தங்கேஸ்/இறகுப் பந்தாட்டம்

                   

‘’லவ் பால் ‘ என்றபடி அமீனா இறகுப் பந்தை மேலே தூக்கிப் போட்டு ராக்கெட்டால் ஓங்கி அடித்தாள். இளம் பச்சை நிறப் பந்து அப்படியே ஜிவ்வென்று மேலெழும்பி , இறகு பிய்ந்து போன சிட்டுக் குருவி போல் ஹசினாவை நோக்கிப் பறந்து சென்றது.  அமீனா லெக்கின்சும் . டீ சர்ட்டும் அணிந்திருந்தாள். தலையில் போட்டிருந்தா பர்தா நழுவி வந்து கழுத்தைச் சுற்றி கொத்தவரங்காய்  கொடி போல படர்ந்து கிடந்தது.

ஹசினா நைட்டியிலிருந்தாள். தோளைச்சுற்றி ஒரு வெளுத்துப் போன சாலைப் போட்டு மறைத்திருந்தாள்.

.தலைக்கு மேலாக ராக்கெட்டை உயர்த்தி குதிகால்களை கொஞ்சம் மேலெழுப்பி சரியாக பந்தை அமீனாவை நோக்கி விரட்டி விட்டு  ‘’ என்ன புள்ள சர்வீஸ் போடுற , சர்வீஸ் எனக்குப் போடுறியா  இல்லாட்டி இந்த மஞ்ச அரளிக்குப் போடுறியா ?‘’ என்றபடி  மரத்தைப் பார்த்து ராக்கெட்டை நீட்டினாள்.

‘ ம்ம் … நீ தான் பாலைப் பார்த்து எடுக்கனும் ‘’ என்றபடியே மறுபடியும்  அவளை நோக்கி பந்தை விரட்டினாள் அமீனா . அம்மாவை அப்படியே உரித்து வைத்தது போல் சாடை என்றாலும் , இது போல்  போட்டி என்று வந்து விட்டால் , அம்மாவும் பொண்ணும் சரி மல்லுக்கு நிற்பார்கள். எப்படியாவது அம்மாவை ,தோற்கடித்து விட வேண்டும் என்பதிலேயே தான் அமீனா  குறியாக இருப்பாள் . ஹசினாவும் விளையாட்டு என்று வந்து விட்டால் மகள் அம்மா  என்றெல்லாம் பார்க்கிற ரகம் கிடையாது.

இது  ஒன்றும்  13.40 மீட்டர் நீளமும்  5.18 மீட்டர் அகலமும் கொண்டு மையக்கோடும்  பக்கவாட்டுக் கோடுகளும்  போட்டு, பார்வையாளர்கள் வசதியாக உட்கார்ந்து பார்ப்பதற்கு இருக்கைகள் போடப்பட்டிருக்கும் பக்காவான ஒற்றையர் ஆடுகளம் இல்லை. நாற்பதுக்கு நானூறு அடி கொண்ட பில்டிங் சொசைட்டியின்  ஒன்றாவது தெரு அது. இது போல் ஒரு பத்துப் பதினைந்து  அகலமான தெருக்கள் இந்த ஊரில் உண்டு 

ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பு நிழலுக்காக குறைந்தது ஒரு செம்பருத்தி மரமோ அல்லது ஒரு மஞ்சள் அரளி மரமோ ஏதாவது ஒன்று  வைத்திருப்பார்கள். சில வீடுகளுக்கு முன்பு வேப்ப மரம் புங்கை மரங்கள் கூட உண்டு.  இவர்கள் வீட்டிற்கும்  முன்பு ஒரு அளவான வேப்ப மரமும் பூத்து குலுங்கும் ஒரு மஞ்சள் அரளி மரமும் உள்ளன.

