4. எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

(தொகுப்பாசிரியர் : மகரம்)

ஒரு கோவிலில் பார்த்தேன். ஒரு பெரிய லிங்கத்துள் சிட்டுச் சிட்டாய்ச் செதுக்கிய, அதே மாதிரி ஆயிரத்தெட்டு லிங்கங்களை.
திருச்சி மலைக்கோட்டை மூலவர் மாதுர் பூதேசுவர லிங்கத்துக்குப் பக்கவாட்டில் ஏணிமேல் ஏறித் தினம் அபிஷேகம். அவ்வளவு உயரம், அவ்வளவு பெரிது.
மதுரை மீனாட்சி-வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி- மூலவர் உருவம் சிறியன. ஆனால், அந்த மூர்த்தங்கள் இயக்கும் ஆட்சி பெரிது.
அடுத்தாற்போல், தஞ்சையில் ப்ருகந்நாயகி, சரியான வாட்டசாட்டமான மிகையான உருவம்.
கீர்த்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல.
மணிக்கூண்டின் சுற்றும் ஒளிக்கதிர் கடலில் மூன்று மைல் வீச்சுக்குக் கப்பல், ஓடம், கட்டைமரம், தோணி, ஒற்றையாக நீஞ்சுவோன் யாவருக்கும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
மரத்தடியில் குரு, சிஷ்யனுக்கு உபதேசித்துக்கொண்டிருக் கிறார். ஒரு சிஷ்யன் மட்டுந்தான்.
“இதுவரை எனக்குத் தெரிந்தவை உனக்கு உபதேசித்தது அனைத்தும் உனக்கும் எனக்குமிடையில் மட்டுந்தான்.”
ஆயிரம் அர்த்தங்களைக் குறியீடுகளாகவே தன்னுள் அடக்கியது.
தெரிவித்தது தெரிவித்தபடி வெளிச்சமாயது.
உள்ளடக்கத்திலோ, கதையம்சத்திலோ, நடையிலோ, அட்டஹாஸம் காட்டுவது. குரலடக்கம் கொண்டது.
சிறுகதைகள் இத்தன்மையன. மொத்தத்தில் கஸ்தூரிப் பெட்டியைத் திறந்த மணம்.
மேனாட்டுப் பலகதைத் தொகுதிகளில் அவ்வப்போது இடம் பெற்றுக்கொண்டு, நாற்பது பக்கங்களுக்குக் குறையாத, Unto the Last எனும் கதை (by John Galsworthy) சிறுகதையாகவே கணிக்கப்படுகிறது. எந்த அளவுகோல்? எனக்குப் பிடிபடவில்லை.
ஒரே பாரா: `A Separate Peace” என்கிற தலைப்பில் சிறுகதை என்கிற கணிப்பில் ஒரு சொல்லோவியம், அதன் படைப்பாளி Hemingway-க்கு இன்னும் புகழை விளைவித்துக்கொண்டேயிருக்கிறது. அளவுகோல்? மறுபடியும் கைவிரிக்கிறேன்.
ஆனால், அளவுகோல் மாறிக்கொண்டேயிருக்கும். கஜம், மீட்டராகிவிட்டது. எல்லாம் சமுதாயத்தின் சௌகரியத்துக்குத் தானே! ஆகையால், இவை போன்ற நிர்ணயிப்புகளால் பயன் இல்லை என்றே தோன்றுகிறது.
“Barn Burning”, “A Bear Hunt” William Faulkner நாவல்களிலிருந்து இரண்டு அத்தியாயங்கள், சிறுகதைகளாகவே, கதைத் தொகுதிகளில் பன்முறை தோன்றியிருக்கின்றன. படிக்கை யில் இவை தம்முள்தாம் நிறைந்திருக்கின்றன. அதனால் சிறுகதை களாகப் பாவிக்கப்படுகின்றனவா? அவைகளில் பூரணம் கண்ட அமைப்பு அகஸ்மாத்தா? அல்லது ‘மகனே உன் சமர்த்து’ என்பதில் சேர்ந்ததா? படைப்பாளி இப்போது உயிரோடிருந்தாலும் சொல்ல மாட்டான்; சொல்லவும் தெரியாது.
ஏன் வம்பு? Faulkner இப்போது இல்லை.
சொல்லவந்தது யாதெனில் சிறுகதையை ஜாதி பிரிப்பதில் இதுபோல் சங்கடங்கள் இருக்கின்றன. கொத்தவால் சாவடியில், கோணியிலிருந்து சரித்துக் கிழங்கைப் பிரிக்கிறார்களே, அதுவல்ல இது. (பொடி: கிலோ 80 பை, ஊட்டி கிலோ ரூ.2-40- எல்லாம் ஒரே கோணியுள்), ஆனால், அதுதான் நம் பத்திரிகைகளில் தற்சமயம் நடந்துகொண்டிருக்கிறது.
