ஒரு கவிதாயினிபிறக்கிறாள் /சசிகலா விஸ்வநாதன்

எனக்கும் மற்றோர் கவிதைகளை
படிக்கத்தான் ஆசை.
கற்றோர் கவிதைகள்
கற்க; தன்
கவிதை தானே சிறக்கும்;
என்பான்; என் பின்பிறந்தான்.
சரி!
எதைப் படிப்பது?
அவரைப் படி.
இவரைப் படி.
இதைப் படி.
அதைப் படி.
வெண்பா எழுது.
என்பா எழுது.
புதுக்கவிதை ஆக்கு.
தன்முனைக் கவிதை ஆக்கு.
குழம்பி விட்டேன்.
என் தமிழ் ஆசானிடம்
வினவினேன்
என்ன செய்ய?
எளிதான வழி ஒன்று பகர்ந்தார்.
உனக்கு என்ன நன்கு வருகிறதோ,அதை செய்.
உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை எழுது.
யார் போலவும் எழுத முயற்சிக்காதே.
எழா கைதட்டலுக்கு ஏங்காதே.
அங்கீகாரம் எதிர் பாராது எழுது.
சொற்பிழை,பொருட்பிழை இல்லாமல் எழுது.
எழுத எழுத சொல்வளம் கூடும்.
பொருள்வளம் கூடும்.
மனவளமும் கூடும்.உன் கவிதைக்கு நீ
ரசிகையாவும்,
விமர்சிப்பவளாகவும்
உருமாற;
அன்று ஒரு கவிதாயினி
பிறந்தாள் என்று துணிக.


31-10-2023