ஆர். வத்ஸலா/சுயம்

6/11/23 அன்று சொல் புதிதில் நிகழ்ந்த 19 ஆவது இணைய கால கவியர்ங்கத்தில் நான் வாசித்த கவிதை👇🏻


இது நானா?
எனக்குள்ளேயா இச்சக்தி?
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக் கொண்டன?
எனக்கா இச்சிறகுகள்?

எங்கே என் கேள்விகள்?
தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்
எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்?

ஓ! எனக்குத் தெரிந்து விட்டது
என் வாழ்வு இவ்வுலகம் எனக்கு இட்ட பிச்சையில்லை
என் சோற்றில் யார் பெயரும் எழுதப் படவில்லை
நான் ஜீவிக்க சமாதானங்கள் தேவையில்லை

சார்ந்து நின்ற குற்றத்திற்கு
ஆயுள் தண்டனை ஏற்க மாட்டேன்
பெற்ற உதவிகளை திருப்பி விட்டேன்
சகித்த அவமானங்களின் மூலம்
தீர்ந்தது கடன்!

இனி
உழைப்பேன் – ஆணைக்கு உட்படாமல்
சிந்திப்பேன் – தூண்டப்படாமல்
லட்சியம் செய்யேன் – அவமதிக்கும் பரிகசிப்பை

அனுபவிப்பேன் – என் பங்கு இன்பத்தை
என் கண்ணீர் எனக்கு மட்டுமே சொந்தம்
வெட்குவேன் – தவறும் போது சமாதானங்களை ஏற்காமல்
பெருமிதம் கொள்வேன் – வளரும் போது
ஒப்புதலுக்குக் காத்திராமல்

மறவேன் இனி ஒரு போதும்
நான் மானுடம்
நான் தனி
நான் மட்டுமே நான்
“வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்(1991 – 2023)” தொகுப்பு

One Comment on “ஆர். வத்ஸலா/சுயம்”

Comments are closed.