கணேஷ்/”நர்மதா எங்கே போனாள்?”

“சொல்லி அனுப்பிச்சும் இந்த மாதிரி பத்து எருக்கம் மாலை, ஐஞ்சு பிள்ளையார் கொடை வாஙகின்டு வந்தா என்ன அர்த்தம்?. எருக்கம் மாலயாவது பிள்ளையாருக்கு ஒண்ணு, ரெண்டு போட்டுட்டு, உதிரி புஷ்பத்தோட சேர்த்துக்கலாம், இந்த கொடையை என்ன பண்றது?”ன்னு லலிதா, ராமகிருஷ்ணனின் மனைவி புலம்பிக் கொண்டு இருந்தாள்.

“லலிதா, அந்தக் குழந்தைகள்  மூஞ்சில இருக்கிற ஒரு உற்சாகம், நாம்ப நிச்சயமா வாங்குவோங்கிற நம்பிக்கை, எல்லாத்தையும் பார்த்தா  வாங்காம வரமுடியலை”.

“அதுக்காக ஐஞ்சு கொடையா? அதை வெச்சிண்டு என்ன பண்றது?.

“வாசல் நிலப்படில ரெண்டு சொருகி வெப்போம், ரெண்டு, ரூம் நிலப்படில சொருகுவோம், ஒண்ணு பிள்ளையாருக்கு. லலிதா, நம்ப பண்றதைப் பார்த்து, இப்படித்தான் பண்ணணனுமோன்னு நினைச்சு இன்னும் சில பேர் இதே மாதிரி பண்ண ஆரம்பிச்சாள்ன்னா, அந்த குழந்தைகளுக்கு நிறைய வியாபாரம் ஆகும்தானே”.

இந்த சம்பாஷணை லலிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார் சதுர்த்திபொழுது  நடக்கும். ராமகிருஷ்ணன் மற்ற பண்டிகையைவிட பிள்ளையார் சதுர்த்திக்காக எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார், அதற்கு முக்கிய காரணம், நர்மதா.

நாலு  வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு.எப்பவும் போல, பிள்ளையார் வாங்குவதற்க்கு மார்க்கெட்டுக்கு வந்தார். மழை லேசாக தூரிக் கொண்டு இருந்தது.  ஒவ்வொரு வருஷமும் கரெக்டா, பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் மழை பெய்யும்ன்னு நினைச்சிண்டே ராமகிருஷ்ணன்  குடையை விரித்தார். அவர்  வழக்கம்போல் பிள்ளையார் குடையும் எருக்கம் மாலையும் வாங்கி கொண்டு இருக்கும்பொழுது, “சார், பிள்ளையார் வாங்கிக்கிங்க “ன்னு ஒரு குரல் கேட்டு திரும்பி பார்த்தார். ஒரு பதினோரு, பன்னெண்டு வயசு இருக்கும், பாவாடை சட்டை  போட்டுண்ட  ஒரு குட்டிப்  பொண்ணு,   முகத்தில்  ஆங்காங்கே களிமண் கீற்றல், கலைந்த செம்பட்டையான தலை முடி, சிறிய நெத்தி அதில் சின்ன திலகம், கூர்மையான சிரிக்கும் கண்கள், மொத்தத்தில் ஒரு அழகான முகம்.

“சார், பிள்ளையார் வாங்கிக்கறிங்களா” மறுபடியும் அதே குரல்.

“வாங்கலாமே, என்ன விலை  சொல்லு?”

“இது நூத்தி இருபது ரூவா, அந்த சின்னது நூறு ரூவா , அதோ இருக்கே பெரிசு நூத்தி அறுபது ரூவா. எது எடுத்துக்கறீங்க சார்”ன்னு மழைக்காக நீலக்கலர் பாலித்தீன் ஷீட் போட்டு கவர் பண்ணி இருந்த இடத்தை காண்பித்தாள். பிள்ளையார் தலை மட்டும் அரசல் புரசலாக தெரிந்து கொண்டு இருந்தது. எல்லாமே ஒரே அச்சில் செய்யப் பட்டிருந்தது, சைஸ்தான் மாற்றம். கொஞ்சம் தள்ளி பரட்டை தலை, சிகப்பு ஏறிய கண்கள், கறைப்படிந்த பற்கள், தடித்த கருமையான உதட்டுடன் ஒரு ஆளும், பக்கத்தில் தோள் எலும்பு தெரிந்து ஒல்லியான தேகத்துடன், எண்ணை கண்டு நாளான தலையுடன், வெளிறிய கண்களுடன் ஒரு பெண்மணியும் களிமண்ணை குழைத்துக் கொண்டு இருந்தனர், இந்த குட்டி பெண்ணோட அப்பா, அம்மாவாகத்தான் இருக்கும்னு  ராமகிருஷ்ணனுக்கு தோன்றியது. மழையினால் பாதிக்க பட மாட்டோமென்ற நம்பிக்கையுடன் அவர்கள் அடுத்த பிள்ளையாரை தயார் பண்ணிக் கொண்டு இருந்தனர். இந்த மழைதான் ஒவ்வொரு வருடமும் வருகிறதே, அவர்களுக்கு தெரியாதா என்ன என்று நினைத்தார்  ராமகிருஷ்ணன்.

“எது எடுத்துக்கலாம், நீயே சொல்லு, உனக்கு எது பிடிச்சிருக்குன்னு”.

அதற்குள் ஒருவர் வந்து “பிள்ளையார் என்ன விலை”ன்னு கேட்டார்.

“இது நூத்தி இருபது ரூவா, அந்த சின்னது நூறு ரூவா, அதோ இருக்கே பெரிசு நூத்தி அறுபது ரூவா, சார். எது எடுத்துக்கறீங்க”ன்னு அந்த குட்டி பொண்ணு பதில் சொல்லித்து .

“என்ன அநியாயத்துக்கு விலை சொல்லற, அதோ அந்த பிள்ளையார்,..
இல்லை, அதுக்கு பக்கத்துல இருக்கே, ஆமாம், அதுதான், அது எவ்வளவு?”.

“நூத்தி அருபது ரூவா சார், நீங்க நூத்தி நாப்பது  ரூவா குடுங்க”.

“அதெல்லாம் இல்ல, நூறு ரூவா தர்றேன், இல்லைன்னா சொல்லு, நான் வேற எங்கேயாவது பார்த்துக்கறேன்”.

“அடுத்த சைஸ்ல இருக்கிறத எடுத்துக்குங்க, நூறு ரூவா குடுங்க”.

“இல்ல, எனக்கு அதுதான் வேணும்”.

ஒருவழியா பேரம் நூத்தி முப்பது ரூபாயில் முடிந்தது. பெருசா ஏதோ சாதிச்ச பெருமை அவர் முகத்தில் தெரிந்தது. பணத்தை எண்ணி கொடுத்துக் கொண்டே சொன்னார் “வருஷா வருஷம் ஏத்திகிட்ட போனா எப்படி? மத்தது மாதிரியா, இது வெறும் களிமண்ணுதானே”.

“இது களிமண்ணு இல்லை, சார், இது பிள்ளையார்”ன்னு அந்த பெண் பதில் சொல்லியது.

“என்னது, இது களிமண்ணு இல்லையா?  நான் வீட்டுக்கு எடுத்துண்டுப்போய் பூஜை பண்ணினப்புறம்தான் இது பிள்ளையார், அது வரைக்கும் இது வெறும் களிமண் பொம்மைதான்  தெரிஞ்சுக்கோ. எப்படி பேசறான்னு பாருங்க சார்?ன்னு ராமகிருஷணனை சப்போர்டுக்கு கூப்பிட்டார்.

“சார், அந்த பாப்பா சொல்றதுதான் கரெக்ட்.”ன்னு பதில் சொன்னார்.

“என்ன, எப்படி சொல்றிங்க”ன்னு சொல்லும் பொழுது   கோபம் அவருடைய மூக்குமேலே தெரிந்தது.

“சார்,  வந்தவுடனே நீங்க என்ன கேட்டீங்க”

“பிள்ளையார் என்ன விலை”ன்னு கேட்டேன், அதுக்கு என்ன இப்போ?.

“அப்புறம், நீங்களே பிள்ளையார் என்ன விலைன்னுதானே கேட்டிங்க, களிமண்ணு பொம்மை என்ன விலைன்னு கேக்கலியே”.

அந்த மனிதர் மறு பேச்சு பேசவில்லை. கோபமாக அந்த அந்த குட்டி பெண்ணிடம் மீதி சில்லறை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். போகும்பொழுது “சுண்டெலிக்கு களிமண்ணு கேட்டாத்தான் கொடுப்பியா”ன்னு வள்ளுன்னு விழுந்து வாங்கிக்கொண்டு சென்றார்.

“சரி, எனக்கு ஒரு பிள்ளையார் குடு. உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்து குடு”ன்னு ராமகிருஷ்ணன் அந்த குட்டி பெண்ணிடம் கூறினார்.

“சார், இதை எடுத்துக்கோங்க”ன்னு சொல்லி அந்த நூத்தி இருபது ரூவா  சொன்ன பிள்ளையாரை எடுத்துக் குடுத்தாள்.
ராமகிருஷ்ணன் அந்த குட்டிப் பெண்ணிடம் நூத்தி இருபது ரூவாயை எண்ணிக் கொடுத்தவுடன், அவள் இருபது ரூவாயை திருப்பி கொடுத்தாள்.

“எல்லாரும் பேரம் பண்ணறாங்க சார். அதான் நூத்தி இருவது சொன்னேன், நூறு ரூவாதான் விலை”.

“அதனாலென்ன, நீ இருக்கிறதுலேயே அழகான பிள்ளையாரரை எனக்கு எடுத்து கொடுத்ததுனால இந்தப் பிள்ளையாருக்கு நூத்தி இருவது ரூவா விலை. செரி, உன்னோட பேர் என்ன?.

“நர்மதா”ன்னு பதில் சொன்னாள்.

“நர்மதா, அழகான பேரு. “நர்மதா எங்கே போகிறாள்”ன்னு ஒரு கதை வந்தது, தெரியுமா உனக்கு?”.

“எனக்கு தெரியாது”ன்னு சொல்லி அந்த குட்டி பெண் மெலிதாக சிரித்தாள்.

“ஸ்கூலுக்கு போறியா? என்ன கிளாஸ் படிக்கிறே?.

“எட்டாங்க்ளாஸ் படிக்கிறேன்.”

“பொய் சொல்லாத, நீ ஐஞ்சாங்க்ளாஸ்தானே படிக்கிறே, உன்ன பார்த்தா  தெரியலையே எட்டாங்க்ளாஸ்    படிக்கிறமாதிரி?”.

“நிஜமா நான் எட்டாங்க்ளாஸ்தான் படிக்கிறேன், எங்க அம்மாகிட்ட வேணும்னா கேளுங்க”ன்னு பின்னாடி பிள்ளையார் செய்துக் கொண்டிருந்த பெண்மணியை காண்பித்தாள்.

“செரி, நல்லா  படிப்பியா? என்ன ரேங்க் வாங்குவே?”.

“நல்லா படிப்பேன். மூணு ரேங்க்குள்ள வருவேன், சில டைம்ல முதல் ரேங்க் வாங்குவேன்.”

“வெரி குட், மேல என்ன படிப்பு படிக்கப்  போற?.

“நான் கலெக்டர் படிப்பு படிக்கப் போறேன். எங்க டீச்சர் சொல்லிருக்காங்க அதுதான் பெரிய படிப்புன்னு. எங்க ஸ்கூலுக்கு கலெக்டர் அம்மா சுதந்திர நாள்னிக்கு வந்திருந்தாங்க”.

“படி, நல்லா படிக்கணும். உனக்கு நோட்டு, புஸ்தகம் ஏதாவது வேணுமா, நான் வாங்கித்தரேன்”.

