ஈழத்துக் கவிஞர் சேரன் கவிதை

நீ இப்பொழுது இறங்கும் ஆறு. என்னும் புத்தகத்தில் இருந்து
வாசிப்பது சிறகா.

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இறந்த உடல்களுக்கு ம்,
அகதி முகாம்களி லே
குழந்தைகளின்
இடையறாத அழுகுரல்களுக்கும்
எரிந்த வீடுகளுக்கும்
இடையே எதைத்தான் எழுத ?

எமது நிலத்தின்
வடக்கு எல்லையில்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
பச்சை நிறம் இன்னும் உலராத
பற்றைக் காடுகளுக்கு அப்பாலும்
கிழக்கே,
அடுத்த விதைப்பிற்கென
எஞ்சிய நெற்கட்டைகளை
வயலில் கொளுத் தப்
புகை கிளம்பி
முகில் மறைக்கும்
வயல் வெளி களுக்கு அப்பாலும்

அவர்களின் போர்க்குரல் கேட்கிறது
இராட்சத வாகனம்
இரட்டைக் குழல் பொருத்தித்
தானியங்கும் துப்பாக்கி,
பச்சை உடுப்பணிந்த காலாட்படை ,

கொலையுண்ட நம் மக்களைப்
புதைத்த குழிகளின் மேல்
புற்கள் மலரும் முன்பாக
எமது கரங்களில்
துப்பாக்கி எழுகிறது

நிணம் புசித்தவர் களின் நிழல்கள்
நிலவொளி படர்ந்த இரவுகளில்
எமது நிலத்தை அசுத்தப்படுத்துவதை
எப்படி நாங்கள்
அனுமதிக்க முடியும் ? 

2-11-2023.