
பாரதியார் தமது நண்பர்களான ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ சுப்பிரமணிய சிவா இவர்களைச் சிறையில் கண்ட போது அங்குள்ள கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்திருந் தார். பாரதியாருக்கு எவ்விதமான துன்ப வாழ்க்கையும் இலட்சியமில்லை. நாட்கள் கணக்கில் பட்டினியிருந்தாலும் அவரது மன உத்சாகம் குன்றாது. அவருக்குத் தாங்கமுடியாதது ஒன்று உண்டெனில் அது, ‘கட்டுகளுக்குள் அடங்கியிருப்பது’ என்பதுதான். அவருடைய பிறவி இயற்கைக்கு அது முற்றிலும் மாறானது. அவர் தனியே இருப்பதற்கு அஞ்சார். குடும்பத் தாரையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்திருக்கவும் பயப்படமாட்டார். சிறையில் தம் விருப்பப்படி உண்ணவும், இருக்கவும், பாடவும், ஆடவும் விடார்களே! அதற்கென்ன செய்யலாம்! மாவரைப்பதும் செக்கிழுப்பதும், கல்லுடைப்பதும் மனோதிடமுள்ளவர்கள் (தேகபல மில்லாவிட்டால்கூட) நடத்தி விடலாம். அதை நேரங் குறிப்பிட்டு, அந்த மணிக் குள்ளாக முடிக்க வேண்டுமே! மனிதனுக்கு மனிதன் அடிமையா? இந்த ஆத்மாவை அடிமைப்படுத்தும் செயலைக் காட் ட்டிலும் எங்கேனும் காட்டுப் புறங்களுக்காவது ஓடி மனிதர்களின் கொடுமைகளிலிருந்து விடுபட்டு வாழலாம் என்று பாரதியாருக்குத் தோன்றியது.
மேலும், அந்தக் காலத்தில் காந்தி மகாத்மாவின் சத்தியாக்கிரஹக் கொள்கைகள் நாட்டில் பரவியிருக்கவில்லை. கூடுமானவரையில் சர்க்கார் கையில் அகப்படாமல் தேச விடுதலைக்கு வேலை செய்ய வேண்டுமென்பதே பெரும் பாலான தேசபக்தர்களின் நோக்கமாயிருந்தது.
புதுச்சேரிக்குப் போய்விட்டால் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்டத்துக்குள் அகப்படாமல் வேலை செய்யலாம் என்று அவருடைய ஆத்ம நண்பர்கள் யோசனை சொல்லவும், அதற்கு ஒப்பி, ஸ்ரீ குவளைக் கிருஷ்ணமாச்சாரியாரின் ஷட்டகர் பூ சிட்டி குப்புஸ்வாமி அய்யங்காருக்குத் தமது சினேகிதர் கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு புதுவைக்குக் கிளம்பினார்.
சென்னையிலிருந்து புறப்படாமல் சைதாப்பேட்டைக்குச் சென்று அங்கிருந்து ரயிலேறினார். இரவு முழுதும் துயிலின்றிக் சங்விழித்துச் சோர்ந்து புதுவை வந்து சேர்ந்தார். நன்றாகப் பொழுது புலருமுன் ரயிலடி சேர்ந்து, விடியும்வரை அங்கேயேதங்கி அதிகாலையில் ஸ்ரீ குப்புஸ்வாமி அய்யங்கார் திருமாளிகையை அடைந்தார்.
பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற வாரம்பித்து விட்டால் பின்பு அது கொஞ்சத்தில் போகாது. ரயில் ஏறியபிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். ரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும் போலீஸாரால் அனுப்பப். பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு “அச்சமுற்றான் அழிவான்’ என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனதைத் தேற்றிக் கொள்வாராம். பல கேள்விகளை சம்சயப் பட்டவர்களிடத்தில் கேட்டு சரியான பதில் கிடைத்த பின்னரே அவர் மனதில் சமாதானம் ஏற்படுமாம். அப்பேர்ப்பட்ட தைரியசீலனுக்கே இவ்விதம் மனச்சஞ்சல மேற்படின் என் போன்றவர்களின் கதி என்ன வாகும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
என் தமையனார் ஸ்ரீ கே.ஆர்.அப்பாதுரை அய்யர் பாரதியாரிடத்தில் மிக்க அன்பு கொண்டவர். தேசீய இயக்கத்தில் ஆர்வங்கொண்டவர். குடும்பப் பொறுப்பைப் பற்றி ஸ்ரீ பாரதியார் சில சமயங்களில், “என்னடா! நாம் தேசப் பணிக்குச் சென்றுவிட்டால் வீட்டுக் காரியத்தை யார் நடத்துவார்கள்?” என்று யோசிக்கும் தருணங்களிலெல்லாம், என் தமையனார் அவரிடம், “நீ யோசனை செய்யாதே ஒரு செல்லம்மாளுக்காக எடுத்த காரியத்தை விடாதே! நீ செய்யும் தியாகத்தினால் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை ஏற்படலாம். நீ சிறை செல்ல வேண்டி வந்தாலும் நான் உன் குடும்பத்தைப் பராமரித்துக் கொள்வேன் என் இத்தனை பெரிய குடும்பத்தோடு. இதற்காக மனதைக் கலங்கவிடாதே!” என்று ஊக்கமளித்து உற்சாகமூட்டுவார். அவரும் சுதந்திரப் பிரியரானபடியால் ஒரு கட்டுப்பட்ட உத்யோகமும் அவருக்குப் பிடிக்காது. போஸ்டு மாஸ்டர் உத்யோகம் ஆறேழு வருஷம் பார்த்துத் தேசப் பணியில் ஆவல் கொண்டு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
அவர் கொஞ்ச காலமாக எங்கள் கூடவே சென்னையில் வசித்து வந்தார். ‘பால பாரதா’ என்ற பத்திரிகையும் ‘இந்தியா’வுடன் சேர்த்து நடத்தப் பெற்றது. ஸ்ரீ அப்பாத்துரை அய்யர் அதில் உழைத்து வந்தார். சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு ஊரூராகச் சென்று பணம் சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். நல்ல உழைப்பாளி; சலியாமல் வேலை செய்வார்.
