அழகியசிங்கர்/ஐராவதமும் தீபாவளி மலர்களும்

ஐராவதம் மூலமாகத்தான் எனக்குத் தீபாவளி மலர்களைப் பற்றிய கவனம் ஏற்பட்டது.


நான் தீபாவளி மலரை எப்போதும் வாங்கியதும் இல்லை. பொருட்படுத்தியதும் இல்லை.


ஐராவதமோ லெண்டிங் லைப்ரரி மூலம் பழைய தீபாவளி மலர்களை ஆவேசமாக எடுத்துப் படிக்கும்போது , அவரிடமும் ஒருவித ஏக்கம் ஒளிந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.


அவருடைய படைப்புகளும் தீபாவளி மலர்களில் இடம் பெற வேண்டுமென்ற ஏக்கம்தான்.


தகுதிப் படைத்த அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு அந்த வாய்ப்பு ஏற்படாமலே போய்விட்டது. அவர் சிறுகதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் வல்லவர். ஒரு புத்தகப் புழு. சதாகாலமும் படித்துக் கொண்டிருப்பார்.

சிறுபத்திரிகைகளில் எழுதுவதில் வல்லவர். நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அவரிடம் ஒரு சிறுகதை வாங்கிப் பிரசுரம் செய்தேன். அப்படிப்பட்ட ஒருவருக்கு ஏன் தீபாவளி மலரில் இடம் கிடைக்கவில்லை?


சிறுபத்திரிகைகளில் எழுதியதால் அவரை யாரும் கண்டுகொள்ள வில்லையா?
அந்தக் காலத்தில் பிரக்ஞை, கசடதபற. பின்னாளில் கணையாழி, தீபம் பத்திரிகைகளில் அவர் எழுதியவர். என் விருட்சம் பத்திரிகைக்கு அவர் அதிகமாக விஷய தானம் செய்திருக்கிறார்.


அவர் எழுத்தில் ஒருவித நகைச்சுவை உணர்வும், கிண்டலும் இருக்கும். பலரைக் கோபப் பட வைக்கும்.


எப்போதும் பழைய தீபாவளி மலர்களில் வெளிவந்திருக்கும் கதைகளை எடுத்து விமர்சனம் செய்து கட்டுரை மாதிரி எழுதித் தருவார்.


என் பத்திரிக்கையில் அவற்றைப் பிரசுரம் செய்திருக்கிறேன் .


இப்போதெல்லாம் தீபாவளி மலர்கள் என் கண்ணில் படும்போதெல்லாம் ஏனோ அவர் என் ஞாபகத்திற்கு வருகிறார்.