12. சூரத் காங்கிரஸ்/செல்லம்மாள் பாரதி

சுதேசி இயக்கம் நாட்டில் காட்டுத் தீபோல் பரவ ஆரம்பித்தது. ஸ்ரீ.வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்ய ஆரம்பித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடந்த வியாபாரம் அனேகமாக தூத்துக்குடி, கொழும்புத் துறைமுகங்களின் மூலமாகவே நடந்தது. அந்த வேலையை பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி கப்பல்கள் தான் நடத்தி வந்தன. இந்தியக் கப்பல் கம்பெனி ஒன்று ஸ்தாபிதம் செய்தால் நல்ல லாபம் கிடைப்பதோடு நமக்குக் கௌரவமும் உண்டு எனத் தீர்மானித்து, “சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி” என்ற பெயரில் கூட்டுத் தொழில் சங்கத்தை ஸ்ரீ.சிதம்பரம்பிள்ளை ஸ்தாபித்தார். அதற்குத் தவணைப்படி பணம் கொடுக்கிறோமென்ற ஏற்பாட்டில், இரண்டு கப்பல்கள் விலைக்கு வாங்கினார். அக்கப்பல்களின் பெயர்கள் ‘லாமோ’ ‘காலியா’ என்பவை. மேற்படி கம்பெனிக்கு பணம் சேர்க்க ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சென்னை வந்திருந்தார். பாரதியார் தம் சிநேகிதர்களில் செல்வமுள்ளவர்களிடம் அவரை அழைத்துச் சென்று மேற்படி நிதிக்குப் பணம் சேர்த்துக் கொடுத்தார். மிக மும்முரமாக அந்த வேலையில் ஈடுபட்டிருந் தார்.
சூரத் காங்கிரஸ் நெருங்க ஆரம்பித்தது. ஒரு பெரிய வாலிபர்களின் கூட்டம், பாரதி சிதம்பரம்பிள்ளை இவர்களின் தலைமையில் சூரத்திற்குச் சென்றது. திலகர் தலைமையில் கூடிய தீவிரவாதிகளைக் காங்கிரஸிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று நிதானக் கக்ஷியினர்- மிதவாதி விரும்பினர். தீவிரவாதிகள் லாலா லஜபதிராயைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். மிதவாதிகள் ராஸ்பிகாரி கோஷைத் தேர்ந்தெடுத்தனர். ராஸ்பிகாரி கோஷ் மிகவும் ஆர அமர நளினமான பாஷையில் ‘தூங்கி வழிந்து சொப்பனம் காணும்முறை’ என்று பாரதியார் சொல்லும் நடையில், ரஸமாகப் பிரசங்கம் புரிய வேண்டும் என்று எழுந்தார்.
அவருடைய தலைமைப் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் போதே கூட்டத்தில் கலாட்டா ஆரம்பித்தாயிற்று. இந்த நிதானக் கக்ஷிக் கூட்டத்தைக் கலைத்துப் புத்தி வருத்த வேண்டும் என்று திலகர் எழுதியிருந்தார். அவரை மேடையிலிருந்து இழுத்துத் தூக்கி எறிய ஆரம்பித்தனர் நிதானக் கட்சியின் ஆட்கள்.
உடனே ‘திலகருக்கு ஆபத்து’ என்ற கூச்சல் உண்டாயிற்று. ஒரு இளைஞர் கூட்டம் திலகரைச் சூழ்ந்து அவர் துன்புறா வண்ணம் காத்தது. அக்கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் சென்னை இளைஞர்களே. கேட்க வேண்டுமா? “குழப்பமுற்றே அவர் யாவரும் வகை தொகையொன்றுமின்றி அன்று புரிந்ததை” எழுதுதல் சிரமம். தடியடி, வசவு, திட்டு, நாற்காலி வீச்சு எல்லாம் நடந்து, கடைசியில் போலீசார் வரவேண்டியும் ஏற்பட்டது. இத்தனை வைபவத்துடன் சூரத் காங்கிரஸ் முடிந்தது.
மிதவாதிகள், “திலகன் ஒருவனாலே அப்படியாச்சு!” என்று அழுதனர்; பிரலாபித்தனர். ஆனால் தேச பக்தர்களோ திலகர் தலைமையில் கூடி சுயராஜ்யத் தத்துவங்களை அவர் மூலமாக நன்கறிந்தார்.
