புஷ்பா விஸ்வநாதன்/மழையின் பன்முகம்

07.11.2023

மழை பெய்து ஓய்ந்தவுடன்
மண்வாசனையை நுகர
வாசற்பக்கம் நடக்கும் போது
அம்மா சொன்னாள் அலுத்துக் கொண்டே
ஈரம் காயாத துணிகள் எல்லாம்
நாற்றமடிக்குமே என் செய்வேனோ!!!

சில்லென்ற காற்று மேனிதழுவ
சேலைத்தலைப்பால் முதுகை மூடி
கதவுக்கருகே வந்து நின்றேன்
தெருவைக்கொஞ்சம் வேடிக்கை பார்க்க

எதிரில் இருந்த காலிமனை நடுவே
குட்டை போலே தேங்கிய தண்ணீர்
அதனைச் சுற்றி குறவர் குடும்பம்
குட்டைத்தண்ணீரில் ஈசல் பிடிக்குது
ஈர விறகில் அடுப்பை மூட்டி
அதனைச் சமைக்கும் குறத்தி ஒருத்தி

குளிரில் நடுங்கிய தெருநாய் ஒன்று
கதவுக்கருகே வந்து நின்று
ஏக்கத்துடனே என்னைப் பார்த்தது
உள்ளேயிருந்து அம்மா கத்தினாள்
கதவை மட்டும் திறந்து விடாதே
தெருநாய் உள்ளே நுழைந்திடும் என்று

என் எண்ணம் புரிந்த
அந்த ஐந்தறிவு நாயும்
ஏளனப் பார்வையை வீசிவிட்டு
எதிர்மனைப்பக்கம் ஓடிவிட்டது.

குளிரில் நடுங்கும் நாயைக்கண்ட
குறவனும் அதனை அருகே அழைத்து
இறுக்கி அணைத்து ஆறுதல் தந்தான்
ஈசல் உணவை அதற்கும் கொடுத்தான்

கருணை கொண்ட மனம் தான் கடவுள்
கை கூப்பித் தொழுதேன் அந்தக் குறவனை
மண்ணின் ஈரம் காய்ந்து போகும் -அவன்
நெஞ்சின் ஈரம் வற்றாது என்றும்

One Comment on “புஷ்பா விஸ்வநாதன்/மழையின் பன்முகம்”

Comments are closed.