
27/ 10/ 23 அன்று கவியரங்கத்தில் வாசித்த இரண்டாவது கவிதை
ஆகாயத்தாமரையில் நீலோற்பலம்
அழகான ஒலி உடுக்கை மதன் உற்சவம்
உன் பாதி கரும் குழலி நடமாடவும்
சிவசக்தி என நீயும் இணைந்தாடினாய்
தமிழ் தந்த இளவேலின் மயிலாடவே
மறை தந்த மாதங்கன் ஜதி சொல்லவே
ஏழ் கடலும் ஏழிசையில் ஸ்வரம் பாடவே
எண் திக்கும் யாழேந்தி இசை பாடவே
ஒரு உருவம் ஒரு பொருளாய் நீ ஆடினாய்
இரு விழியாய் கதிர் மதியும் இணைந்தாடினார்
முத்தமிழில் முனைவோர்கள் பண்பாடினார்
நால் நிலமும் இயந்தியைந்து லயமாகவே
ஐங்கரனும், ஆறுமுகமும் சிலம்பாகவே
அறுசுவையின் எழிலோடு பதம் கூடவே
ஏழிசையின் இயல் உருவாய்
உமையாடவே
எண் திசையில் எங்கெங்கும் முரசொலிக்கவே
நவநலமாய் நடராஜன் பதம் தூக்கினார்
புதுயுகத்தின் ஒளி வாசல் வழி காட்டினார்.
அம்மையும் அப்பனும் ஆடிய நாட்டியம் ஆனந்தம் ஆனந்தமே
ஆயிரம் கோள்களின் நித்திய பாதையில் அவர் ஊர் கோலமே!
