
மழைத்துளியின் உறவுக்காக
ஈரச் சிறகை உதறாத
பறவையினம் இது
தாங்கொண்ணா அன்பின்
அடர்த்தியான மெளனத்திலிருந்து
தனக்கானதொரு
பிரத்யேக வானத்தை சிருஷ்டித்துக்கொள்ளும்
கலையறியும்
இந்த ஜீவன்
நீருற்றைப் போல
பீறிட்டெழும் நேசத்தை
முத்தங்களின் வழியே
கடத்தி விடும்
சிறு யோகி தான்
இந்தப் புள்ளினமும்
தன் சின்னஞ் சிறு :
இரகசிய அறையைத் திறக்கும்
பிரத்யேக சாவியை
தன் உடலிலிருந்து
ஒரு இறகாக உருவி
நடுங்கும் உங்கள் கரங்களில்
தரும் போது
சத்தியமாக அது அறிந்திருக்காது
அதனுள்ளே நீங்கள் காணப் போகும்
புத்தம் புது பிரபஞ்சத்தை
தானே இதுவரை கண்டறிந்ததில்லையென்று
