கலர் பார்க்கும் கலை

நாகேந்திர பாரதி


நமக்குத் தெரிஞ்ச கலர் எல்லாம் சிவப்பு, பச்சை, ஊதா. இதோடுகூட கருப்பு, வெள்ளை அவ்வளவுதாங்க . ஆனா இந்த பெண்கள்எவ்வளவு கலர் தெரிஞ்சு வச்சிருக்காங்க. கருஞ்சிவப்பு, நீலப்பச்சை, பொன்னிற மஞ்சள், கருநீலம், குடைக்கருப்புன்னுஎன்னென்னமோ சொல்றாங்க. அது என்ன குடைகருப்புன்னுகேட்டா , கருப்புலே ,குடைக்கருப்பு, மேகக் கருப்பு, சாம்பல்கருப்புன்னு இன்னும் ஏகப்பட்ட கருப்பு இருக்காம்.

இவங்க கூட மாலுக்குப் போறது எதுக்குங்க. இந்த மால்ங்கிறதுநமக்கு ஸ்டார்பக்ஸ் காஃபீ குடிக்கிறதுக்கும் , வீட்டிலே செய்யாதஏதாவது பட்சணம் சாப்பிடறதுக்கும்னு நம்ம நினைச்சா, இவங்கஏதோ அங்கே இவங்க வாங்கிற சாமான்களை எல்லாம் பார்த்துவாங்குறதுக்குத்தான் நம்மளை கூடக் கூட்டிட்டுப் போறதாசொல்றாங்க. நமக்கு சத்தியமா அந்த மாதிரி நோக்கம் எல்லாம்இல்லைங்கிறது அவங்களுக்கு புரியவே மாட்டே ங்கிறது.

இந்த மால்ங்கிறது என்னங்க. பெண்களுக்காக பெண்களால்நடத்தப்படும் பெண்களுடைய காட்சிக்கூடம் தானே. இதிலே நம்மபெண்கள் கூடப் போறது சும்மா ஒரு கம்பெனிக்காகத்தானே. இதுபுரியாம போன வாரம் என்னோட மனைவி கூட நான் போரம்மாலுக்குப் போயி பட்ட பாட்டைச் சொல்றேன் கேளுங்க.

உள்ள நுழைஞ்ச உடனே, நேரே டெக்ஸ்டைல் கடைக்குள்ளேநுழைஞ்சாங்க.நானும் பக்கத்திலே இருந்த காப்பி கடையைஏக்கத்தோடு பார்த்துக்கிட்டே அவங்க பின்னாலே போகவேண்டியதா போச்சு. உள்ளே வேக வேகமா சேலை செக்சனுக்குபோனாங்க. ஏதோ இவங்க போறதுக்குள்ளே அங்கே இருக்கிறசேலை எல்லாம் வித்துப் போயிடுமோங்கிற மாதிரி.

நாம கொஞ்சம் பொறுமையாதான் போக வேண்டியதாக இருக்கு.நாகரிக பெண்மணிகளோட ஹை ஹீல் ஷூவில் நம்மசெருப்புக்கால் மாட்டிக்காம , வாசனைத் திரவியம் கொட்டிமணக்கிற அந்த உடம்புகளிலே இடிச்சுடாமே பாத்து பதமா போகவேண்டியதா இருக்கு. ஒருவழியா நாமளும் அவங்க இருப்பிடத்தைஅடைஞ்சாச்சு.

ஒரு சேலையை எடுத்துக் காண்பிச்சாங்க . இந்த தளிர் பச்சைசேலை எப்படி இருக்குங்க. நமக்குத் தெரிஞ்சது ஒரே பச்சைதான். இது என்ன தளிர் பச்சை. நான் ஒரு மாதிரி பார்த்ததும், அடுத்து ‘ இந்த இலைப் பச்சை எப்படி இருக்குங்க’. அது என்ன, தளிர் வேற, இலை வேறயா. எல்லாம் ஒரே இனம் தானே. நான் தலையைஇங்கிட்டும் அங்கிட்டுமா மையமா ஆட்டினதும், ‘சரி, புடிக்கலையா, இந்த கிளிப் பச்சை’. நான் ஒரு மாதிரி முழிச்சதும், ஒரு அன்புப்பார்வை பார்த்தாங்க.

ஆஹா, இது மாதிரி அன்புப் பார்வை பார்த்தா, அடுத்த ஒரு பெரியஅபாயம் காத்துக்கிட்டு இருக்கும்னு நமக்குத் தெரியாதா என்ன. நினைச்சபடி நடந்தது. ‘டார்லிங், பக்கத்து செக்சனிலில் போயிகருஞ்சிவப்போ ,வெளிர் சிவப்போ உங்களுக்குப் பிடிச்ச சிவப்புக்கலர்லே ஒண்ணு எடுங்க பார்க்கலாம்’. என்று நமக்கே சவால் விடுறமாதிரி சொன்னதும் நமக்கும் ரோஷம் வந்திடுச்சு.

நாமகல்லூரியிலே படிக்கிறப்போ எத்தனை கலர் பாத்துருப்போம், ஆனால் ,அதையெல்லாம் இப்ப மனைவி கிட்ட சொல்றது அபாயம். அது வேற கலர் பார்க்கிற அனுபவம். இப்ப இந்த கலரையும் முயற்சிசெஞ்சு பார்த்திடலாம்னு ‘ வெளிர் சிவப்பு, கருஞ்சிவப்பு ‘ன்னுமனப்பாடம் பண்ணிக்கிட்டே பக்கத்து செக்சனுக்கு போனோம்.

இந்த நேரத்திலே அங்கே இருந்து நம்ம செக்சன் சேல்ஸ் கேர்ள்க்கு அங்கிருந்தபடி சொல்றாங்க. ‘ என் கணவர் அங்கெ வர்றாரு. அவருக்கு , பலவித சிவப்பு நிற ஷேடில் இருக்கிற எல்லாசேலையையும் எடுத்துக் காண்பியுங்க.’. ‘என்ன, எல்லா வித சிவப்புகலருமா. நம்ம கிட்ட சொன்னது வெளிர் சிவப்பும், கருஞ்சிவப்பும்தானே’ என்று ஒரு வித குழப்பத்துடன் நிற்கிறோம்.

அந்த அம்மா செல்பிலே இருந்து ஒரு இருபத்து அஞ்சுசேலைகளை உருவி நாம மேல வீசி எறியிறாங்க . நம்ம கொஞ்சம்பின்னுக்கு விலகியதால் அந்தத் திடீர் தாக்குதலில் இருந்துதப்பினோம். எல்லாச் சேலைகளும், தொப்பென்று மேஜை மேல்விழுந்தன.

நாம, நம்ம கவுரவத்தை வீட்டுக் கொடுத்துற முடியுமா என்ன. எல்லாத்தையும் ஒரு அலட்சியப் பார்வை பார்த்துட்டு, ‘வேற ஷேடில் சிவப்புக் கலர் இல்லையா’ என்றதும் அந்த சேல்ஸ் கேர்ள்நம்மை கூடுதல் மரியாதையுடன் பார்க்கிறாங்க.

‘ ஆஹா, சார் கலர் பார்க்கிறதிலே பெரிய ஆள் போலிருக்கு. இந்தஇருபத்தஞ்சையும் பார்த்துட்டு பிடிக்கலையாமே. சரி’ன்னு சொல்லி, இன்னும் ஒரு இருபத்தