சின்ன வாடு/சாந்தி ரஸவாதி

கதாசிரியர் திரு விட்டல் ராவ்
கதைசொல்லி சொல்வதாக அமைந்திருக்கிறது சொந்த ஊர் நண்பன் மகள் கல்யாணத்திற்கு வருகிறார். ரயில் சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ் அதில் தான் அந்த சந்திப்பு நிகழ்கிறது. டவுன் பஸ் கும்பலில் தாடியும் காவி உடையும் தாமிர நிற முடியும் கொண்ட ஒரு மனிதர். அவரைப் பார்த்து பஸ்ஸில் இருப்பவர்கள் எல்லாரும்
பரபரப்படைகிறார்கள். இவருக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவர் எழுந்து அவருக்கு இடமும் கொடுக்கிறார் ஒரு நிமிடம் அந்த சாமியார் போன்றவரை திரும்பி பார்க்கும் போது எங்கேயோ ஒரு பொறி தட்ட டேய் சின்னவாடு எப்படிடா இருக்க என்று அவரை அறியாமலே கூவி விடுகிறார்.
சின்ன வாடு இவருடைய பள்ளிக்கூட பால்யநண்பர்.
இவர் இப்படி ஒருமையில் பேசுவது சுற்றி இருப்பவர்களை ஒரு தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது. ஆதீன ஸ்தானத்திற்கே மாசு கற்பிப்பது போல். சின்னவாடுவும் சுதாரித்துக் கொண்டு அவரைப் புரிந்து கொண்டு நாளைக்கு என்னுடன் உணவு அருந்த வா என்று சொல்லிவிட்டு, காதோடு நான் இப்படி ஆன்மீக வழியில் சென்று விட்டேன் என்று கூறிவிட்டு ஊர் வந்ததும் இறங்கி விடுகிறார். கதை சொல்லிக்கு வியப்பு தாங்கவில்லை

அவருக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது
சின்ன வாடு என்கிற சேஷாத்திரி. இரண்டு பெண்கள் குரல் அசரீரி போல். கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பது அலாதி. பள்ளி நாடகங்களில் ஸ்திரி பார்ட் அவன் தான்.

தெரு வம்பு எல்லாம் அவ்வப்போது பெரியம்மா தான் அவனுக்கு சொல்வார்கள். அவங்க தான் சொன்னாங்க சின்ன வாடு வடக்கே போய் உஜ்ஜைனி மடத்தில் சேர்ந்து விட்டான் என்று. கண்ணுபையன் நம்ம ஜோசியர் வீட்டு கனகத்தை இழுத்துச் சென்று கோயிலிலே தாலி கட்டினான் சின்னவாடு ஆசிர்வாதம் பண்ணினான் எப்பொழுதும் அவன் நடத்தி வைத்த ஏதாவது ஒரு விஷயம் பெரியம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளுக்கே ஒரு பிரச்சனை வந்துவிட்டது. அவளுடைய கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் கை கூடவில்லை. ஜாதக தோஷம். அதையும் சின்னவாடு சரி செய்ததாக கேள்வி. அதற்குப் பிறகு அவனைப் பற்றி பேசுவதை பெரியம்மா நிறுத்திவிட்டாள்

சேஷாத்திரி சுவாமிகள் இல்லத்திற்கு அடுத்த நாள் செல்கிறார் அவருடைய மாமா ஒரு ஹோமியோபதி டாக்டர் அவனுக்கு சிறு வயதில் ஆதரவளித்தவர். சின்ன வாடுவை நன்றாக கண்டித்து வைத்திருந்தவர். இப்பொழுது வயோதிகம் மரண பயம் காரணமாக சேஷாத்திரி சுவாமிகளுக்கு அடிமையாகி அவர் காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். சின்ன வாடுவும் அவரை ஒருமையில் அழைத்து வேலை கொடுத்துக் கொண்டிருந்தான் ஏராளமாக மனிதர்கள் பெண்கள் கூட்டம் மிகவும் அதிகம் அவர்களுக்கு அடிமையாக சேவை புரிய வந்த ஆண்கள்.

சின்ன வாடு பித்தளை தட்டில் ஆரத்தி மேல் கற்பூர வில்லைகளை ஏற்றி அதை உற்றுப் பார்த்து”இருக்கு இருக்கு நல்லா பாரு இருக்கு புதச்சு வச்சிருக்கு புதைச்சு வச்சிருக்கு” அப்படின்னு தனக்கு குறி கேட்டு வந்த ஒருத்தர்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொல்லி அதற்குரிய கட்டணங்கள் சொல்லப்படுகிறது அதற்குள் சின்னவாடுவின் மாமா வந்து சாமிக்கு போஜன நேரம் ஆகிவிட்டது இனிமேல் மாலை நாலு மணிக்கு மேல் தான் பார்ப்பார் என்று சொல்ல சாமியார் எழுந்து போய்விட்டார். எல்லோரும் அலை மோதுகிறார்கள் நான் ஏற்கனவே சொல்லி வைத்து விட்டேனே ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டேனே என்று. அது எல்லாம் இல்லை சாயந்திரம் தான் என்று அறிவிக்கப்படுகிறது.

சின்ன வாடு கண்டிப்பாக கதை சொல்லியை கவனித்து இருக்க வேண்டும். கும்பலில். ஆனால் அவரை உணவுக்கு அழைக்கவும் இல்லை. அவன் சென்று விட்டான் இவர் வெளியே கிளம்பி சரி நாம் சாப்பாட்டை வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்று வருகிறார். அப்போது அவசர அவசரமாக வந்த ஒருத்தர் அவர் மேல் மோதிக்கொண்டு தரிசனம் ஆகிவிட்டதா என்று கேட்க தலையாட்டி விட்டு இவர் வெளியே போக அவர் உள்ளே முண்டி அடித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்.
சின்ன வாடு தன்னுடைய இப்போதைய நிலையில் மிதப்பில் பூர்வாச்ரமத்தை ஞாபகப்படுத்தும் நண்பனை உதாசீனம் செய்கிறார் என்று புரிந்து கொள்கிறோம்

இதில் என்னவென்றால் பிரச்சனைகளும் நோய் நொடிகளூம் மரண பயமும் தெய்வாம்ச வடிகால்களைத் தேடி அலைந்த போது
அந்த தெருவில் சின்னவாடு அந்த அம்சத்தோடு தோன்றினான். தாடியும் நீண்ட முடியும் காவி உடையும் மக்களை தங்கள் வயது அறிவு அனுபவங்களைத் தாண்டி பிரச்சனை ரீதியாக இறங்கி பணிய வைத்து இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடும் வேகத்தில் எந்தவித அசட்டுத்தனத்திற்கும் அடிபணியத் தயங்காத நம்பிக்கை தேக்கம். இவை கதாசிரியருடைய வரிகள். இன்னும் சில வரிகள் கவர்ந்தன.
“பழங்கணக்குப்
பார்க்கும் பசி அடங்கின பாடில்லை” .
தெருத்தெருவாக தன்னுடைய ஊரை சுற்றிப் பார்க்கிறார் “தெரு ஏகமாய் குறைந்தும் பெருகியும் அழிந்தும் போயிருக்கும் வளர்ச்சி” .
மிக நல்ல கதை.

One Comment on “சின்ன வாடு/சாந்தி ரஸவாதி”

Comments are closed.