பொதுவாக கார் பைக் என்று வாகனங்களை எல்லாம் தெருவில் மர நிழலில் தான் நிறுத்தி வைத்திருப்பார்கள். பொழுது சாய்ந்து , இது போல முன்னிரவு நேரத்தில் தான் வாகனங்களின் அலறல்களும் , மனிதப் போக்குவரத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கும்

அமீனா ஒன்பதாவது   தான் படிக்கிறாள் என்றாலும் பார்ப்பதற்கு எப்போதும் துறு துறு என்று இருப்பாள். அவள்  சின்ன வயது ஹசினாவை அப்படியே உரித்து வைத்தது போல் இருப்பதாக  பக்கத்து வீட்டு நானிம்மா  எப்போதும் அவளிடம் சொல்லிக்கொண்டேயிருப்பாள். பள்ளி அளவில்  ஷட்டில் காக்  போட்டிகளில் கலந்து கொண்டால் , எப்போதும்  அமீனாவுக்குத் தான் வெற்றி.  

அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற வட்டார அளவிலான குறு வட்டப் போட்டிகளில் ,  ஜுனியர் டீமில் பள்ளியின் சார்பாக விளையாட அவள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக  உடற்கல்வி ஆசிரியர் சென்ற வாரம் தான் அவளிடம் சொல்லியிருந்தார். அதிலிருந்து தினமும் இது போல அம்மாவோடு ஒரு ரவுண்டு   விளையாடி அவளை தோற்கடிப்பது அவளது பழக்கமாக ஆகிவிட்டது.  ஒரு நாளாவது தொடர்ந்து இரண்டு நேர்செட்களிலும் அம்மாவை தோற்கடித்து  விட வேண்டுமென்று கடந்த ஒரு வாரமாக அவளும் நினைத்துக் கொண்டேதானிருக்கிறாள். ஆனால் அப்படி எதுவும் நடக்க மாட்டேன் என்கிறது.

ஹசினா மகள் என்று அப்படியொன்றும் எளிதில் விட்டுக்கொடுத்து விடமாட்டாள் . வழக்கமாக மாலை ஏழு மணிக்கு மேல் தான் அவளுக்கு வீட்டு வேலைகள் ஒழியும். அமீர் ஒர்க் ஷாப்பிலிருந்து திரும்புவதற்கு முன்பு  ஒரு சின்ன ஆசுவாசம் கிடைக்கும் அவ்வளவு தான்.

மாலை நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டால் வாண்டுகளும் , சிண்டுகளுமாக பத்துப் பதினைந்து உருப்படிகள் அங்கே ட்யூசனுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். ..பிறகு அந்த இடமே  முழுவதும் சல சலவென்று ஒரே பேச்சாகத் தான் இருக்கும்.

காலையில் எழுந்திருப்பதிலிருந்து  அவளுக்கு வீட்டு வேலைகளை முடிப்பதற்கே நேரம்  சரியாக இருக்கும். காலைத் தொழுகையை முடித்து விட்டு , அமீனாவை , அமீரோடு  பைக்கில் ஏற்றி  பள்ளிக்கு அனுப்பி வைத்தாளென்றால்,  நிற்காமல் பம்பரமாக வேலை செய்ய வேண்டியது தான்.  குட்டிப் பயல் எழுந்திருப்பதற்குள் அவனுக்குப் பிடித்த நூடுல்ஸ்ஸை  செய்து வைத்து விட்டு , அமீருக்கும்  தேவையான டிபனையும்  செய்து கொடுத்து வாசலுக்கு வந்து அனுப்பி வைக்க வேண்டும்.

குட்டிப் பையன் இடையில் எழுந்திருந்தால் ,அவளை   ஒரு பாட்டம் படுத்தி எடுத்து விடுவான். அவனை குளிக்க வைத்து  , உடை உடுத்தி  , டிபனை ஊட்டி  விட்டு , அவள் ஒரு வாய் அள்ளி வாயில் போட்டாளென்றால் , உடனடியாக  துணி துவைக்கும் வேலை ஞாபகத்திற்கு வந்து விடும் . வாஷிங் மெசினெல்லாம் அந்த வீட்டுக்கு சரிப்பட்டு வராது. அமீருக்கும் , பாப்பாவுக்கும் எல்லாமே கையால் தான் துவைக்க வேண்டும் .

