
இன்று இனிய தீபாவளி நாளில், விருட்சம் இணைய கால கவியரங் கில் நான் வாசித்த கவிதை கீழே.
எங்கோ மழை
பெய்ததை ஈரமாய்ச்
சுமந்து வந்து
சேதி சொன்னது
காற்று.
மண்ணுக்குள் தேடி
வளங்களைக் கண்ட
சேதி சொன்னது
செடியில் பூத்த
மலர்.
சூரியனைத் தொலைத்துவிட்டு
வான் சுடர்களை விடுதலை செய்த
சேதி சொன்னது
நிலவு.
முத்துக்களை கடல் நடுவே
ஒளித்துவிட்டு
சிப்பிகளைக் கரையோரம்
இரைத்துவிட்ட
சேதி சொன்னது
கடலலை.
மடி கனக்க
கரு சுமந்தாலும்
தருணத்திற்கு
காத்திருக்கிற
சேதி சொன்னது
கார்மேகம்.
இயல்பாய்
அனாயாசமாய்
இயற்கை
தொடர்பு கொள்ள
புரிந்த சேதிகளை
தன் மொழியில்
கவிதை சொல்லி
காத்திருந்தான் தொடர்புக்கு
கவிஞன்.
.( ஆளுக்கொரு வானம் தொகுப்பிலிருந்து.)
