வண்ண மலரும் புள்ளிக்கோலமும்/புஷ்பா விஸ்வநாதன்

காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
வண்ண மலர்கள் சலிப்பின்றியே
வாசம் பரப்பும் தேனும் கொtடுக்கும்
காண் போருக்கு மகிழ்ச்சி அளிக்கும்

காலையில் எழுந்து குனிந்து குனிந்து
வரிசை வரிசையாய்ப் புள்ளிகள் வைத்து
இணைத்துக் கோலம் போடும் பெண்ணும்
அறிவாள் அது உடன் அழியுமென்று

கோலம் போடும் நேரம் முழுதும்
மனதில் மகிழ்ச்சி பொங்கி வழியும்
கைகளின் திறமை அறிந்த அவள் மனம்
பெருமை கொண்டு பூரித்துப்போகும்
வீட்டிற்கு அழகைக் கூட்டும் கோலம்
காண்போர் நெஞ்சைக்கிறங்க அடிக்கும்

இருக்கும் காலம் சிறிதானாலும்
கருத்தாய்க் கடமை செய்யும் மலரும்
புள்ளிக் கோலம் போடும் பெண்ணும்
உரைக்கும் தத்துவம் இதுதான் அறிவாய்

எத்துணை காலம் வாழ்கிறோம் இங்கு என்பது என்றும் முக்கியமில்லை
அத்துணை காலமும் இப் பூவுலகில்
எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்