
இன்று 11.11.23 விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
சமையலறை ஜன்னலின்
சதுர வானம், கொஞ்சம் மேகம்,
கையாட்டும் வேப்பமரம்,
கரையும் காகமென
காட்சிகள், காலைக் காபியோடு
சிறிது நேரம் கிட்டும்.
கல்லூரி நாட்களின்
கவிதையுறவை நினைவூட்டி
காலைப் பொழுதை
இனிமையாக்கும்.
அதன்பின்,நாள் முழுதும்
நம் வசமில்லை.
பிள்ளையையும், பெண்ணையும்
பள்ளிக்குத் தயார் செய்து,
எனக்கும் இணையருக்கும்
மதிய உணவு கட்டிக்கொண்டு,
அலுவலகம் பறக்க வேண்டும்.
நெரிசலுக்கிடையில்
நகரத் தொடரிப் பயணம்.
இடதுகை மேலே பிடித்தபடி,
வலக்கையில் அலைபேசி.
பார்க்க, படிக்க மட்டுமே
இயலுகிற தருணங்கள்.
மிச்சம் ஒட்டியிருக்கும்
நப்பாசையில்,
கவிதைக் குழுவில் சேர்ந்தபின்,
வந்து குவிகிற கவிதைகளில்
எப்போதேனும் பதிவாகிற
உன் கவிதை படித்தால்,
மகிழ்வும், நிறைவுமாய்
மனசு பறக்கும் அன்று பூரா.
அலுவலகம் நுழைந்தபின்,
என் பெயரே நினைவிருக்காது,
தலை நிமிர்ந்து நேரம் பார்க்க
வாய்க்காது.
மதிய உணவின் பின்
கிடைக்கும் அரிய நிமிடங்களில்
மனதில் பதிந்த வைர வரிகளுக்கு
உணர்ச்சி காட்டியாவது*
பதிவு செய்கிறேன்.
நிறைய எழுத ஆசையும்
மனசுமிருந்தாலும்,
நேரம் வாய்க்காத,
ஓடிக் கொண்டேயிருக்கிற
இந்த வாழ்வின் நெருக்கடியை,
உயர்த்திய கட்டைவிரல்தான்
எதிர்வினையாவெனக் கேட்காமல்,
நீயாவது புரிந்து கொள்வாயென
நம்புகிறேன்,
.. – (*emoticon)

அருமையான கவிதை