பாரதியார் சென்னை திரும்பியதும், புதிய புதிய பல பல வேலைகளில் தலையிட வேண்டியிருந்தது. சூரத்தில் முன்னேற்றம் அடையும் நோக்கமுள்ள பத்திரிகாசிரியர்கள் எல்லோரும் ஒன்று கூடினார்கள். தங்களது நோக்கங்கள் நாட்டில் பரவுவதற்கு ஒரு கட்டுப்பாட்டின்படி நடக்க வேண்டும் என்றும், சர்க்காரின் அடக்கு முறைகளைக் கண்டிக்கும் சமயங்களில் எல்லாப் பத்திரிகைகளும் ஒன்றுபட்டு ஒரே விஷயத்தை எழுதி நாட்டு மக்களை விழிப்புறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் செய்தார்கள். தென்னாட்டின் பொறுப்பை பாரதியார் தம் மேல் போட்டுக் கொண்டார்.
சென்னை மகாஜன சபையில் அக்காலத்தில் மிதவாதிப் பெரியோர்கள் அதிகம் இருந்தமையால் தீவிரவாதிகளுக்கென “சென்னை ஜன சங்கம்” என்று ஒன்று ஆரம்பித்தார். பிற்காலத்தில் அதையே “செ சங்கம் என்று பெயர் கொடுத்துக் காரியங்கள் நடத்தினோம்; ஒரு காரியமும் நடக்கவில்லை” என்று துக்கத்தினால் ஏற்பட்ட ஹாஸ்யச் சுவையோடு “ஞானரத”த்தில் எழுதினார்.
“சுதேசி சாமான்கள்தான் வாங்க வேண்டும். அந்நிய சாமான்களைப் பகிஷ்கரிக்க வேண்டும். ஊரெங்கும் கூட்டங் கூட்டமாகச் சென்று பிரசாரம் செய்வதோடு, சுதேசி சாமான்களும் விற்க வேண்டும்” என்று முடிவு செய்து, அதற்காக ‘பாரத பந்தார்’ என்ற கடையொன்று திறக்கப் பட்டது. இதுவெகுகாலம் வரை லாபகரமாக நடத்தப்பட்டது. இந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் பாரதியார் அதிக ஊக்கத்துடன் உழைத்து வந்தார்.
இந்தியா முழுவதிலுமுள்ள தீவிரவாதத் தலைவர்கள் ஒருதினம் குறிப்பிட்டு அதை ‘சுயராஜ்ய தினம்’ என்று இந்தியா பூராவும் கொண்டாட வேண்டுமென்று ஆக்ஞையிட்டார்கள். அந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்று ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. சென்னையிலும் எல்லாப் பகுதிகளிலும் ஊர்வலங்கள் புறப்பட்டு, திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் கூடி பைக்ராப்ட்ஸ் ரோட் வழியே கடற்கரை சென்று உபன்யாசங் கள் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. பாரதியாரும் அவரது சகாக்களும், தொண்டர்களும் மூன்று நாட்களுக்கு முன்னிருந்தே வேலை செய்துவந்தனர். சென்னையில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று கூட்டங்கூடிப் பிரசங்கம் செய்து ஜனங்கள் எல்லோரையும் ஊர்வலமாக வரவேண்டுமென்று தூண்டுதல் செய்தார்கள். குறித்த தினமும் வந்தது, மேளதாளங்களோடு சமுத்திரக் கரைக்கு ஊர்வலம் செல்லவேண்டும் என்பது ஏற்பாடு. மேளதாளங்களுடன் ஊர்வலம் போக ‘லைசென்ஸ்’ வாங்க வேண்டும். போலீஸ் கமிஷனரைப் பார்த்துப் பேசி, விண்ணப்பம் செய்து, உத்தரவு பெற்றால்தான் அவ்விதம் செய்யலாம். அவ்விதம் போலீசாரி டம் விண்ணப்பித்துக் கொள்வது சென்னை ஜன சங்கத்தின் கொள்கைக்கு விரோதம்.
