கே.ஏ.ஸ்ரீனிவாசன்/ஆயுதபூஜை


கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்ல புரத்திற்கு ஒரு 15 கிலோமீட்டர் முன்பு இடப்புறம் திரும்பி ஒரு 600 மீட்டரில் அழகாய் அமைந்திருந்தது அந்த பண்ணை வீடு. அன்றைய இரவு, மறுநாள் காலை 3 மணிக்கு மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. நீச்சல் குளம் அருகே 5-6 கரை வேட்டிகள் அசிங்கமாக கிடக்க, அதை முந்தைய நாள் மாலை 8 மணி வரை உடுத்திக் கொண்டிருந்தவர்கள் காலை 3 மணிக்கு அதை விட அசிங்கமாக மயக்கத்தில் கிடந்தார்கள். படுக்கை அறையில் கட்சித் தலைவர் லோகநாதன் தன் தயாரிப்பில் உருவாகும் புது படத்தின் கதாநாயகனின் அம்மா பாத்திரத்துடன் கொஞ்சம் நெருக்கமான கணவராக method ஆக்டிங்கில் ஐக்கியமாகியிருந்தார்.

காலை 5 மணிக்கு கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரகுபதி எரிச்சலான கண்களுடன் அரை தூக்கத்தில் இருந்தார். அவரது செல் ஃபோன் சைலன்ட் மோடில் கான்ஸ்டபிள் இன்பராஜிடம் இருந்தது. இன்பராஜ் ரகுபதி தூக்கத்துக்கும் காவல் காத்துக்கொண்டிருந்தார்.

ஐந்தாவது முறை ராகுபதியின் மொபைல் ஃபோன் சைலன்ட் மோடில் வைப்ரேஷன் ஆனதும், இன்பராஜ் எடுத்து

“இன்ஸ்பெக்டர் சார் ரவுண்டஸ் ல் இருக்கார் சார்” என்ற எழுதாத ஸ்கிரிப்ட் ஐ படித்த போது மறுமுனையில்

“நான் சென்னை யில் IG ஆபீஸ் லர்ந்து பேசறேன். நேத்து நைட் என்போர்ஸ்மெண்ட் டைரக்ட்டரேட் லர்ந்து கால் வந்தது. இன்னைக்கு காலைலே சென்னைல நிறைய இடத்துல VIP வீடுகளில ரெய்டு பண்ண போறாங்களாம். சென்சிடிவ் கேஸ் னால போலீஸ் செக்யூரிட்டிக்கு ஆள் கேட்டிருக்காங்க. எங்கள முக்கியமான ஸ்டேஷன்க்கு இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க. உங்க ஸ்டேஷன் பக்கத்துல தான் நிறைய பண்ணை வீடுங்க இருக்கு. அதனால ப்ரிப்பேர்ட் ஆ இருங்க. ஆர்டர் ரெண்டு மணி நேரத்துல வந்துடும்.” என்றதும் இன்பராஜ் ரகுபதியின் தூக்கத்தை லேசாக கலைக்க, ரகுபதி சட்டென எழுந்து

“என்ன இன்பராஜ் எங்கிருந்து ஃபோன்” என்றவுடன் இன்பராஜ் ரெய்டு அலர்ட் பற்றி விவரித்து

“சார் ஃபர்ஸ்ட் பண்ணை வீடு அந்த சைதை லோகநாதன்து சார். அவரு நேத்து தான் ஆளுங்கட்சியோட இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டு வைப்பதாக அறிவிச்சாரு. அதுக்கு தான் நேத்து நைட்லேந்து பெரிய பார்ட்டி நடக்குது அங்கே. ஒரு நூறு காருக்கு மேல நேத்து அங்க போனதா தகவல். லோகனதானோடு துபாய் கம்பெனி வழியா அவரோட டிஸ்டிலரி பிசினஸ்லேயும் ரியல் எஸ்டேட் பிசினஸ்லேயும் ஏதோ ஹவாலா தில்லு முல்லு நடக்குதுன்னு ஒரு புரளி இருக்கு சார்.

“யோவ் நீ செம்ம அலர்ட் தான். வெறி குட். சரி நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டு வரேன். ரெய்டு போன இன்னிக்கு எப்போ சாப்பாடுன்னே தெரியாது” சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

ஆறு மணிக்கு சற்று மயக்கம் தெளிய கரை வேட்டிகள் ஏதோ ஒரு இடுப்பில் ஏற, கார்கள் ஒவ்வொன்றாக, பண்ணை வீட்டை விட்டு வெளியேறத் தொடங்கியது. அதில் லோகநாதன் படத்தில் வாய்ப்பு கிடைக்காத சில அம்மாக்களும் இருந்தனர்.

