
இணையக்கால கவியரங்கம்
7/11/2023.
தருமங்குடி சிவன்கோவில்
அக்கிரகாரத்தில்
எங்களின் ஓட்டு வீடு
தாத்தாவுக்குப்பிறகு
அப்பா இருந்தார்
மாநகரம் வந்தாயிற்று
பிள்ளைகள் நாங்கள்
துளசி பூஜை
விடாமல் நடந்த வீட்டின்
முற்றத்தில் காட்டுப்பூனைகள்
குடும்பம் நடத்துகின்றன
நாட்டு ஓடுகளைப் பிரித்துப்பிரித்து
குரங்குகளின் விளையாட்டு
காஞ்சி சங்கராச்சாரியார்
வந்திறங்கி ஆசீர்வதித்த
நடுக்கூடத்தில்
வவ்வால்களின் ஆட்சி
தாத்தா ஜோசியம் சொன்ன
வீட்டுத்திண்ணையில்
சாராயம் குடித்துவிட்டு
சீட்டாடும் கிராமத்தார்
வீட்டை விற்க மனம் வரவில்லை
வைத்துக்கொண்டு அழவும்
முடியவில்லை
வயதுக் கூடி கிழடு தட்டிப்போகிறது
வாரிசுகளோ அந்நிய மண்ணில்
எது பற்றியும் சட்டையே செய்யாமல்.
