பாவண்ணன் பதில்

“80-களில் எழுத வந்த பல எழுத்தாளர்களுக்கு புனைபெயரின் மேல் ஒரு மயக்கம் இருந்தது. ராமச்சந்திரன், ‘வண்ணநிலவன்’ ஆனது; சாரங்கபாணி வைத்திலிங்கம், ‘பிரபஞ்சன்’ ஆனது; கல்யாணசுந்தரம், ‘கல்யாண்ஜி’, ‘வண்ணதாசன்’ ஆனதுபோல, பாஸ்கரன் ‘பாவண்ணன்’ ஆனதன் பின்னணி என்ன? ஏன் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“தொடக்கத்தில் பாஸ்கரன் என்னும் பெயரிலேயே மரபுக்கவிதைகளை எழுதி வந்தேன். ஏழெட்டு நோட்டு நிறைய கவிதைகள் இருந்தன. அந்தத் தொகுதிகளுக்கு பூங்கொத்து -1, பூங்கொத்து – 2 என்று பெயர்சூட்டி நண்பர்களிடம் படிப்பதற்குக் கொடுத்திருந்தேன். இறுதியாக விடப்பட்டிருந்த வெள்ளைப்பக்கங்களில் நண்பர்கள் தம் கருத்துகளை எழுதிக் கொடுத்தார்கள். எப்படியோ அத்தொகுதிகளில் ஒன்று ஒருமுறை எங்கள் ஆசிரியரான ம.இலெ.தங்கப்பாவிடம் சென்று சேர்ந்துவிட்டது. என்னை அழைத்து விசாரித்தார். பிறகு எல்லாத் தொகுதிகளையும் வாங்கிப் படித்தார். சந்தமும் தாளமும் ஓட்டமும் நன்றாக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார். நான் கவனம் கொள்ளவேண்டிய அம்சங்களைக் குறித்து விளக்கமாகவே சொல்லிக் கொடுத்தார். என்னை மேம்படுத்திக்கொள்ள அவர் கருத்துகள் உதவின. அப்போது புதுவையில் பாளை எழிலேந்தி என்னும் கவிஞர் இலக்கியக்கூடல் என்றொரு அமைப்பை நடத்திவந்தார். அவர் ஒரு கவிதைப்போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டிக்கு நான் ஒரு கவிதையை அனுப்பிவைத்தேன். ஏறத்தாழ ஐம்பது பேர் கலந்துகொண்ட அப்போட்டியில் என் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் மெலிந்த தோற்றத்துடன் எழுந்து சென்று நான் பரிசு வாங்கினேன். நிகழ்ச்சி முடிந்ததும் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் என்னைச் சூழ்ந்து பாராட்டினர்.

எல்லோரும் கலைந்துபோன பிறகு ஒரு பெரியவர் மெதுவாக என்னை நெருங்கி என் தோளைத் தொட்டு அழுத்தி அன்பை வெளிக்காட்டிப் பாராட்டினார். கவிதையின் மொழியோட்டத்தையும் கையாண்டிருந்த உவமைகளையும் நினைவிலிருந்து சொல்லி தட்டிக் கொடுத்தார். பேச்சோடு பேச்சாக “சொந்தப் பேருலதான் எழுதணும்னு ஏதாவது முடிவெடுத்திருக்கீங்களா?” என்று கேட்டார். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்றேன் நான். “அப்புறமென்ன, அழகா ஒரு நல்ல புனைபெயர வச்சிகிட்டு எழுதுங்க” என்றார். அக்கோணத்தில் நான் அதுவரை யோசித்ததே இல்லை. அதனால் அந்த யோசனை பிடித்திருந்தது. ஒரு வேகத்தில் “நீங்களே ஒரு நல்ல பேர சொல்லுங்க சார். வச்சிக்கறேன்” என்றேன். முதலில் நான் ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக அவர் நினைத்துக் கொண்டார். அக்குறிப்பை நான் உணர்ந்து கொண்டதும் அவர் கைகளைப் பற்றியபடி “உண்மையாவே சொல்றேன். நீங்க ஒரு பேர சொல்லுங்க. இன்னைக்கே அந்தப் பேருல எழுத ஆரம்பிச்சிடுவேன்” என்றேன். அப்படியா என்று புன்னகைத்தபடியே ஒருகணம் யோசித்துவிட்டு “பாவண்ணன்ங்கற பேரு எப்படி இருக்குது?” என்று கேட்டார். இரண்டு மூன்று முறை மனத்துக்குள் சொல்லிப் பார்த்துவிட்டு “நல்லாவே இருக்குது சார்” என்றேன் நான். ”அப்ப, அதையே புனைப்பெயரா வச்சிக்குங்க” என்றார் அவர். நானும் அவர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். அவர் உடனே என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டார். அன்று முழுதும் அவர் சூட்டிய பெயர் என் நெஞ்சில் எதிரொலித்தபடி இருந்தது. எனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அந்தப் பெரியவரை நான் அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. அந்த முதல் பரிசுக்குப் பிறகு பாவண்ணன் என்கிற பெயரில் எழுதிய கவிதைகளுக்கு மூன்று முறை பரிசு பெற்றேன். பரிசு வாங்கிய ஒவ்வொரு முறையும் நான் அரங்கத்தில் அவர் முகம் தென்படுகிறதா என்று பார்ப்பேன். ஆனால் அவர் முகம் தென்பட்டதே இல்லை. அந்த அரங்கத்தில் மட்டுமில்லை, எந்த அரங்கத்திலும் அதற்குப் பிறகு, நான் அவரைச் சந்திக்கவில்லை. சற்றும் அறிமுகமில்லாத, முகம்தெரியாத அந்தப் பெரியவர் அன்று சூட்டிய பெயர்தான் பாவண்ணன். கவிதையிலிருந்து என் களம் உரைநடையாக விரிந்து சென்றபோதும் கூட அதே பெயரிலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் என் பெயரை கணினித்திரையில் தட்டச்சிடும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் முகம் ஒரு கணம் எனக்குள் தோன்றி மறைகிறது.”


நன்றி: விகடன்