டால்ஸ்டாய் ஒரு அற்புதமான கலைஞன். நாவலை எடுத்துக் கொண்டால் அதற்கேற்ற பெரும் திரை. அதே போல் சிறுகதை, அதற்குரிய சிற்பம். அவருடைய ‘God sees the Truth, but waits’, ‘How much land does a man need? குழந்தைகளுக்காகவே எழுதிய கதைகள்-மகத்தான சிறுகதைக் கலை உருக்கள்.
Hemingway ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுகதை மன்னன், சொல்கிறான்: “நான் இந்தச் சவாலை ஏற்பேன். இந்த ஆளை (சில பெயர்களைத் தனித்தனியாகக் குறித்து) இந்த விதமாக முறியடிப்பேன். ஆனால், டால்ஸ்டாயுடன் கோதாவில் இறங்கமாட்டேன்.”
இந்த மூச்சில், Knut Hamsun (Nowrway) இலக்கிய கர்த்தா, மண்வளம் (Growth of the Soil) எனும் அவனுடைய நாவலில்- நோபல் பரிசு பெற்றது-முதல் அத்தியாயத்திலேயே ஒரு சிறு கட்டத்தில் காட்டியிருக்கும் காவிய நேர்த்தியைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஐஸாக் (Isaac)- எங்கிருந்தோ கைப்பாடு உழைப்பாளி வருகிறான். ஒரு காட்டுப்பிரதேசத்தில், தான் வாழுமளவுக்கு நிலம் தேடி, மரங்களை வெட்டி வீழ்த்தி சமன்படுத்தி, ஒரு குடிசையையும் கட்டிக்கொள்கிறான். முரட்டு ஆள். மோட்டா ஆள்.
அந்த வழியாகத் தற்செயலாக வந்த ஒரு ஸ்திரீயிடம், தனக்கு அண்டைக்கிராமம், பக்கத்துப் பட்டினத்தில் உதவி ஆள் கிடைக்குமா என்று விசாரிக்கிறான்.
சில நாட்களின் இடைவெளிக்குப்பின் – இஞ்ஜர் (Inger) ஒரு பெண் அவன் அழைப்புக்கு எதிர்ப்பதிலாக வருகிறாள். பிறவியிலேயே கிழிந்த உதடு அவள் முகத்தை அவலக்ஷணப் படுத்தியிருக்கிறது. நாட்டுக்கட்டை.
வந்த உடனேயே நிலத்தைச் சீர்படுத்தும் பாட்டில் அவனோடு இறங்குகிறாள்.
மாலை வருகிறது. . குடிசையுள் போய் உணவைச்சமைக்கிறாள்.
இரவு-உள்ளே இன்னும் விளக்குக்கு வசதி ஏற்படவில்லை.
இரவு-He look her
His name was Isaac
Her name was Inger
ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்தக் கட்டம்பற்றி இவ்வளவு தான் சொல்லப்படுகிறது. ஆனால், இவ்வார்த்தைகள் தட்டி யெழுப்பும் இதயநாதத்தில் ஏதேதோ கார்வைகள் கிளம்புகின்றன. உலகத்தைச் சிருஷ்டிக்கப்போகும் ஆதிமனிதன், ஆதிமகள்.
உடல்மூலம் ஈருயிர்கள் தேடி நிறைவுபெறும் உறுதுணை.
அங்கே புகாதே-எனும் எச்சரிக்கை ஒரு புனிதம்.
காணிநிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்.
சரி, பிறருக்கெப்படியோ, முதலில் இதைப் படிக்கும்போது ஈதெல்லாம் எனக்கு நேர்ந்தன. இப்போது நினைவு கூட்டிப் பார்க்கையில் இப்பவும் நேர்கின்றன.
ஒரு அற்புதமான சிறுகதைக் காட்சியிது. அதனால்தான் சொல்ல விழைந்தேன்.
ஆகவே, பாஷைவளம் ஆங்காங்கே அந்தந்த மண் வளத்துக் கேற்ப, ஆனால், எல்லா உயிர்களுக்கும் பொதுவாக ஊடே உருவும் சரடின் சத்தியம் பிசகாது. அப்படி அப்படித் தழைத்து ஓங்குகிறது. ஓங்கட்டும்.
விதம்.
கதைகள், ஆளுக்கு ஆள், வேளைக்கு வேளை, பாதிப்பு விதம்
சிலர் எதையுமே தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், எதிலுமே ஒரு வேடிக்கையை அல்லது அதை வைத்துக்கொண்டு தான் வேடிக்கை பண்ண வேண்டும் எனும் நோக்கத்துடன் அதுவே அவர்களின் வாழ்க்கைச் சித்தாந்தமாக அமைப்பதில் முனைந்து படிப்பவர்க்கு என்ன கிடைக்கும் என்று சொல்ல நான் தகுதி யற்றவன் என்பதை முன்னால் ஒப்புக்கொண்டுவிடுகிறேன். என் சுபாவத்தில் நான் சற்று மிகுதியாகவே உணர்ச்சிவசப்படுபவன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். பொதுவாக அது பலமா, பலவீனமா, இலக்கியப் பார்வையில்-சொல்லவல்லேனல்லன்.