பாசம்என்பது../ லக்ஷ்மிரமணன்

குமார்  பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனம்ஒன்றில் நல்ல வேலையிலிருந்தான். பார்க்கவும் கதாநாயகன்மாதிரி ஸ்மார்ட் டாக இருந்தான்.அவனுக்கான வரன் தேடலை அப்பா ராகவனும் அம்மா வைதேஹியும் துவங்கியபோதுதான் பிரச்சினையே ஆரம்பித்தது.பெண்பார்க்கப் போன இடங்களில் குமார் பெண்ணுடன்தனியாகப் பேசவேண்டும் என்பான்.

இந்தக்காலத்தில் இது சாதாரண விஷயம் என்பதால்பெற்றோர்கள் அனுமதிப்பார்கள்.பேசிமுடித்துவிட்டு வந்து “இந்த இடம் சரிப்படாது கிளம்பலாம்,”என்பான். வீடுதிரும்பிய பின்னரும்  தான் மறுத்ததன் காரணம்என்ன என்பதை அவன் சொல்லமாட்டான்.இவ்வளவிற்கும் அவர்கள் அவனுக்காக பார்த்த பெண்கள்அனைவருமே நன்றாகப்படித்து முடித்து வேலைக்குப்போகிறவர்கள்.பார்க்கவும் அழகாக இருந்தார்கள்.அந்தஸ்திலும்தங்கள் குடும்பத்திற்கு நிகரானவர்கள். அப்படி இருந்தும் குமார் மறுப்பது ஏன்?

ஒருவேளை அவன் தான் காதலிக்கும் பெண்ணைப்பற்றிதங்களிடம் சொல்லத்தயங்குகிறானோ?அவன் தாய் வைதேஹி கேட்டபோது…”காதல் கத்தரிக்காய்னு எதுவும் இல்லை. அநாவசியமாகஎதையாவது கற்பனை பண்ணிண்டு குழம்பிப் போகாதீங்க”அவன் தீர்மானமாகச்சொன்னான்மறுபடியும் வரன்வேட்டை துவங்கியது.அவர்கள் பார்க்கப்போன பெண் அனு பி.ஏ படித்துவிட்டுவீட்டோடு இருந்தாள். திருமணமானபிறகு வேலைவிஷயம்தீர்மானிப்பாள் என்று அவளது பெற்றோர்கள் சொன்னார்கள்.

பார்க்க பேரழகியாக இல்லாவிட்டாலும் லட்சணமாகவும்இருந்தாள் என்பதையும் மறுக்க முடியாது.இந்தமுறையும்குமார் மறுப்பானாகில் அவனுக்காக வரன் தேடுவதையேநிறுத்திவிடலாம்.பார்த்துப்பார்த்து ஒதுக்கி எந்தமுடிவும்எடுக்காமல் அவன் இருப்பதை எத்தனை காலம்தான் தாங்கிக்கொள்ளமுடியும்.?

அவர்கள்அனு குடும்பத்தினரைப்பற்றி விசாரித்துவிட்டுதிருப்தியடைந்தவர்களாயிருந்தாலும் குமார் என்ன சொல்லுவானோ என்கிறகவலை அவர்களுக்கு இருந்ததை மறுக்கமுடியாது.

குமார் அனுவுடன் தனியாகப்பேசிவிட்டு வந்து”அப்பா.அனுசம்மதித்தால் எனக்கு ஓகே “என்று அவன் சிரித்துக்கொண்டேசொன்னதும்அவர்கள் மகிழ்ச்சியில் சிலிர்த்துப்போனார்கள்அனு முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் ஓகே சொன்னதும்அவர்களது சந்தோஷமும் உற்சாகமும் பெருகி அன்றேதிருமண நிச்சயதார்த்த்தை எந்தவித ஆடம்பரமும்இன்றிநடத்தி முடித்தார்கள். அதில் அனுவின் பெற்றோர்களுக்கும்மனநிறைவும் மகிழ்ச்சியும் இருந்ததென்பதை அவர்கள் முகமேகாட்டியது.திருமணத்திற்கான தேதியையும் ஜோசியர் உடனேகுறித்துக்கொடுத்துவிட்டார்.வீடுதிரும்பியதும்ராகவனோ வைதேஹியோ எந்த விளக்கமும்கேட்காமலேயே குமார் சொல்லத்துவங்கினான்.

“எப்பவும் நான் பார்த்த பெண்ணிடம் தனியாகப்பேசும்போதுபழசாகிப்போன சாமான்கள் எனக்குப்பிடிக்காது.டி.வி. கேஸ்அடுப்பு,ப்ரிட்ஜ்,கைப்பேசி,ஜன்னல் திரைகள், கார் இவற்றில் எதையுமே பழசாகிப்போனமேல் வைத்துக்கொள்வதை நான்விரும்பியதில்லை உடனே மாற்றிவிடுவேன்”என்று நான்சொல்லி முடிப்பதற்குள் இதுவரை நான் பார்த்த பெண்கள்கோப்பட்டு”வாட் டூ யூ மீன்? பழசாகிப்போனால்மனைவியையும்மாற்றி விடுவாய் என்பதைஇப்போதே சொல்லி எங்களை எச்சரிக்கிறாயா?இது சரிப்பட்டு வராதுன்னு” கிளம்பிப் போவாங்க. ஆனால் இன்னிக்கு பார்த்த அனு என்ன சொன்னான்னு தெரியுமா? அப்படி நீங்க பண்ணுவதில்  எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உங்க பெற்றோர்களுக்குவயசானதும்  பழசாகி விட்டாங்கன்னு முதியோர் இல்லத்திலேகொண்டுவிட்டுடமாட்டீங்களே. மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடுங்க.

எனக்கு என்பெற்றோர்கள் எத்தனை முக்கியமோஅதைப்போல உங்கள் பெற்றோரும் முக்கியம்.எந்தவிதஅலட்சியத்தையோ வெறுப்பையோ அவர்களிடம் நாம்காட்டக்கூடாது. எத்தனையோபேர்கள் சின்னவயதிலேயேபெற்றோர்களை இழந்து தவிக்கிறார்கள்.அது மாதிரி இல்லாதுவயதான பெற்றோர்கள் நம்முடன் இருகக்கிறது நம் பாக்கியம்அதை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது”ன்னு சொல்லி என்னை சந்தோஷத்தில் மூழ்கடிச்சுட்டா.

நான் வேண்டியது எனக்கு மனைவியாகவும் உங்களுக்குமருமகளாகவும் இருக்கிற பெண் மட்டுமல்ல உங்களுக்குமகளாகவும்பாசத்துடன் இருப்பவளைத்தான். பாசம் என்பதுகேட்டு வாங்கக்கூடிய பொருளல்ல.இயல்பாகவே மனசில்பூக்கும் அற்புதமலர்” குமார் பேசிமுடித்ததும்  தங்களுக்கு இத்தனைஅருமையான மகன் உள்ளதை எண்ணி கண்களில் பொங்கிய கண்ணீருடன் அவனை பாசத்துடன் அணைத்துக்கொண்டார்கள்ராகவனும் தேஹியும்.