வெளியே வாசல் கல்லில் வைத்து துணி துவைத்துக்கொண்டிருக்கும் போதே , மத்தியான சாப்பாட்டிற்கு அரிசி களைந்து குக்கரில் வைத்து விட்டு வர வேண்டும். டெம்போவில் மீன் விற்று வந்தானென்றால் மத்தி மீன் வாங்கி குழம்பு வைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் அவர்களே மீனை க்ளீன் பண்ணி கொடுத்து விடுவதால் கொஞ்சம் வேலை கம்மி. ஆனால்  மசால் தடவி கொஞ்சம் பொன்னிறமாக  பொறித்து எடுக்க வேண்டும். நல்ல சுவையான மீனாக இருந்தால் அமீர் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி சாப்பிடுவான்.

காலையிலேயே அரிசி , உளுந்தெல்லாம் பெரிய ,பெரிய குண்டான்களில்  ஊறப்போட்டு வைத்து விடுவாள். மூன்று மணிக்கு மேல் கிரைண்டரில் போட்டு அரைக்க ஆரம்பித்தால், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அது  நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும் .ஐந்து மணிக்குள் மாவு கேட்டு அடுத்த தெருவிலிருந்தெல்லாம் வழக்கமான ஆட்கள் அங்கே வர ஆரம்பித்து விடுவார்கள். அதை அளந்து பாக்கெட்டில் அடைத்து  விற்பது பக்கத்து வீட்டு பாத்திமா அத்தையின் வேலை.

அத்தை இரவு ஏழுமணி வரை மாவு விற்றுக்கொண்டிருப்பாள். அவள்  இரவு தொழுகைக்கு போகும் போது சிறிது நேரம், பாப்பா கை மாற்றி . இதற்கு இடையில் ஒரு பக்கம் ட்யூசன் வேறு ஓடிக்கொண்டிருக்கும் . எம்எஸ்ஸி எம்பில் கணிதம் படித்தது  இது போன்ற நேரத்தில் தான்   எப்போதாவது அவளது ஞாபகத்திற்குள் வந்து செல்லும்.

இரவு ஏழு மணிக்கு  மேல் பைக்குகள் , ஆட்டோக்கள்  இந்த தெரு வழியாக அதிகமாக வராது.  தெரு முழுவதுமே இந்த வாண்டுகளின் ராஜ்யமாகத்தான் இருக்கும் .

‘’ வீட்டுக்கு முன்னால்  உள்ள சிமெண்ட் திண்ணை  தவிர  தவிர படிக்கட்டுகள் சன்னல் திட்டுகள் என்று வாண்டுகள் ஆங்காங்கே வானரங்கள் போல் அங்கே அப்பிக் கிடப்பார்கள். ஒரு கணக்கை போட்டு காட்டி விட்டு  இன்னொன்றை கொடுத்து  முடிக்க சொல்லி  விட்டு,  இவள் போய் கிச்சனில் அரிசியை கழுவி குக்கரில் வைப்பதற்கு சென்று விடுவாள்.  அதற்குள்  வாண்டுப் பசங்கள் இரண்டு மூன்று பேராக  தெருவில்  இறங்கி இரண்டு மூன்று  சர்வீஸ் கூட போட்டு முடித்து விட்டு வந்து விடுவார்கள்.  சில சுட்டிகள் எதிர்வீட்டுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் பாரத் தியேட்டரின் சினிமா போஸ்டரை பக்கத்தில் போய் பார்த்துக்கொண்டு நிற்பார்கள்

இவள் திரும்பி வந்து ஒரு அரட்டுப் போட்டாலென்றால் உடனே ஓடி வந்து சமத்தாக புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். பயல்களுக்கு இப்படி என்றால் பொம்பளைப் புள்ளைகளுக்கு எந்த நேரமும்  பேச்சு தான் கதி.  அதுவும் சல சலவென்ற ஓயாத பேச்சு .

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக அவளுக்கு எல்லாம் பழகி விட்டது .வாண்டுகள் ஒன்றுக்கு ஒன்றும் சளைத்தது அல்ல. ஒன்று வாசலில் இருக்கும் வேப்ப மரத்தில் ஏறி விளையாடுவதும் .இன்னொன்று மஞ்சள் அரளியில் வந்து தேனெடுக்கும் தேன்சிட்டுக்களை பிடிக்க ஓடுவதுமாக ஒரே களேபரமாகத்தான்  இருக்கும் .

