சாருநிவேதிதா/புதுமைப்பித்தன் காச நோய்க்கு…

புதுமைப்பித்தன் காச நோய்க்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நாற்பத்திரண்டு வயதில் செத்தார். சாவதற்கு முதல் நாள் அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றில் அந்தக் கடிதம் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்துக்கும் சக எழுத்தாளர்களுக்கும் புதுமைப்பித்தன் விடுத்த வேண்டுகோள் அது. ”நான் இந்த மொழிக்காக உழைத்திருக்கிறேன். இப்போது காசநோய்க்கு மருந்து வாங்கப் பணம் இல்லை. போஷாக்கான உணவுக்கு வழியில்லை. எனக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை.” இதுதான் அந்தக் கடிதம். ஆனாலும் தமிழ் சினிமாவில் வருவதுபோல் அந்தக் கடிதம் எழுதிய மறுநாளே அவர் உயிர் பிரிந்தது. அதில் பாருங்கள், வாழ்நாள் பூராவும் தன் கைகளால் மகத்தான பல சிறுகதைகளை எழுதிய அந்த மனிதனால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுத வேண்டிய கடிதத்தை எழுத கைகளில் தெம்பு இல்லை. தன் நண்பரை விட்டுத்தான் எழுதச் சொன்னார்.

க.நா.சு.வின் நிலையும் அப்படி ஆகியிருக்க வேண்டியதுதான். ஆனால் மகளும் மருமகனும் அவரைக் காப்பாற்றினார்கள். இப்படி எழுத்தாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தது தமிழ்ச் சமூகம். அப்படி விரட்டி அடித்த சமூகத்தின் முக்கியப் பிரதிநிதிகள் கல்கியும் ராஜாஜியும். ஒண்டியாளாக அந்த இருவரையும் எதிர்த்துப் போராடியிருக்கிறார் புதுமைப்பித்தன். ஆனாலும் அந்த அசுரர்களை அவரால் வெல்ல முடியவில்லை. இந்த விஷயத்தில் காந்தியே ராஜாஜிக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார். பாரதி உங்கள் சொத்து, காப்பாற்றுங்கள் என்று. மகாத்மா சொல்லியும் இவர்கள் அசையவில்லை.

ஆனால் நண்பர்களே, இப்போது நிலைமை மாறி விட்டது. எழுத்தாளனுக்கு இங்கே சமூக அங்கீகாரம்தான் இல்லையே தவிர வாசகர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள். அதற்கு என் வாழ்க்கை சாட்சி.