“நோட்டு அப்பா வாங்கி கொடுத்துட்டாங்க, புஸ்தகம் ஸ்கூல்ல கொடுத்துட்டாங்க, எதுவும் வேண்டாம்.”

“பேனா, ஜாமெட்ரிக் பாக்ஸ், ஏதாவது வேணுமா?”.

“இல்லை, வேண்டாம். இருக்கு என்கிட்டே”.

“செரி, இதை வெச்சுக்கோ, அம்மாகிட்ட கொடுத்து வை. அப்புறமா படிப்புக்கு ஏதாவது தேவைப் பட்டா வாங்கிக்கோ”ன்னு நூறு ரூவாயை எடுத்து ராமகிருஷ்ணன் குடுத்தார்.

“வேண்டாம் சார், எனக்கு வேண்டாம்”ன்னு மறுக்கவே, பின்னாடி களிமண் குழைத்துக் கொண்டிருந்த அவளுடைய அப்பா “பாப்பா, வாங்கிக்க, ஐயா ஆசையா கொடுக்கறாங்க”ன்னு சொல்லவே வாங்கிகொண்டாள்.

“நல்லா படிக்கணும், அடுத்த வருஷம் வந்து ஒன்ன கேப்பேன்”ன்னு சொல்லிட்டு ராமகிருஷ்ணன் மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினார். அவர் திரும்பி வரும்பொழுது அந்த பேரம் பேசின மனிதர், ரத்னா கஃபே வாசலில் நின்றுக் கொண்டு அந்த பேரம் பேசி சேமித்த முப்பது ரூவாயை காஃபியாக மாற்றிருந்தார்.

ராமகிருஷ்ணன் அன்று வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்லி  புலம்பித்  தள்ளிவிட்டார். இந்தப் பேரம் பேசும் மனிதர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஒரே ஆவேசமாக  கத்திக் கொண்டு இருந்தார். லலிதா, அவரை ஆசுவாசப் படுத்தினாள்.

 “உலகமே அப்படித்தான் இருக்கு, நம்பத்தான் வேற மாதிரி யோசிக்கறோம்”ன்னு சொன்னாள்.

“இந்த மாதிரி ஆட்கள் எல்லாம்,  சின்ன சின்ன வியாபாரம் பண்ணறவாள்ட்ட பேரம் பேசுவா. நகை கடைக்கு போய் அவன் கேக்கிறத கொடுத்துட்டு வருவா.  கடைக்காரன்னு சொல்றதுதான் சேதாரம், செய்கூலியெல்லாம். அங்க வாயவே திறக்க மாட்டா. அப்படியே கார்ட் எடுத்து பெருமையா தேச்சுட்டு வருவா. இங்க என்னடான்னா பத்துக்கும், இருபதுக்கும், ஏதோ அதை வெச்சிண்டு கோட்டையே கட்டப் போற மாதிரி பேரம் பேசறது”.
லலிதாவிற்கு அவரை சமாதானம்  பண்ணுவதற்குள் போறும்  போருமென்று ஆகிவிட்டது. 

ராமகிருஷ்ணன் வருஷா வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்காக  காத்துக் கொண்டு இருப்பார், நர்மதாவைப் பார்த்து பேசுவதற்காக. ஒவ்வொரு வருடமும் அதே மாதிரி மழை, அதே மாதிரி அவள் பிள்ளையார்  எடுத்து கொடுப்பாள், அவளுடைய கலெக்டர் கனவை ஞாபகப்படுத்திவிட்டு, படிப்பிற்காக நூறோ இருநூறோ ராமகிருஷ்ணன் கொடுப்பார்.

போன வருடம் பிள்ளையார் வாங்க ராமகிருஷ்ணன் போன பொழுது, அங்கே நர்மதா இருக்கவில்லை, அவளுடைய அம்மா மாத்திரம்தான் இருந்தாள். 
“எங்க, நர்மதாவை காணும், இந்த வருஷம் வரலியா?ன்னு ராமகிருஷ்ணன் கேட்டார்.