இவள் சொன்னால் அவர்கள் எதுவும்  கேட்பது கிடையாது. பற்றாக்குறைக்கு இவளது பையன் ஆசிக் வேறு  அவர்களோடு சேர்ந்து கொண்டு மரங்களை சுற்றி சுற்றி வந்து கிளைகளைப் பிடித்துக் கொண்டு லூட்டியடிப்பான்.

எவ்வளவு  தான் மிரட்டி உருட்டி போட்டு விட்டாலும் ,அடுத்த அரை மணி நேரத்தில் டவுசரை எங்காவது கழற்றிப் போட்டு விட்டு வந்து எல்லோருக்கும் முன்னால்  மொட்டையாக நிற்பான். ஆசிக் இவனை இப்படி நேரம் காலம் தெரியாமல்  பார்த்தால் எப்பொழுதும் ஹசினாவையும் அமீனாவையும் தான் செல்லமாக பிடித்து திட்டுவான்.

’ அப்பா சில்லி புரோட்டா வாங்கிக்குடு ‘’ என்று இவன் பைக்கில் தொற்றுவான்.

‘’ இப்படி மொட்டையா வந்து நின்னா எப்படி பைக்குல கூட்டிட்டுப்போறது ’

‘’ தம்பியை கூப்பிட்டுப் போ ‘’

‘’ உங்கம்மா உன்னை இப்படியே விட்டுட்டு எங்கடா போனா ? ‘’ குட்டிப் பயலுக்கு அதெல்லாம் காதில் விழவே விழாது.

‘’ தம்பிக்கு சில்லி புரோட்டா ‘’

‘’  ஒன் ஜீரோ ‘’  என்று கத்தி விட்டு அமீனா அடுத்த சர்வீஸைப் போட்டாள். பந்து நேரடியாக மஞ்சள் அரளி  மரத்துக்குள் சென்று சிக்கிக் கொண்டது. கொத்துக் கொத்தான பூக்களும் , அடர் பச்சை நிறக் கிளைகளும் கொண்ட மரத்துக்குள் , அதே  வண்ணம் கொண்ட இறகுப் பந்தை தேடுவது அவ்வளவு எளிதாக இல்லை . ராக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு அமீனாவும் கூட  வந்து தேடினாள்.

‘’ அம்மா அங்க பாரு  முல்லைப் பூவை , அதுவும்  அரளி மரத்துக்குள்ள ‘’’ என்று  தற்போது தான் மொட்டவிழ்ந்திருந்த ஒரு முல்லைப்பூவை பறித்து உள்ளங்கையில் வைத்து முகர்ந்து பார்த்தாள்.

 ‘ ஏண்டி எங்கயாவது அரளி மரம் முல்லைப் பூ பூக்குமா ‘’ ? 

‘’ இந்தா பூத்திருக்கே ‘’

உண்மையிலேயே முல்லைக்கொடிகள் மஞ்சள் அரளிக் கிளைகளை, தாயின் கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் குரங்கும் குட்டிகள் போலே ஆங்காங்கே பின்னிக்கிடந்தன. இந்த வாசலில் இரவானால் போதும் முல்லைப்பூக்களின் வாசம் கும்மென்று வந்து நாசியை நிறைத்து விடும்.

‘’ ஆமாடி இவ புதுசா முல்லைப்பூவை கண்டு பிடிச்சிட்டா . அந்தக் கொடியை மாடிக்கிராதி கம்பி மேல ஏத்தி விடுங்க ஏத்தி விடுங்கன்னு உங்கத்தாகிட்ட சொல்லி நானும் தவிச்சுப் போயிட்டேன். யாரும் பேச்சை கேட்டாத்தான ‘ என்றாள்.

‘’ ஏன் அந்தப் பூவை பறிச்சு நீயா தலையில வச்சுக்கப் போற ‘’ அமீனாவின் குரல் இன்னும் குழந்தைத்தனமாகவே இருந்தது.

