ஆர். வத்ஸலா/யாவரும் மகிழ…

இன்று நடைபெற்ற 25ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை இது

கட்டப்பட்ட கண்களுடன்
பல்லாயிரம் பிரதஷிணங்கள் செய்து
எலும்புக்கூடு மாடுகள் ஆட்டிய எண்ணெயில்
புனித ஸ்நானம்

ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும்
வெந்து மாண்ட
ஓராயிரம் புழுக்கள் உமிழ்ந்து வைத்த நூலில்
தீட்டில்லா பட்டாடை

மருந்தூசியால் துளைக்கப்பட்டு
ஆயுள் குறைந்த
கோமாதாக்கள் சுரந்த பாயஸம்
பக்தியுடன் தீனதயாளனுக்குப் படையல்

கந்தகத் துகளால் கறுத்துப் போன
எட்டு மணி உழைப்பால் ஓய்ந்துப் போன
கணக்கில் இல்லாத பிஞ்சுக் கரங்கள்
உருவாக்கிய பட்டாசில்
வாண வேடிக்கை

கொண்டாடினோம் மகிழ்ச்சியுடன் தீபாவளியை
நாங்கள்
நரகாசுரன் சொல்படி
சுபமங்களா, நவம்பர் 1994

”வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1991-2023)” தொகுப்பு

One Comment on “ஆர். வத்ஸலா/யாவரும் மகிழ…”

  1. Excellent! ரொம்ப மனசைபாதிக்கிறது .இப்படியும் மாறுபட்ட கோணத்தில்சிந்தி த்து கவிதைஅளித்த வத்ஸலா அவர்களை பாராட்டுக்கிறேன்..

Comments are closed.