வாத்யக்காரர்கள் வருவதற்குத் தயங்கினார்கள். சங்கத்தில் எல்லோரும் ‘தேச பக்தர்கள்’தான்; என்றாலும் ஒருவரும் அவர்களுக்குத் தைரியம்கூறி அழைத்து வருவதற்கு முன் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கலாயினர்.
பாரதியார் வாத்தியக்காரர்களிடம் சென்று, “தம்பிமாரே! ஏன் தாமதம்? புறப்படுங்கள்! போலீஸாரால் உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஏற்படும் தண்டனையை நான் அனுபவிக்கின்றேன். இவ்விஷயத்தை போலீசாரிடமும் தெரிவித்து விடுகின்றேன். உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று உரைத்த பின்னரே நாயனக்காரரும் பாண்டு வாத்தியக் கோஷ்டி யினரும் புறப்பட்டனர்.
உரத்த குரலில் “வந்தே மாதர” கீதத்தைப் பாடிக் கொண்டு கோட்டு, தலைப்பாகை, நெற்றில் குங்குமப் பொட்டு, கழுத்தில் புஷ்பஹாரம் முதலியன அணிந்து ஓர் சேனாபதி தன் சைனியத்துடன் போருக்கெழுந்ததுபோல் பாரதியார் முன்னால் சென்றார்.
வீட்டில் நாங்கள் யாவரும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். போலீஸ் அனுமதியில்லாமலேயே ஊர்வலங்கள் யாவும் மேளதாளங்கள் சகிதம் கடற்கரை சேர்ந்தன. இந்த மாபெரும் கூட்டம் முடிகிறவரை மெரினா ரோட்டில் வண் டி கள்
விட முடியவில்லை. என்ன காரணமோ, அன்று போலீசார் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பெரிய கூட்டத்தில் ஒரு சிறு விபத்துக்கூட ஏற்படாமல் தொண்டர்களால் பாதுகாக்கப் பட்டுக் கூட்டம் இனிது கலைந்தது.
ஆனால் தூத்துக்குடியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதற்காக ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளையவர் களையும், ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் அவர்களையும் அவர்கள் பிரசங்கங்களில் ராஜத் துவேஷக் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்தார்கள். பாரதியாரும் சில நண்பர்களும் மேற்படி வழக்குக்குச் சாக்ஷிகளாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை, சிவம் இவர்களின் வழக்கு விசாரணைகளும் அவர்களுக்குக் கிடைத்த கொடிய தண்டனைகளும், தமிழ்நாட்டில் கொந்தளிப்பை யுண்டாக்கின. ஒரு கிளர்ச்சியை ‘இந்தியா’ பத்திரிகை ஒவ்வொரு வாரமும் தக்க படங்கள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் எதேச்சா முறையைக் கண்டித்து வந்தது. ‘இந்தியா’ செல்லாத கிராமம் இல்லை . படிக்காத மக்கள் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரிகையை படிப்பதோடல்லாமல் தமது நண்பர்களுடன் அதைப் பற்றி பேசுவதும், அதன் அழகை வியப்பதுமாயிருப்பர். சமயத்திற்கேற்ற பாட்டுக்களும் ஹாஸ்ய மிகுந்த படங்களும் தலையங்கங்களும் தமிழ் மக்கட்கு உற்சாகத்தை யூட்டி ‘இந்தியா’வை என்றும் மறக்காதவாறு செய்தன.
இவ்விதமாக மகா தைரியத்தோடு ஒரு பத்திரிகை உலாவியது பற்றி சர்க்காருக்குக் கோபம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பத்திரிகையை நடத்திய ஸ்ரீ எம். ஸ்ரீனிவாஸாச்சாரியார் பேரிலும் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய அய்யர் பேரிலும் வாரண்டுகள் பிறந்தன. அவர்களையும் கைது செய்தனர். தம் பேரிலும் வாரண்டு இருப்பதாக பாரதியார் கேள்வியுற்றார். இச்சமயம் அரசாங்கத்தின் கைக்குள் அகப்பட்டால் தமது தேச ஸேவைக்கு விக்கினம் ஏற்படும் என்பதை நினைத்துப் புதுவைக்குச் செல்ல எண்ணம் கொண்டார்.

One Comment on “12. சூரத் காங்கிரஸ்/செல்லம்மாள் பாரதி”

Comments are closed.