குடைகளின் கால்கள் /நாகேந்திர பாரதி

அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை


அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச் சிரிப்புத்தான் வந்தது . இரண்டு இரண்டாகச் சேர்ந்து வந்த அவர்களைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான், அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து அவன் அருகில் நிற்கும் வரை.

பக்கத்தில் நின்ற அந்த ஆணும் பெண்ணும் காதலர்களாகத் தான் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கும் அந்தக் கால்களில் தெரிகிறது அவர்கள் காதல் . ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அவர்கள் பேச்சும் சிரிப்பும் அதற்கு ‘ஆமாம்’ போடுகின்றன .

அடுத்து நிற்கும் அந்தத் தம்பதிகளின் கால்கள் இந்தப் பக்கமும் , எதிர்பக்கமுமாய் கல்யாணம் ஆகி சிறிது காலம் ஆகி விட்டது போலும். பேச்சு இல்லை. ஒரு அமைதி அவர்களிடத்தில் .பேசிப் பேசி அலுத்துப் போய் விட்டதா . தெரியவில்லை. .மழை விட்டு விட்டதால், அனைவரும் குடைகளை மடக்கிக் கொண்டனர். இப்போது அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரிந்தன.

அந்தத் தம்பதிகள் முகத்தில் தெரியும் வெறுப்புணர்ச்சி , இவர்கள் ஒரே வீட்டில் வாழும் பாம்பும் கீரியும் என்று புரிகிறது. ஏன் அப்படி. இப்போது அவர்கள் உதடுகள் லேசாக அசைகின்றன. பக்கத்தில் இருக்கும் காதலர்களின் சிரிப்பும் பேச்சும் அவர்களின் மெதுவான பேச்சைக் கேட்க விடவில்லை. மெதுவாக ஏதோ வேலை இருப்பது போல் அந்தப் பக்கம் சென்று அவர்கள் பக்கம் சென்று நின்று கொண்டு முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டான் . காதுகள் இவர்கள் பக்கம்தான்.

‘ஏண்டி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி கிடையாதா ‘.
‘ஆமாம். நீங்க தான் உலகத்திலே பெரிய புத்திசாலி ‘
‘பின்னே, இப்ப பாரு, அந்தக் கல்யாணத்திற்குப் போக வேணாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறே. நேர வந்து பத்திரிகை கொடுக்கலை வாட்சப்பில் அனுப்பி போன் பண்ணிச் சொன்னானாம் தம்பி. உடனே கிளம்பணும்னுட்டே .’
‘இந்தக் காலத்திலே அதையெல்லாம் பார்க்கக் கூடாதுங்க. அதுகளுக்கு எவ்வளவோ ஜோலி. போன் பண்ணினான்லே . சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுங்க .’
‘அது சரி, அதான் எனக்கு விருப்பம் இல்லேன்னாலும் கிளம்பி வந்துட்டேன்ல. ‘

இப்போது அவர்கள் கால்கள் திரும்பி நேராக. ஒருவரை ஒருவர் பார்த்தபடி. குனிந்தபடி கேட்டுக் கொண்டு இருந்த, அவனுக்குத் தெரிந்தன .

இப்போது ஒரு பஸ் வந்தது.
‘பார்த்து மெதுவா ஏறு ‘ என்றபடி தன் மனைவியைத் தாங்கியபடி ஏற்றி விட்ட அந்தக் கணவன் அவளைத் தொடர்ந்து பஸ்ஸில் ஏறினான் .

இப்போது இந்த காதலர்களின் கால்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினான் . தம்பதிகளைக் கவனித்த தருணங்களில் இவர்கள் பேச்சை விட்டு விட்டான் . அங்கே அவர்கள் கால்கள் எதிர் எதிர் திசைகளில். பேச்சு சிரிப்பு இல்லை. என்ன நடந்தது . புரியவில்லை. நொடிக்கு நொடி மாறும் இந்தக் கால மனக்குரங்கின் ஆட்டமா இது .

இப்போது அடுத்த பஸ் வந்தது . அவர்கள் பஸ் போலும் . அவள் பின்பக்கக் கதவு நோக்கிச் செல்ல, அவன் முன்பக்கக் கதவு வழி ஏறினான். ஏனோ தெரியவில்லை. .முந்தைய தம்பதிகள் செல்வதைப் பார்த்த போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி அவனுக்கு இப்போதும் மனதில் ஏற்பட்டது . .

—————————–

2 Comments on “குடைகளின் கால்கள் /நாகேந்திர பாரதி”

Comments are closed.