ஜெ.பாஸ்கரன்/18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்

பெயரைப் பார்த்தவுடன் என்ன மாதிரியான நாவல் என்று கணிக்க முடியவில்லை. நாவலை வாசித்த பிறகுதான் புரிந்தது, 18வது அட்சக்கோட்டிலுள்ள செகந்திராபாத்தில் நடைபெறும் கதை இது என்று!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நிஜாம் அரசாங்கம் இந்திய யூனியனில் இணையும் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள், மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், உணவுப்பஞ்சம், கலாச்சார மாற்றங்கள், இந்து, முஸ்லிம், ஆங்கிலோ இந்தியர்கள் எதிர்கொண்ட மதக்கலவரங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகள் அனைத்தையும் சந்திரசேகரன் என்னும் பள்ளி / கல்லூரி மாணவனின் பார்வையில் சொல்லப்படுகின்ற நாவல். சரித்திர ஆவணமாகக் கொள்ளத்தக்க செய்திகளை ஒரு நாவலின் ஊடே அனாயசாமாகச் சொல்லிச் செல்கிறார் அசோகமித்திரன். அவரது எழுத்தில், கோபம், இயலாமை, நாட்டுப்பற்று, மத்தியத்தர மக்களின் செயல்பாடுகள், நகச்சுவை என எல்லாம் உண்மைச் சம்பவங்களுடன் பின்னப்பட்டுள்ளன.

கிரிக்கெட் தலைவன் நாஸிர் அலிகான் – சந்திரசேகரனை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறான். அடிமட்டத்தில் மதபேதம் இல்லை என்பதைச் சொல்கிறார். இன்று போல அன்றும் அறிவியல் மாணவர்கள் சீரியஸாவும், ஆர்ட்ஸ் குரூப் மாணவர்கள் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள் என்ற குறிப்பிடுகின்றார். மாலையில் வீட்டிலிருந்து கிளம்புவது முதல் கிரிக்கெட் ஆட மீண்டும் கல்லூரிக்குச் செல்வது வரையில் – ஹுசேன் சாகர் ஏரி, அதன் கரை டாங்க் பண்ட் சாலை, அந்தக் காற்று, மூச்சு முட்ட சைக்கிள் ஓட்டுவது – என விவரிக்கும் போதே அன்றைய செகந்திராபாத் நகரைப் பற்றியும், பல மதத்தினர் வாழ்ந்த நிலையைப் பற்றியும் சொல்லிச்செல்கின்றார்.

சந்திரசேகரன் வீட்டு மாடு பற்றிய நுணுக்கமான விவரணைகள், சர்ச்சுகளில் மாட்டை அடித்து, போலீஸில் கொண்டு விடுவது, மாட்டிற்குப் புல், பிண்ணாக்கு வைப்பது, பெரிய போலீஸ் அதிகாரி வீட்டில் புகுந்து, மாடு குரோட்டன்ஸ் செடிகளைத் தின்று விடுவது என சுவாரஸ்யமான எழுத்து. (இந்த நாவலில் வரும் மாடு, சர்ச்சு, கல்லறை, செகந்திராபாத் ரயிவே ஸ்டேஷன் போன்றவற்றைச் சுற்றி புனையப்பட்ட சிறுகதைகள் அசோகமித்திரன் எழுதியுள்ளார்!). போகிறபோக்கில் சந்திரசேகரனின் தம்பி, அக்கா, தங்கைகள், அம்மா, அப்பா என் விவரிக்கும்போது, அன்றைய வாழ்க்கைமுறை – குறிப்பாக மத்தியதர பிராமண குடும்பங்களின் வாழ்க்கை முறை – எப்படி இருந்தது என்று அறிய முடிகிறது.

நிஜாமின் ஆட்சியில் ரஜாக்களும், புரட்சியாளர்களும் சுதந்திர இந்தியாவிற்கு எதிரான கலவரங்களில் ஈடுபடுவதையும், அப்போது இந்துக்கள் எதிர்கொண்ட வன்முறைகளையும், பின்னாளில் இந்திய யூனியனுடன் இணையும் முன் முஸ்லீம்கள் கலவரங்களில் அவதிப்படுவதையும் மிக இயல்பாக சந்திரசேகரனின் வாழ்க்கையுடன் சொல்லிச்செல்கிறார். அவர் விவரிக்கின்ற ஒவ்வொரு சிறிய நிகழ்விலும், மிக நுணுக்கமாக அன்றைய சரித்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

அன்றைய ரயில்வே குவார்டர்ஸ், வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களின் பழக்க வழக்கங்கள், சிறுவர்களிடையே ஏற்படும் சண்டைகள், பதின்ம வயதில் தோன்றும் இனக்கவர்ச்சி என நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்துச்செல்லும் உன்னதமான எழுத்து.

கலவரங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தெளிவாக, மிக நயமாக ஆனால் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். நாவலின் இறுதியில் கலவரங்களிலிருந்து தப்பி ஓடும் சந்திரசேகரனைக் கலகக்காரன் என நினைத்து, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆடைகளைக் களையும் பெண், அன்று கலவரங்களில் பெண்கள் எப்படி அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதனை முகத்தில் அறைந்து சொல்வதாய் உள்ளது.

“அப்போதைய செகந்திராபாத்தும், ஹைதராபாத்தும் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை” – அசோகமித்திரன்.

நாவலில் மிகக் கவனமாக எல்லா மதத்தினரின் செயல்பாடுகளையும், சந்திரசேகரனின் மத்தியத்தர பிராமணக் குடும்பம், அவன் வளரும் சூழல்களைக் கருத்தில்கொண்டு புனைந்திருக்கிறார் அசோகமித்திரன்.

நாவலின் சிறப்பு, இன்றைக்கு வாசிக்கும்போதும் வெளியானபோதிருந்த அதே தாக்கத்துடன் வாசகனை உள்ளே இழுத்துக்கொள்கின்றது என்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது.

‘1948இல் ஒரு ரஜாக்கர் பிரசங்கம்’, ‘ஒரு 18ஆம் நூற்றாண்டு தக்காணத்துக் கதை’ இரண்டும் நாவல் தொடங்கும் முன் கொடுக்கப்பட்டுள்ளன. அன்றைய அரசியல் சூழலை விளக்கும் ஆவணங்களாக உள்ளன.