“இல்லங்க, நர்மதாவை போன தைல, என் தம்பிக்கு கட்டி குடுத்துட்டோம், அதான் அது வரலை”.

“என்னது, கல்யாணம் பண்ணி கொடுத்துட்டயா, அதுக்கு என்ன கல்யாணம் பண்ற வயசா? நல்லா படிக்கணும்னு ஆசை பட்டதே”.

“அதுக்கு கல்யாணம் பண்ணற வயசுதாங்க . படிக்கணும்னா நாம என்ன பண்ண முடியும். இந்தாளு குடிச்சு குடிச்சே போய் சேர்ந்துட்டாரு. நான் ஒத்தியா என்னங்க பண்ண முடியும், அதாங்க என் தம்பிக்கே கட்டி கொடுத்துட்டேன்.”

“உன் தம்பி என்ன பண்ணறாரு”.

“அவனும் இதே தொழில்தாங்க, களிமண்ல பொம்மை செய்யறது”.

ராமகிருஷ்ணன் நாலு வருஷத்துக்குப் பிறகு முதல் முறையாக , பிள்ளையாரை தானே செலக்ட் பண்ணி வாங்கிகிண்டு வந்தார். நர்மதாவை பார்த்து பேசாதது ஒரு குறையாகவே இருந்தது. மேலும் அந்த சின்ன பெண்ணை கல்யாணம் பண்ணிக்  கொடுத்ததையும், அவளுடைய கலெக்டர் கனவு தகர்ந்ததையும் அவரால ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அடுத்த வருஷம் பிள்ளையார் வாங்கப்  போன  பொழுது நர்மதாவுடைய அம்மா ராமகிருஷ்ணனை பார்த்தவுடன் ஓடி வந்து “ஐயா, நம்ம நர்மதாவுக்கு பையன் பொறந்திருக்கு, ரெண்டு மாசம் ஆவுது”ன்னு  சொன்னாள்.  ராமகிருஷ்ணன் எப்பவும் போல பிள்ளையாரை வாங்கிவிட்டு, ஒரு நூறு ரூவாயை நர்மதாவின் அம்மாவிடம் குடுத்து “குழந்தைக்கு ஏதாவது டிரஸ் வாங்கி குடுங்க”ன்னு சொல்லி குடுத்தார். 

இன்னும் சில வருடத்தில்,  குட்டிப் பெண் நர்மதாவைப் பார்த்தது போல் அவளுடைய பையனையும், நர்மதாவும் அவளுடைய கணவனும் ஓரத்தில் உட்கார்ந்து களிமண்ணை குளப்பிக்கொண்டு பிள்ளையார் செய்வதையும், பார்க்க நேரிடுமோ  என்று நினைத்துக் கொண்டே ராமகிருஷ்ணன் மனதில் பாரத்தோடு வீட்டை நோக்கி சென்றார்.
By Ganesh (a) Viswanath-Neyveli

12 Comments on “கணேஷ்/”நர்மதா எங்கே போனாள்?””

      1. அருமையான மனதைத் தொட்ட கதை. கதை அம்சம் அருமை. மனித நேயம் மறைய வில்லை. இன்றும் பேரம் பேசுபவர்களைக் கண்டால் மனம் வலிக்கின்றது. வாழ்த்துக்கள் மேன்மேலும் தங்கள் கதைகள் பல தொடர…….

  1. மிகவும் யதார்த்தமான கதை.சினிமா தியேட்டர்ல 150 ரூபாய்க்கு பாப்கார்ன் யோசிக்காமல் வாங்குகிற மனது சாலை ஓரத்துல கொய்யாப்பழம் விற்கும் பாட்டியிடம் மனசாட்சியே இல்லாமல் பேரம் பேசும் கொடுமையை என்னவென்று சொல்வ து

    1. மனதைக் கவர்ந்த கருத்து.
      நர்மதாவின் படிப்பு நிறுத்தப் பட்டது வருத்தத்தைத் தருகிறது.

Comments are closed.