ஜெ.பாஸ்கரன்/குடை மீறிய மழை!

மழை!

விடியற்காலையிலிருந்து விடாமல் கொட்டித்தீர்க்கும் மழை.

மழையானால் என்ன? வேலைக்குப் போக வேண்டுமே – இன்று சம்பளப் பட்டுவாடா தினம் வேறு. இந்த வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டிய முக்கியமான நாள் இன்று. போகாமல் இருக்க முடியாது.

விரைவாகக் குளித்து, உடையணிந்து கிளம்பினேன். அட, தொப்பியை மறந்து விட்டேனே. பத்து வருடம் முன்பு என்கீழ் வேலைபார்த்த ஃபிட்டர் முருகேசு, எங்கோ வெளியூரிலிருந்து வாங்கி வந்து அன்பாய்க் கொடுத்தது. போட்டுக்கொண்டு, நீளமான ரெயின் கோட்டை அணிந்துகொண்டேன். என் மகனைப் பார்க்க, நான் லண்டன் போயிருந்தபோது அங்கு எனக்காக வாங்கிய கோட் இது – இன்னும் அவன் வாசம் இதில் இருக்கிறது! எடுத்துக்கொண்ட குடை மட்டும் நான் இங்கு வாங்கியது. திறந்திருந்த கேட்டை மூடிவிட்டுக் கிளம்பினேன். தொழிலாளர்கள் காத்திருப்பார்கள்.

மழையில் குடையுடன் நடப்பது சுகமாயிருந்தது. பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது. இன்னும் சிறிது தள்ளி இருந்திருந்தால், மழையில் கொஞ்சம் கூட நடந்திருக்கலாம்.

என்னைப்போலவே நான்குபேர் குடையுடன் நின்றுகொண்டிருந்தார்கள். நான்கு குடைகளும், எட்டுக் கால்களும் தெரிந்தன. முகங்கள் குடைக்குள் மறைந்திருந்தன. அடித்துப் பெய்யும் மழையினால், அவர்கள் உருவங்கள் மங்கலாகவும், சில சமயங்களில் ஒன்றன் மீது ஒன்றாகவும் தெரிந்தன, வாட்டர் கலர் பெயிண்டிங் போல! கிணற்றிலிருந்து பேசுவதைப் போல, அவர்கள் குரல்கள் சன்னமாய்த் தொலைவில் கேட்டன.

நீண்ட நேரமாய்ப் பஸ் வரக்காணோம். மழையினால் இருக்கலாம். பிரேக் டவுன் ஆகியிருக்குமோ, தெரியவில்லை.

“இதோ, இங்கெ நிக்குதடா கெழம். எப்படியோ வெளியிலே வந்துடுது”

குரல் வந்த திசையில் திரும்பினேன். யூனிஃபார்ம் போட்ட இருவரும், என்னை அழுத்திப்பிடித்துக் குடையுடன் இழுக்காத குறையாக அழைத்துச்சென்றனர்.

“பணம் அனுப்பிச்சிட்டு நிம்மதியா வெளியூரில் இருந்துடறாங்க. இந்தப் பைத்தியங்களோட நாமதான் அல்லாட வேண்டியிருக்குது” யூனிஃபார்ம் குரல் காதில் விழுந்தது.

“இன்னக்குச் சம்பளம் குடுக்கணும்” உதட்டைச் சுழித்தபடி, அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.

மழை வலுவாகப் பெய்துகொண்டிருந்தது!

2 Comments on “ஜெ.பாஸ்கரன்/குடை மீறிய மழை!”

  1. Miga Arumai!
    The old age problem.
    Paithiyam” பட்டம் வேறு!
    மனப்பிறழ்வாயினும் மனித நேயம் மறக்கவில்லை!
    சம்பளம் கொடுக்னுமே!🥲🥲

Comments are closed.