கெடுவான் கேடு நினைப்பான்/நாகேந்திர பாரதி

‘சுடலை அண்ணே இனிமே இது மாதிரி பேசாதீன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் . அப்புறம் நான் உனக்காகப் பேச்சு துணைக்கு இப்படி சைக்கிள் எடுத்துட்டு பக்கத்து ஊர்ல இருந்து வர முடியாது. ஆமா , சொல்லிப்புட்டேன் ‘ என்றான் மாயாண்டி .

‘ அட போடா உனக்கு என்ன . உனக்கு இங்கே சுடுகாட்டில் மொட்டை அடிச்சு பணம் வரலைன்னாலும் கடை வச்சிருக்க, அப்பப்போ வீட்டில வேற கூப்பிட்டு விடுறாங்க, முடி வெட்டிட்டு உனக்கு ரெகுலரா காசு வருது ,எனக்குப் பொணம் விழுந்தால் தானடா காசு.’

‘இந்த பாரு , ரெண்டு மயானத் திடலும் எப்படி காஞ்சு சுத்தமா கிடக்கு. ஒரு வருஷமாப் பொணமே விழலையேடா . ரெண்டு வருஷத்துக்கு முன்னால எல்லாம் இந்த கொரோனா வந்தப்போ வாரத்துக்கு ஒண்ணு விழுந்து கிட்டு இருந்துச்சு. வருமானம் நல்லா வந்துகிட்டு இருந்துச்சு ‘ என்றான் அந்த மயானத்தில் பொணத்தை எரிக்கும் வேலை செய்யும் சுடலை .

அவனுக்கு வேற தொழில் ஒன்றும் பார்க்கத் தெரியாது , இல்ல ,போறதுக்கு சோம்பேறித்தனம் , பக்கத்தில் இருக்கிற கருவை மரத்தை வெட்டிட்டு வந்து காயவைத்து பொணத்தை எரிக்கிறதுக்கு விறகு, சுள்ளி தயாரிச்சு வைக்கிறது . அப்புறம் , மாட்டுச் சாணியைத் திரட்டி வந்து காய வச்சு எரு ரெடி. வேற எதுவும் வேலை பார்க்க சோம்பேறித்தனம்.

அவன் பொண்டாட்டி தான் ஏதோ கொஞ்சம் பக்கத்து வீடுகளில் போய் வேலை பார்த்து என்னமோ கொஞ்சம் பணம் வருது. அதிலேதான் வயத்துப் பொழைப்பு ஓடிட்டு இருக்கு . புள்ள வேற ஏழாவது படிக்கிறான். படிப்பு யூனிபோர்ம் செலவு அவனுக்கு அப்பப்ப இருமல் காய்ச்சல், மூச்சு இளைப்பு. மருத்துவச் செலவு வேற.

‘எல்லாம் சரிதாண்ணே , நீ போயி இந்த மண்ணு வண்டி அடிக்கலாம். வேலையா இல்லே. இந்த மரத்தடியிலே உட்கார்ந்து போற வரவங்களைப் பிடிச்சு புலம்பிக்கிட்டு இருக்கிறதுக்கு . நல்லா இல்லேண்ணே நான் உனக்குப் பாவம் பேச்சு துணையாக இருக்கட்டும்னு வந்து ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்துட்டு போறேன். இந்த புலம்பலைத் தொடர்ந்தா , நானும் வர்றதை நிறுத்திடுவேன், ஆமா’ என்று கோபித்துக் கொண்டான் மாயாண்டி .

‘அட போடா நேத்து வேற மழை பெஞ்சு, இங்கே பாரு கீழே ஈரம் இன்னும் காயலை, அதுதான் காலை மடிச்சுக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கேன். நீ என்ன குட்டைக் காலுப் பய, காலை ஆட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கே . இந்த விறகு எல்லாம் வேற ஈரமா போச்சு. அத வேற பின்னாலே காயப் போட்டு இருக்கேன். அதுக்குள்ள ஏதாவது பொணம் விழுந்துட்டா என்ன பண்றது. அதுவும் இப்பெல்லாம் பசங்க முந்தி மாதிரி வீட்டிலே ஒரு நா கூட வச்சுக்கிறது இல்லே சொந்த பந்தம் வரதுக்கு . உடனுக்கு உடனே காரியத்தை முடிக்கிற அவசரம். ‘

‘சேதியை வந்து சொல்ற சொந்தக்காரப் பய கிட்ட உடனே காசைக் கறந்துடணும். இல்லைன்னா அழுதுகிட்டு அப்புறம் பொணத்தோட வர்ற சொந்தங்க கிட்ட காரியம் முடிச்சதும் காசு வாங்கிறது வேற கஷ்டம். அன்னிக்கி ராத்திரி , எந்திரிக்கிற பொணத்தை மண்டையையும், காலையும் அடிச்சுப் போட்டு ஒழுங்கா எரிச்சு , மறுநா எலும்புகளைக் கூட்டி உருவம் செஞ்சு, வர்ரவன்கிட்ட, அஸ்தி கரைக்கக் குடுக்கிறப்போ மீதி பணத்தையும் கேட்டு வாங்கிறதுக்குள்ள எம்புட்டுக் கஷ்டம் . வெட்டியான் பாடு என்னமோ ஈஸின்னு நினைச்சுக்கிட்டு இருக்கே ‘

‘அதுக்கில்லேண்ணே , உன் தொழில் கஷ்டம் தான். காசை வாங்கிறதும் கஷ்டம் தான். இப்ப எனக்கும் கூட இதிலே வருமானம் கொறைஞ்சு போச்சுதான். அதுவும், இப்பப் பசங்க, ‘மொட்டை வேணாம், மீசையை மட்டும் மழி’க்கச் சொல்லி அந்தக் காசும் குறைஞ்சு போச்சு தான். அதுக்காக இப்படியான்னே, கொரோனாக் காலம் நல்லா வருமானம் வந்துச்சுன்னு பொலம்புறது . தப்புண்ணே ‘

‘ ஒரு வருஷம் ஆச்சுடா, அதுதான் , ஆத்தாளைக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னிக்கி ஏதாவது நல்ல சேதி , ஊரிலே பொணம் விழுந்த சேதி வராதான்னு ‘ என்று சுடலை சொல்லிக் கொண்டு இருக்கும்போது சுடலை பொண்டாட்டி பின்பக்க வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தனர்.

‘ஐயையோ , இங்கே வாங்களேன். புள்ளை மூச்சுத்திணறி மயங்கிப் போயிக் கிடக்கான் . என்னென்னு தெரியலியே ‘

——————————-