நாறும்பூநாதன்/நண்பர்


வாழ்வின் அத்தியாயங்களுள் வந்து செல்லும் சிலர், மனதில் நிரந்தரமாய் பதிந்து விடுவார்கள். என்னோடு பணி புரிந்த நண்பர்..பெயர் என்னத்துக்கு,..வேண்டுமானால், நெல்லையப்பன் என்று வைத்துக்கொள்ளுங்கள். திருநெல்வேலியில் சாதாரணமாய் ரெண்டாயிரம் நெல்லையப்பர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவராய் இருந்து விட்டுப்போகட்டும்.

அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து சர்குலேஷன் லைப்ரரி வார இதழ்களை ( வேற என்ன, குமுதம், விகடன்,கல்கி தான்..) எடுத்து லஞ்ச் பைக்குள் போட்டுக்கொண்டு மாடியை நோக்கிக் கிளம்ப ஆரம்பிப்பார்.
போகும்போதே, அடுத்த இருக்கையில் இருக்கும் பிரமநாயகத்தைப் பார்த்து, ” யோவ்..மணி என்னன்னு பார்த்தீரா..மூட்டை கட்டி வைச்சுட்டுக் கிளம்புமய்யா..இப்பத்தான் மங்கு மங்குன்னு வேலை பார்க்கீறாக்கும்..” என்று சொல்லி விட்டுப் போவார்.
மாடியில் என்ன இருக்கு ?
சீட்டு ஆட்டம் தான்..சரியா ஐந்து மணிக்கு ஆட்டம் களைகட்டி விடும்.
ரம்மி விளையாட ஒரு பெரும்படையே அங்குண்டு. விளையாடுவார்கள், விளையாடுவார்கள்..விளையாண்டு கொண்டே இருப்பார்கள்.
டீ வரும். தட்டாம்பயறு சுண்டல் வரும். சிகரெட் வரும்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்..ஒரே கூச்சலும், கும்மாளமும் தான். நம்ம நெல்லையப்பர் ( ர் – விகுதி போடுவதற்கு ஒரு காரணம் உண்டு. இவருக்கு அப்போது வயது 59 ) இருக்கையை விட்டு எழுந்திருக்கிறார் என்றால், மணி சரியாக இரவு 10 .25 என்று அர்த்தம்.
இடையில் ஒரே ஒருமுறை மட்டும் ஒன்னுக்கு இருக்க எழும்புவார்.
வேட்டியை அவிழ்த்து உதறி நன்றாக இழுத்துக்கட்டிக்கொண்டு வாசலை விட்டு வெளியே வந்தால் சரியாக இருக்கும்
10 .30 மணி பஸ்சை பிடிக்க. அது தான் அரசு ஊழியர் குடியிருப்பிற்கு செல்லும் கடைசி பஸ்.
வீட்டிற்கு செல்லும்போது எப்படியும் பதினொன்று ஆகிவிடும். அதன்பிறகு இட்லியோ தோசையோ சாப்பிட்டு பன்னிரண்டு மணிக்குத்தான் படுப்பார்.
இது தான் அவரது அன்றாடப் பணிகள் !
அவர் மட்டுமல்ல, அவரது பல நண்பர்களுக்கும் இது தான் routine .

மனுஷன் ஞாயிற்றுக்கிழமை என்ன செய்வார் தெரியுமா ?
காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டு விட்டு, தனது லஞ்ச் பையில் டிபன் காரியர் எடுத்து வைத்துக்கொண்டு பத்து மணிக்கு கிளம்பி விடுவார். நேராக, டவுண் பார்வதி தியேட்டர் வந்து இறங்கி,
காலை பதினோரு மணி ஆட்டம் பார்ப்பார். யார் நடித்த படம் என்பதெல்லாம் அவருக்கு முக்கியம் இல்லை..காலையில் ஒரு படம் பார்த்து முடிந்தவுடன், ஆபரேட்டர் அறையில் அமர்ந்து டிபன் காரியரை திறந்து மதிய உணவை சாப்பிடுவார். அவருக்கு எல்லாருமே நண்பர்கள்தான். பேசியபடி சாப்பிட்டு கை கழுவி விட்டு, ” அப்ப வரட்டுமா தம்பி ” என்று சொல்லி விட்டு, பொடிநடையாய் நடந்து எதிரே உள்ள ரத்னா தியேட்டருக்கு வந்து சேர்வார்.
சமயங்களில் அங்கே ” நாடோடி மன்னன் ” படம் ஓடினாலும் பார்த்து விட்டு, மெதுவாய் காலாற நடந்து ராயல் டாக்கீஸ்ல என்ன படம் என்று ஒரு நோட்டம் விடுவார். பிடித்தால் இரவு முதல் ஆட்டம் பார்த்து விட்டு,
பத்து மணிக்கு ராயல் டாக்கீஸ் பின்புறம் வந்து பஸ் பிடித்து வீடு போய் சேர்வார். அன்றும் இரவு 11 மணிக்குத்தான் வீடு போய் சேர்வார்.
இப்படி எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நடக்கும்.
எனக்கு இதையெல்லாம் பார்த்து மயக்கமே வந்து விடும்.