லோகநாதன் மொபைல் ஃபோன் 22 ஆவது முறையாக சிணுங்கிய போது மணி 8:30. மறுமுனையில்
“சார் நான் IG ஆபீஸ்லேந்து பேசறேன். ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பண்ணை வீட்டுல ரெய்டு பண்ண போறாங்க” என்றதும்

லோகநாதனுக்கு நேற்று அடித்த ஃபுல் புளூ லேபிள் விஸ்கி அதன் வீரியத்தை இழந்து, அவர் தனது இயல்பு நிலைக்கு வந்த அம்மாத்திரத்தில் காலிங் பெல் அடித்தது

வேலைக்காரன் கதவை திறக்க

“நாங்க என்போர்ஸ்மெண்ட் லேந்து .. என்ற குரல் லோகநாதனுக்கு கேட்ட போது அருவி டைப் ஷவர் அவரை முழுதுமாக நனைத்திருந்தது.

10 நிமிட காத்திருத்தலுக்குப் பின் லோகநாதன் வந்து வரவேற்பறையில் அமர, ரெய்டு 30 கோடி கருப்பு பணம், ஏகப்பட்ட அமெரிக்கன் டாலர்ஸ் மற்றும் பினாமி பத்திரங்களுடன் இரவு 11 மணிக்கு முடிந்தது. என்போர்ஸ்மெண்ட் ஆபிசர் லோகநாதனின் கையெழுத்தை பல்வேறு டாக்குமென்ட்டில் வங்கி கொண்டு புறப்பட, லோகநாதன் ரகுபதியிடம்

“என்னய்யா இதுவும் வழக்கம் போல தானே. ஆளுங்கட்சி சீட் ஷேரிங் டிராமா தானே” என்று சிரிக்க

“இல்ல சார். இது எதுவுமே ஆளுங்கட்சிக்கு தெரியாது. எங்களுக்கே காலை 5 மணிக்கு தான் அலர்ட் வந்தது. நான் விசாரத்ததிலே இது என்போர்ஸ்மெண்ட் ஹெட் ராகவ் ஜோஷி யோட டைரக்ட் ஆர்டரின் பேர்ல நடந்திருக்கு. இனிமே நம்ம CM சொன்னா கூட எடுபடாது. ஜோஷி ரொம்ப கறாரான ஆளு. ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டார். இதிலேந்து நீங்க தப்பிக்கறது ரொம்ப கஷ்டம் சார். நீங்க நல்ல வக்கீலா ஏற்பாடு பண்ணுங்க. நான் வரேன்” என்று கிளம்பினார்

லோகநாதனின் ரிமாண்ட் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. பெரிய தேசிய கட்சியின் பல பெரிய தலைகளின் தொடர்புகள் விசாரணையில் வெளி வருவதாக செய்திகள் கசியத் தொடங்கியது.

ஆளுங்கட்சி தலைவர், லோகநாதனின் கட்சியுடன் கூட்டு இல்லை என்பதை அவசரமாக அறிவித்தார்.

ராகவ் ஜோஷி வீட்டில் அவருடைய பாஸ் விஷ்வா வந்திருந்தார்.

“சார் இந்த தமிழ் நாடு வந்து 14 வருஷம் ஆயுடுச்சு. சில நல்ல நண்பர்கள் இருக்காங்க. பையன் நல்ல சிபிஎஸ்இ ஸ்கூல்ல படிச்சு இப்போ அமெரிக்கால மேல்படிப்பு படிக்க போயாச்சு. கவர்ன்மெண்ட் நிறைய கஷ்டங்கள் கொடுத்துச்சு. எப்படியோ சமளிச்சசுட்டேன். நானும் வொய்ஃப் பும் ready to leave என்றதும் விஷ்வா

“அதுக்குதான் நானே உங்கள என் டிபார்ட்மெண்ட் க்கு கேட்டு வாங்கி இருக்கேன். இனிமேல் UP ல நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம். நாளைக்கு 6 மணி ஃப்ளைட். நாம 4 மணிக்கு கிளம்பனும்.

“விஷ்வா சார். நீங்க தூங்குங்க. இந்த லோகநாதன் அரெஸ்ட்டுக்கு அப்புறம் இன்ஸ்பெக்டர் ரகுபதி என்னை செக்யூரிட்டி இல்லாம எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லி இருக்கார். அவருக்கு நைட் டியூட்டி யாம். அதனாலே 4 மணிக்கு அவரே நமக்கு ஏர்போர்ட் வரைக்கும் எஸ்கார்ட் பன்றேன்னு சொல்லி இருக்காரு. குட் நைட் சார்” என்று உறங்கி தொடங்கினார்

லோகநாதனின் மகன் இந்திரன் கோபத்தில் 6 ஆவது பெக்கை விழுங்கி,

“அந்த ராகவ் ஜோஷி யை போடணும். எப்டின்னு சொல்லு என்று தன் அல்லக்கை சகாயத்திடம் உருமினான்.