‘’ ஏன் வச்சுக்கிறவங்களுக்கு கொடுக்கலாமில்ல ‘’

‘’ யாருக்கு கொடுப்ப ? ‘’

‘’ நம்ம வீட்டுக்குப் படிக்க வர்றாள்ள வசந்திப் பொண்ணு ‘’

எப்படியும் வாண்டுகள் எல்லாம் ட்யூசன் என்று பேர் பண்ணிக்கொண்டு விளையாடுவதற்குத்தான் இங்கே வருவது. பீஸ் என்று ஞாபகம் வந்தால் தான்  அவர்கள கொடுப்பது.

அதற்குள் அவளது குட்டிப் பையன் அங்கே வந்து ‘’ அம்மா நானும் விளையாட வர்றேன் ‘’ என்று மரத்தை ஒரு குட்டி ராக்கெட்டால் அடித்தான்.

‘’ ஆமா மரத்து மேல தான் பால் விளையாடுவாங்க , லூசுப்பயல் ‘’ என்றாள் அமீனா.

‘’ நீ தான் லூசு’’ என்றான் பையன்

‘’ ஆமா ஆமா , உங்க ரெண்டு பேரையும் பெத்ததுக்கு நான் தாண்டி லூசாப் போகனும் ‘’ என்றாள் ஹசீனா.

‘’ பெறகு என்னம்மா எப்ப பார்த்தாலும் விளையாடுறதுக்கு பொருள்களை எடுத்துட்டுப்போனா தொலைச்சிட்டு வந்து நிக்கிறான். நீ என்னைத்தான் தேடிப் பார்க்க அனுப்பி விடுற ‘’

‘’ பெறகு இதுக்கெல்லாம் ஒரு ஆளாடி வேலைக்குப் போட முடியும் ‘

‘’ இரு இப்ப பாரேன்  ‘’ அமீனா இரண்டு கிளைகளைப் பிடித்து உலுக்கு உலுக்கென்று உலுக்கினாள். பந்து பொத்தென்று கீழே விழுந்தது.

‘ ஏய் அமீனா பார்த்துப் புடிடி , பந்து சாக்கடைக்குள்ள விழுந்திரப்போகுது ‘’ என்று ஹசினா பதறுவதற்குள் குட்டிப்பையன் ஒடிப்போய் அதை எடுத்துக்கொண்டு ‘’ பந்து தம்பிக்கு ‘’ என்று பந்தை அசிங்கமாக முன்னால் வைத்துக் கொண்டான்.

‘’ நீ ஓடிப்போய் டிரவுசர் போட்டிட்டு வா  அத்தா வந்தா திட்டுவாங்க ‘’ என்றாள் அமீனா.

‘’ நானும் புரோட்டா வாங்க கூடப்போவேன் ‘’ என்றான் குட்டிப்பையன்.

‘’இருடி அப்பா ஒர்க் ஷாப்புலயிருந்து வர்றதுக்கு இன்னும் டைம் இருக்கு. அதுக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டிரவுசர போட்டு விட்டுரலாம். இப்ப போட்டு விட்டா , அதுக்குள்ள எங்கயாவது போய் கழட்டி போட்டுருவான்’’ என்றாள் ஹசினா.

ஆட்டம் மும்முரமாக போய் கொண்டிருக்கும் போது தாயும் மகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிய படி பந்தை அடித்துக் கொண்டிருந்தனர்.

‘’ நீ வேண்ணா இந்த மரத்துப் பக்கம் வந்து நின்னு பாரு . பால் வர்றதே தெரியாது ‘’

‘’சும்மா தோத்துட்டு பொய் சொல்லாத என்று சொல்லிக் கொண்டே லெவன் போர் ‘’என்று அடுத்த சர்வீஸை போட்டாள் அமீனா .

இந்த முறையும் பந்து மரத்துப் பக்கம் இருட்டுக்குள் போய் விழுந்தது.

‘’  ஏண்டி வேணுமின்னே பண்றியா ?’’

