ஜெ.பாஸ்கரன்/பொம்மியம்மா!

என் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொண்டபள்ளி. சிவப்பு மரத்தில் செய்யற மரப்பாச்சிபோல, மரத்தில்தான் என்னைச் செதுக்கினாங்க! ஆனாலும், நாயக்கர்கால மகாராணியப்போல காதில் பெரிய வட்டமான வண்ணத்தோடு, நெற்றிச் சுட்டி, சிவப்பு, மஞ்சள் வண்ண ஜம்பர், கழுத்தில் அட்டிகை, முன் கொசுவம் வைத்துக்கட்டிய போச்சம்பள்ளிப் புடவை, சங்கு வண்ண வளையல்கள் – அழகுதான். என்னுடன் ஜோடியாகப் பெரிய மீசையும், தலைக் கிரீடமும், இடுப்பில் வாளும் கொண்ட நாயக்கரையும் செய்து, அருகருகே வைத்தார்கள். புதுமணத் தம்பதிகளுக்குச் சீராகக் கொடுக்க!

ராமாயி அம்மா தெலுங்கு பேசுவாங்க. அவங்க கல்யாணத்துக்கு, மரப்பாச்சி பொம்மைங்களோட எங்களையும் கொடுத்து, கொலுவில வைக்கச் சொல்லிக் கொடுத்தாங்க அவங்க அம்மா. வருடம் தவறாம, ராமாயி அம்மா வீட்டுக் கொலுவில மூன்றாம் படி நடுவில் நாங்கதான் நிற்போம்! என்னோட இடது கைய, நாயக்கரு வலது கையிலெ கோத்துக்கிட்டு நாங்க நிற்கறதைப் பார்த்து கண் போடாதவங்களே கிடையாது!

‘இது கொண்டபள்ளி பொம்மியம்மா, எங்க அம்மா கொடுத்தது’, பெருமையாகச் சொல்லுவாங்க ராமாயி அம்மா.

ராமாயி அம்மாவுக்குக் குழந்தைங்க கிடையாது. அதனால கொலுவுக்கு வர்ற குழந்தைகளுக்கெல்லாம் ஸ்பெஷலா கிருஷ்ணன் பொம்மை பரிசாக் குடுப்பாங்க. கோலாகலமாக் கொண்டாடுவாங்க!

ஒரு முறை கொலு வைக்கும்போது, நாயக்கர் கை உடைந்து, பின்னப்பட்ட பொம்மை என்று தூக்கிப் போட்டுட்டாங்க…. அப்போதிலிருந்து எனக்கு ஒரே தனிமைதான். ராமாயி அம்மாவும் என்னைத் தூக்கிப்போட மனமில்லாமெ, கீழ்படியில ஒரு ஓரமா நிறுத்தி வெச்சுட்டாங்க.

இந்த வருஷம் என்ன தோணிச்சோ தெரியலை, ஆயர்பாடியில் காலை மடக்கி வெண்ணைப் பானைக்கருகில் நின்றிருந்த கருப்புக் குழந்தை கண்ணனைத் தூக்கி நாயக்கர் பிடித்திருந்த என் கைக்குள்ள ராமாயி அம்மா வெச்சுட்டாங்க! எனக்காகவே காத்திருந்தாற்போல, அந்தக் குட்டிக் கண்ணனும் என் இடுப்புல சொகுசா உட்கார்ந்து, கையிலெ வெண்ணையோட, என் முகத்தையே பார்த்து சிரிக்குது! எனக்கு இனிமே தனிமையில்லை, கண்ணனுக்கு அம்மாவாயிட்டேன்.

சரஸ்வதி பூஜை முடிஞ்சு, பத்தாம் நாள் இரவு எப்பொவும்போல என்னைப் படுக்கப்போட்டங்க. இந்த முறை என் கூட கண்ணனையும் தூங்க வெச்சாங்க. அது பாரம்பரியமா செய்யற ஒரு வழக்கம்.

மறுநாள் காலைல என் ஜம்பரெல்லாம் ஈரம். கண்ணன் வாயில ரெண்டு சொட்டு பால் வழிந்திருந்தது. எங்களை எடுத்து வைத்த ராமாயி அம்மா கையிலயும் ஈரம்.

ஒரு நொடி திகைத்த ராமாயி அம்மா, என்னையும், கண்ணனையும் தன் மார்போடு அணைச்சுக்கிட்டு, விசும்பி விசும்பி அழுதாங்க.

எனக்கு ஒண்ணும் புரியல. ராமாயி அம்மா ஏன் அழுதாங்கன்னும் தெரியல.