உம் கொட்டுதல்/எம்.டி.முத்துக்குமாரசாமி


—-
அவரோ பிரபல நடிகை. நானோ சாதாரணன் ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையில் பல பத்தாண்டுகளாக நட்பு பலத்திருக்கிறது. எனது கவிதைகளின் முதன்மையான வாசகி. முன்பொரு காலத்தில் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தன; இப்போதெல்லாம் தொலைபேசி உரையாடல்கள்தான். பேசினால் மணிக்கணக்கில் பேசுவாரென்பதால் முன் கூட்டியே phone appoointment வாங்கிவிடுவார். என் கவிதையைப் பற்றி பேசுவதாகத்தான் உரையாடல் ஆரம்பிக்கும் பிறகு எங்கெங்கோ போய்விடும். பெரும்பாலும் நான் ஏதும் பேசுவதில்லை. அவரேதான் பேசிக்கொண்டே இருப்பார். திட்ட, அழ, கோபப்பட, அதட்ட, அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்ள, சிரிக்க, கெட்ட வார்த்தைகள் பேச, குடித்துவிட்டு உளற நான் அவருக்கு நம்பிக்கையான தொலைபேசி நண்பன் என்று நினைத்துக்கொள்வேன். பெரும்பாலும் அவர் பேசும்போது நான் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு வேறு ஏதாவது படித்துக்கொண்டோ அல்லது எழுதிக்கொண்டோ இருப்பேன். சில சமயம் குட்டித் தூக்கம் போடுவதுமுண்டு. என் அசிரத்தையை உணரும்போது என்ன தூங்கிவிட்டாயா என்று அதட்டுவார். நேற்று அவருடைய தோழியான இன்னொரு பிரபல நடிகையும் உன் நட்பை விரும்புகிறார், பேசுவாயா என்று கேட்டார். அதாவது ப்ளீஸ் ப்ளீஸ் என்று கடகடவென்று பத்துப் பதினைந்து முறை கேட்கும்போது எப்படி மறுக்க முடியும்? உம் கொட்டினால் போதுமா என்று கேட்டு வைத்தேன். அது இந்தக்காலத்தில் பேசுபவருக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் தெரியுமா என்றாரா இவர்களெல்லாம் எவ்வளவு தனிமையில் உழல்பவர்களாக இருப்பார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.