‘’ இந்த செட்ல நீ தோத்துட்டேன்னு சொல்லு சைடு மாறிக்கிருவோம் ‘’

‘’ வாடி இரண்டுல ஒண்ணு பார்த்துருவோம் ‘’

‘’ அப்டின்னா போர்ட்டின் எய்ட் ‘’

‘’ நீ என்ன தான் ஓங்கி ஓங்கி அடிச்சாலும் இந்த அமீனாவை செயிக்க முடியாது ‘’

‘’ஆமா இவ தோற்க மாட்டேன்னு அல்லாட்ட வரம் வாங்கி வந்திருக்கா ‘

பாத்திமா அத்தை தொழுகையை முடித்து விட்டு வெளியில் வந்து மாவு அண்டாவை பார்த்த போது கொஞ்சம் தான் மிச்சமிருந்தது.

‘’ ஏண்டி ஹசீனா உனக்கு நைட்டு டிபன் செய்ய மாவை எடுத்துக்கிறியா ‘’

‘’ வேண்டாம் மாமி, அவர் புரோட்டா வாங்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்காரு. இந்த வாண்டுப் பயல் வேற காலையிலயிருந்தே புரோட்டா புரோட்டான்னு கேட்டுக்கிட்டு இருக்கான் ‘’

‘’ சரி சரி இப்படி ரெண்டு பொம்பளைகளும் ,ஆளு போற வாற  தெருவுல விளையாண்டுகிட்டு இருக்காதீங்க. அமீர் வந்தா வையப் போறான் ‘’

‘’ அதெல்லாம் நைட்ல விளையாண்டா அவரு திட்ட மாட்டாரு மாமி  ‘’

‘’ என்னமோ நான் சொல்றதை சொல்லிட்டேன்’’

‘’ அத்தா திட்ட மாட்டாரு நானிம்மா . நான் அம்மாவை செயிக்கப் போறேன் ‘’ என்றபடி  அமீனா பந்தை விரட்டியபடித்தாள்.

‘’ ம் ஹும் திட்ட மாட்டான்  திட்ட மாட்டான் நீ அனேகம் கண்ட ,சரி   சரி நான் சொல்லுறதை சொல்லிட்டேம்மா ரெண்டு பொம்பளைகளும்  பார்த்துக்கோங்க ‘’

பாத்திமா அந்தப் பக்கம் சென்றதும் ‘’ ஏம்மா நிறுத்திக்கிறுவமா ?’’ என்று கேட்டாள் அமீனா.

‘’ ஏண்டி தோத்துருவம்னு பயம் வந்திருச்சா ?’’

‘’ அதெல்லாமில்ல அத்தா பார்த்தா திட்டுவாருன்னு நானிம்மா சொல்றாங்களே ‘’

‘’ ஏண்டி உங்க அத்தாவைப் பத்தி எனக்குத் தெரியாதாது நானிம்மாவுக்குத் தெரியுமா  ?  இதுக்கெல்லாம் போயா ,அவரு திட்டப் போறாரு ?  நீயாவது பள்ளிக்கூடத்துக்குப் போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வார. அம்மா சும்மாவே தான வீட்ல கிடக்கேன். எனக்கும் பொழுது போக வேண்டாமா ?’’

‘ ஆனா நானிம்மா அப்டிச் சொல்றாங்களே ‘’ ?

‘’ அதுக்க்கு என்ன தெரியும் ‘’

முதல் சுற்றில் தோற்றதும்,  இரண்டாவது சுற்றுக்கு இடத்தை மாறிக்கொண்டாள் ஹசினா. இந்த செட்டை எப்படியும் ஜெயித்து விடுவது என்று கொஞ்சம் ஆக்ரோசமாக ஆடிக் கொண்டிருந்தாள்.  அமீனா போட்ட சர்வீஸ் கொஞ்சம் வேகமாகப் பறந்து வந்ததால்  கையில் ராக்கெட்டோடு அப்படியே பின்னால் நகர்ந்து வந்தவள், அவளுக்கும் பின்னால்  நான்கைந்து கீழத் தெரு இளந்தாரிப் பயல்கள் நடந்து  வந்து கொண்டிருந்ததை கவனிக்கவேயில்லை. இமைக்கும் நேரத்தில் பின்னால்  வந்து கொண்டிருந்த ஒரு பையன் மீது மோதி விட்டாள். மோதிய வேகத்தில் ராக்கெட்டோடு இவளது முழங்கை அவன் மார்பில் இடித்து விட்டது. ‘’ ஸாரி  ‘’  என்று அவள் சொல்வதற்குள் அந்த இளைஞர்கள் சிரித்துக்கொண்டே , ஏதேதோ பேசிய படி  அந்த இடத்தை விட்டு கடந்து போய் விட்டார்கள்.

