச்சிட இடுப்பில் நிறைகுடத்தோடு படியேறும் பெண்டிரையும்.

-இது ஒரு மாதிரிக்கு (sample)ச் சொன்னேன். கூடவே, இது என் காவிரி; என் சிந்தாமணி, என் திருச்சி, என் மலைக்கோட்டை, என் பூமி-புத்தகத்தின் பக்கங்களில் என்றும் சந்திக்க அலுக்காத என் மக்கள் எனும் சொந்தம்-வாசகனுக்குத் தொற்ற வைக்கும் சொந்தம் இருத்தல் வேண்டும். நம் கலாச்சாரம் நம் கண்ணோட்டத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இந்தக் கருத்துடன் பேதம் கொள்வோர் இருக்கமுடியும். ஆனால், என் முகத்தைப் பார்க்க முடியாத கண்ணாடி என்ன பயன்?

பாரதியின் ‘காணி நிலம் வேண்டும்’-அவன் வரம் கேட்கும் முறையை ஒரு பக்காச் சிறுகதையென்று சொல்வேன். காட்சியமைப்பு, பாத்திரப் படைப்பு-இரண்டே பேர்-அந்த ஆசைகளின் தீர்மானமான வெளியீடு-perfect சிறுகதை. கதையில்லை; ஆனால், வளமான mood; சரி, இருக்கட்டும்.

(இன்னும் வரும்)

எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “எழுதுவது எப்படி? – 3/லா.ச.ராமாமிர்தம்”

Comments are closed.