நான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சினிமா பார்ப்பவன். எப்படி இந்த மனுஷன் சளைக்காமல் அலையுதாரு என்று நினைப்பேன்.
” உங்க வீட்டம்மா பாவம்ல அண்ணாச்சி ” என்றேன்.
” இப்படி ஞாயிற்றுக்கிழமையிலேயும் சமைச்சு டிபன் கேரியர்ல வச்சு அனுப்புதாங்களே ..ஒரு நாளைக்காவது ரெஸ்ட் கொடுக்கப்படாதா.”
என்று சொன்னபோது, அவர் சிரித்தார்.
” தம்பி..நான் வெளியே இப்படி போனாத்தான் அவளுக்கு நிம்மதி..சவம், எங்கியும் போய்த்தொலையட்டும்னு இருப்பாள்..வீட்ல இருந்தோம்னா புழுப்புழுன்னு வருவாரு ன்னு சொல்லுவா “
பீடி, வெத்திலை பாக்குன்னு எந்த கெட்ட வழக்கமும் இவாளுக்கு கிடையாது.
என்னை ஒருமுறை சீட்டாட்டத்திற்கு அழைத்தார்.
” எனக்கு கழுதை விளையாட்டு மாத்திரம் தான் தெரியும்..” என்று சொன்னபோது, என்னை மேலும் கீழுமாய் பார்த்தார்.
ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளரலியே என்பது போல இருந்தது அது.

இதெல்லாம் நடந்து இருபத்தைஞ்சு வருஷத்திற்கு மேலே இருக்கும்.

காந்திமதி அம்மன் கோவில் தெப்பக்குள படிக்கட்டுகளில் அமர்ந்து மீன்களுக்கு பொறி போட்டுக்கொண்டிருந்த மனுசனைப் பார்த்து வியந்து போனேன்.
” அட..நம்ம நெல்லையப்ப அண்ணாச்சில்ல..”
அருகே சென்று ” அண்ணாச்சி, நல்லா இருக்கீகளா..பார்த்து எவ்ளோ நாளாச்சு..” என்றேன்.
” தம்பி..நீங்களா..நல்லாருக்கீங்களா..அப்பப்ப பேப்பர்ல உங்க பேரைப் பார்ப்பேன்..” என்று சொன்ன நெல்லையப்பர் ரொம்பவே தளர்ந்திருந்தார்.
அருகே ஒரு மஞ்சள் பை.
” செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல கோவிலுக்கு வந்துருவேன்..காலையிலேயே கூட வந்துருவேன்..” என்று சொன்னார்.
நெஞ்சு கதக் கென்றது. காலையிலேயேவா ?
” இப்பவும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துருவீர்களா ” என்றேன்.
அவர் சோர்வாய் சிரித்தார்.
” அந்தப் பாவச்செயல்களை எல்லாம் இப்ப செய்யறதில்ல தம்பி..வீட்டம்மாவுக்கு ரொம்ப முடியல..படுத்தே கிடக்கா..எல்லா டிரீட்மெண்ட் டும் கொடுத்துப் பார்த்தாச்சு..இங்கன வந்து காந்திமதியம்பாளே சரணம்ட்டு கெடக்கேன்..மதியம் சில சமயம் சாப்பிடுவேன்..சாப்பிடாமலும் இருப்பேன். இங்க கிடைக்குற பிரசாதம் போதும் வயித்தை நிறைக்க..”
என்றபடி நெற்றி நிறைய விபூதி பட்டையில் சிரித்தார் நெல்லையப்பர்.
அவர் மஞ்சள் பையில் வெளியே லேசாக நீட்டிக்கொண்டிருந்தது,
தச்சநல்லூர் அழகிய சொக்கநாதபிள்ளை எழுதிய ” திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் “.