ஹசீனா கீழே கிடந்த பந்தை எடுத்து மறுபடியும் சர்வீஸ் போடப் போகும் போது தான் எதிரே  தெருமுக்கில்  அமீர்  பைக்கை நிறுத்தி விட்டு யாருடனோ போனில் பேசியபடியே இவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.

உடனே   அமீனாவிடம் ‘’ ஏய் அத்தா வந்துட்டாருடி ‘’ என்று சொல்லி விட்டு  சர்வீஸை தொடர்ந்து போட்டாள். இன்னும் இரண்டே இரண்டு பாயின்டுகள் தான். குறைந்தது இன்று அமீனாவீடம் தோற்காமல் போட்டியை சமன் செய்தாவது முடித்துக் கொள்ளலாம் .

 ‘’ஏய் அமீனா  போர்ட்டின் நைன்டி டி‘’

‘’ பார்ப்போம் பார்ப்போம் ‘’ என்ற படி அமீனாவும் பதிலுக்கு  பந்தை விரட்டினாள்

இடையில் அமீர் என்ன வேகத்தில்  அங்கே பைக்கில் வந்து இறங்கினான்  என்றோ , வந்து இறங்கியதும்  என்ன வேகத்தில் வண்டியை ஸ்டேன்ட் போட்டு நிறுத்தினான் என்றோ அவர்கள் இருவரும்  ஆட்டத்தன் சுவாரஸ்யத்தில் கவனிக்கவேயில்லை . வந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் , கொத்தாக ஹசினாவின் தலைமுடியை இழுத்துப் பிடித்து   கன்னத்தில் ஒங்கி ஒருஅறை விட்டான். அதற்குப் பிறகு தான் அவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதென்று உணர்வே வந்தது.,

’ஏண்டி சரியா உடுத்தியும் தொலைக்காம  , தெருவுக்கு வந்து பால் விளையாடுவாங்களா ?  ம்ம்  பின்னாலேயே போய்  பசங்க மேல மோத தெரியுது , ஆனா, உன் புருசன் வர்றது உன் கண்ணுக்குத் தெரியலை அப்படித்தானே ‘’  ஹசீனா ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ஆனால் அவன் மூச்சு விடுவதற்கு கூட அவளுக்கு நேரம் கொடுக்கவில்லை.  ‘’ ஏண்டி பண்றதெல்லாம்  ‘’ ஹராம் ஹராம் , இதுல எதிர்த்து வேற பேசுறியா  ?‘’  உன்னையெல்லாம் துவைச்சு எடுக்கனும்டி ‘’ என்றபடி  அடித்துக் கொண்டேயிருந்தான்.

பாத்திமா வந்து அவனை தடுப்பதற்கும் முன்னால் அவளுக்கு கன்னம் கழுத்து முதுகு என்று மேலேல்லாம்  நிறைய அடிகள் விழுந்திருந்தன. அமீனா குறுக்கே வரவும் அவளுக்கும் சேர்த்து ஒன்றிரண்டு விழுந்தது.

பாத்திமா சட்டென்று அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவன் அவளது கையை உதறிவிட்டு அதே வேகத்தில் பைக்கை எடுத்து கொண்டு பறந்து விட்டான்.

தெருவே சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது.  குட்டிப் பையன் , டியூசன் வாண்டுகள் மற்றும் தெருவில் வேடிக்கை பார்த்த சனங்கள் யாவரும் வாயடைத்துப் போய் நிற்க ஹசினாவும் அமீனாவும் கொஞ்ச நேரம் தெருவிலேயே நின்று அழுது கொண்டிருந்தார்கள்.  பிறகு  வீட்டுக்குள் போய் கதவை சாத்திக் கொண்டார்கள். பிறகு அந்த வீட்டுக்குள் நீண்ட நேரம் அவர்களது விசும்பல் ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

One Comment on “தங்கேஸ்/இறகுப் பந்தாட்டம்”

Comments are closed.