வானவில் கே.ரவி/மஹாகவி!

அந்தப் பறவையின் சிறகிலிருந்து
கீழே உதிரும் இறகைக் கண்டுன்
மெளனம் கலைகிறதா
எங்கோ ஒருகுயிற் பேடை – தன்
துணையை விளிக்கும் கூவல் கேட்டுன்
உள்ளம் நெகிழ்கிறதா
பசியால் குழந்தை அழும்போது – அன்னை
தன்னையே அடித்துக் கொள்வது கண்டுன்
நெஞ்சு பதைக்கிறதா
பதவியில் இருந்து கொள்ளையடிக்கும்
கயமைத் தனத்தைக் கண்டவுடன் உன்
ரத்தம் கொதிக்கிறதா
அப்படியென்றால் நீயொரு கவிஞன்

வானத்தில் பல வர்ண ஜாலங்களை
வார்த்தைகளால் நீ வரைகிறாயா
நதிகள் நடக்கும் தாளத்துக்குன்
கவிதைகளால் ஸ்ருதி சேர்க்கிறாயா
இனம்புரியாத ஏக்கத்தில் எப்பொழுதேனும் கரைகிறாயா
காற்றுப் புரவியில் ஏறிக் கொண்டு காலப் பரப்பில் விரைகிறாயா
ஓ!
அப்படியென்றால் நீயொரு கவிஞன்

ஆனால்,
உன்னைக் கடந்து வேறொரு பொருளில்
உன்னால் கலக்க முடிந்தால்
ஒவ்வோர் அணுவின் அதிர்வுகளிலும்
நீயே துடிக்க முனைந்தால்
மனிதர்க்காக மட்டுமின்றிப்
புல்,புழு,செடி,கொடி எதற்கும் இரங்கிக்
கடவுளிடமே சண்டை போட்டு
நியாயம் கேட்க நீ துணிந்தால்
உலகில் உள்ள அத்தனை உயிர்க்கும்
அமரத்துவத்தை அளிப்பதற்குப்
பாடல் இயற்ற உன்னால் முடிந்தால்
ஒவ்வொரு வார்த்தைக் குள்ளும்
ஒருசுடர் ஏற்றி வைத்துச்
சொல்வதெல்லாம் நிகழச் செய்யும்
சக்தி உனக்கிருந்தால்
கவிஞர்களில் நீ மஹாகவி!
அப்பொழுதுதான்
கவிஞர்களில் நீ மஹாகவி!


27-10-2023