
இணைய கால இருபதாவது கவியரங்கம். நாள் 07.11.23
._
மூப்பின் மிகுதியில் மறதி நோய் தாக்கிய
தந்தையைப் பார்க்க
அமெரிக்காவிலிருந்து அவசரமாய் வந்திருக்கிறாள் பள்ளித்தோழி.
கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்
குழந்தையாய் மாறி குதூகலிக்கிறார் தந்தை
தன்னையறியாமலே தாயாய் மாறி நிற்கிறாள் மகள்.
எதற்கு? ஏன் என்ற வினாக்கள் கடந்த புரிதல்களில்
உறவுகளையும் உணர்வுகளையும் புறந்தள்ளி வேடிக்கைப் பார்க்காமல்
அகத்தே இருத்தி இதமாய் இறுக்கிக்கொள்ளும் போது
மனிதர்கள் புனிதர்களாகி விடுகின்றனர்.
.
