
இன்று 08.11.23 விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
கரம் பற்றி தழல் சுற்றி
காலமுழுவதும் உடன்வருவேனெச்
சொன்னது கனவோ?
கை கோர்த்து ஊர் சுற்றி
காதலாய்க் கனிந்து கதைகள்
பேசியதும் கனவோ?
மண நாள் விருந்தில்
என்னுயிர்த் தோழரென
அறிமுகம் செய்தபோது,
உயர்ந்த புருவத்தைக்
கவனியாது விட்டேனா?.
உன் பயணம் ஒரு தினம்
முன்னால் முடித்து ஞாயிறு மாலை
நீ வந்த போது, என் தோழரைப்
பார்த்து மாறிய உன் முகம்
நோக்காமல் போனேனா?.
சின்னச் சின்னதாய் வளர்ந்த
சந்தேகங்கள், கேள்விகள்,
ஈட்டிச் சொற்கள் கிழித்த
ரணம் ,வலி தாங்கவியலாமல்
பதில் சொல்லத் தொடங்கிய போது
இழுத்துச் சென்று பரஸ்பர சம்மத
ரத்து வழக்கில் வந்து நிற்கிறது.
நீதிபதி வரும்வரை அமர்ந்திருக்கும்
இந்த வேளை, படம் போல
காட்சிகள் கண்முன்னே.
ஆறுமாதம் கழித்து மனம் மாறலாம்
என சட்டம் தரும் வாய்ப்பு
இன்று முடிக்கிறது.
காத்திருக்கிறேன்,
நீ வந்து என்ன சொல்வாயென….
-.
(மீள் பதிவு. குவிகம் 100 தொ குப்பில் வெளியானது.)