“அண்ணா அந்த ராகவ இப்போ நாம போட்டா பிரச்சினை. அதுக்கு தான் நான் ஈழவேந்தனை செட் பண்ணிட்டேன். அவன் பேர்ல ஏகப்பட்ட கிரிமினல் கேஸ் இருக்கு. இதுவும் ஒன்னா சேத்துப்பாங்க. நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது என்றதும் இந்திரன் 8 ஆவதை விழுங்கி, லேசாக சிரித்தான்

ஈழவேந்தன் சென்னை அடியாட்கள் 5 பேருடன் OMR லாட்ஜில் திட்டதை விளக்கி கொண்டிருந்தான்

“டார்கெட்டை நாளை காலை 4:30 க்கு அந்த ECR OMR லிங்க் ரோடில் திரும்பும் போது முடிக்கிறோம். எஸ்கார்ட் வண்டிக்கும் டார்கெட் வண்டிக்கும் ஒரு 10 மீட்டர் கேப் இருக்கும் . அந்த கேப்பில் நீ உன் டூ வீலர் ல ஸ்கிட் ஆகி அவரோட வண்டி முன்னாடி விழுனும். டார்கெட் வண்டி நின்ன அந்த செகண்ட் ல பின்னாலேந்து நாங்க ஓவர்டேக் செஞ்சு, எஸ்கார்ட் வண்டி சுதாரிக்கறதுக்குள்ள, 5 பேரும் டார்கெட் ட சரமாரியா வெட்டிட்டு S ஆரோம். OK வா.

“டேய் கரிக்காலா உன் வண்டி தான் நாளைக்கு. உங்கண்ணன் வீட்டுல தான வண்டி நிக்கும்”

“ஆமாம் னே .. அண்ணன் நல்லா வண்டி ஓட்டும் ஆனா சம்பவம்னு சொன்னா வராது. அதான் நாளைக்கு 4 மணிக்கு கோவில் போகணும். வண்டிய ரெடி பண்ண னு சொல்லிட்டேன். கரெக்ட் டா வரும் . நான் காரன்டி”

காலை 4 மணிக்கு ஸ்கார்பியோ வண்டி துடைத்து சந்தனம் இட்டு மாலை மாட்டி OMR லாட்ஜ் முன் நின்றது.

திட்டப்படி கிளம்பி ராகவின் வண்டியை கொஞ்சம் இடைவெளி விட்டு பின் தொடர்ந்தது. லிங்க் ரோட் திருப்பத்தில் டூ வீலர் விழ ராகவ் வண்டி நிற்க, ஈழ வேந்தன் டிரைவரிடம் வண்டியை ஓவர்டேக் செய்து நிற்க சொல்லி, அவசரமாக இறங்கி பொருள் எடுக்க பின் கதவை திறந்து பார்த்தால், எதுவும் அங்கே இல்லை.

“கரிகாலா பொருள் எங்கடா” என்று கத்த, டிரைவர் ..

“சார் நான் தான் இன்னிக்கு கோவில் போகும்போது எதுக்குன்னு, பொருளை எல்லாம் சாமி கிட்ட ஆயுத பூஜைக்காக வச்சுட்டு வந்தேன்” என்று சொல்லி கொண்டிருக்கும்போது

ரகுபதி சட்டென ரிவர்ஸ் வந்து இறங்கி சர்வீஸ் ரிவால்வரால் அந்த 5 பேரையும் 5 தோட்டாவால் சரித்தார். அதிர்ந்த ராகவ் ஜோஷி யிடம்

“ நீங்க ஒண்ணும் கவலை படமா போங்க சார். இவங்கல என்கவுண்டர் ல எப்போவோ போட்றுக்கணும். இன்னிக்கி தான் சிக்கினாங்க. இது என்கவுண்டர் ல வராது. வின் வின் ஃபார் ஆல். நான் பாத்துக்கறேன். நீங்க விட்னஸுக்கு வர வேண்டி இருக்கும். இனிமே நீங்க ஒரு பயமும் இல்லாம UP போங்க” என்று கை குலுக்கி விடையளித்து ஸ்டேஷனுக்கு வந்ததும் ஸ்கார்பியோ டிரைவரிடம்

“உன் பேர் என்னய்யா” என்றதும்

“மாருதி” என்றான்


24-10-23

One Comment on “கே.ஏ.ஸ்ரீனிவாசன்/ஆயுதபூஜை”

  1. மிக சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை. சுஜாதா வை நினைவுபடுத்தும் முடிவு..கதை முடிந்த பின்பும் நீண்ட நேரம் மனசைச் சுற்றி வருகிறது. பாராட்டுகள்.

Comments are closed.