பாரதியார் புதுவை சென்ற சமயம் இவர் சென்னையில் இல்லை. எங்கள் ஊரார் சிலர் சேர்ந்து அப்போது புதியதான ‘பயாஸ்கோப்’ கம்பெனி ஒன்று நடத்திவந்தனர். கூடலூரில் ‘பயாஸ்கோப்’ நடந்து வந்தது. அங்கு சென்றிருந்தார்.
பாரதியாருடன் புதுவை சென்ற நண்பர் அவரைப் புதுவையில் விட்டுவிட்டுக் கடலூர் சென்று என் தமையனாரிடம் இந்த விஷயத்தைக் கூறினார். அதை என் தமையனார் கேட்டுப் பாரதியாரைப் போய்ப் பார்த்து அவருக்குத் தேவையான துணிமணி முதலியனவற்றை வாங்கிக்கொடுத்துவிட்டு, சென்னை வந்து என்னை அழைத்துபோய் எங்கள் ஊராகிய கடையத்தில் கொண்டு விட்டார்.
புதுவை சென்ற பாரதியாரால் புதுவையும் பெருமையடையலாயிற்று. அதுவரையில் கடன்பட்டு அல்லது குற்றஞ் சாட்டப்பட்டுத் தம்மிடம் அடைக்கலம் புகுபவரைக் காப்பாற்றி வந்தது புதுவை. அதனிடம் சரண்புகும் அரசியல்வாதிகளை பிரிட்டிஷ் சர்க்கார் ஒன்றும் செய்ய முடியாது என்ற விஷயம் பாரதியார் அங்கு சென்று வசிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் இந்தியா முழுமைக்கும் தெரிய வாரம்பித்தது. என்னதான் புரட்சிகரமான நோக்கங் கொண்டவரானாலும் அஹிம்ஸா வழியில் நடக்கும் எந்தத் தீவிரவாதியும் அங்கு வசிக்கலாம் என்ற விஷயம் பாரதியாரால் உறுதியாக்கப்பட்டது.
ஸ்ரீ அரவிந்தகோஷ் முதலியோர் வந்து நிர்ப்பயமாக அங்கு வசிக்க ஆரம்பித்ததற்கும் பாரதியாரே காரணம் எனலாம்.
பாரதியார் புதுவை சென்றதை எப்படியோ விசாரித்தறிந்தனர் சென்னைப் போலீசார். ஆனால் அதைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. கோர்ட்டில் வழக்கு நடக்கும் பொழுதுகூட அதைச் சொல்வது அவசியமாயிருந்த போதிலும் சொல்லாமல் மறைத்து விட்டனர். ‘சுதந்திர’ ஆர்வங் கொண்டவர்களுக்கு இப்படி ஒரு பத்திரமான புகலிடம் இருப்பது தெரியக்கூடாதென விரும்பினர் போலும்!
ஆனால் எப்படியோ பாரதியாரின் புதுவை வாஸம் அதி துரிதமாகப் பரவிவிட்டது. அக்னி பகவான்கூட அவ்வளவு எளிதில் பரவமாட்டார்.
மேற்கண்டபடி பாரதியார் இருக்கும் இடம் தெரியாதது போல் பாவனை செய்தாலும் அவரைக் கண்காணிக்க வி.ஐ.டி.காரர்களை அனுப்பாமல் இல்லை. அங்கு அனுப்பப்பட்டவர்கள் அங்கேயே வேரூன்றி விட்டார்கள். பாரதியாரை வேவு பார்க்கும் வேலைக்காக நியமிக்கப்பட்ட படைக்குச் சென்னை அரசாங்கம் ஆயிரக்கணக்கான பணம் செலவழித்திருக்குமென்பது நம்பத் தக்கதே.
போலீஸ் இலாகாவில் உத்யோகம் உயர்வதற்கும் மேலதிகாரிகளின் அபிமானத்தைப் பெறுவதற்கும், ஏதாவது கோள் உற்பத்தி செய்யும் வழக்கம் உண்டல்லவா? அவ்விதமே, பாரதியார் மீது குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியா விட்டாலும் குற்றம் இருப்பதாக ஸ்தாபிதம் செய்ய முயன்றார்கள். அவர்கள் செய்த இடைஞ்சல்கள் – தொந்திரவுகள் ஒரு சத்யாக்ரஹியைக்கூட ‘அஹிம்ஸா’ மார்க்கத்தில் நம்பிக்கை இழந்து பலாத்காரத்தில் இறங்கச் செய்து விடுமென்று சொல்லலாம்.
பாரதியாரை அவர்கள் ஒரு நிமிஷங்கூட நிம்மதியாக இருக்கவிடவில்லை. இவ்விதம் ஏற்பட்ட கடவுள் சோதனை, பாரதியாருக்கு மேன்மையையே அளித்தது. அவரது தேசப்பற்று புடம் போட்ட தங்கம் போலப் பிரகாசிக்க ஆரம்பித்தது.
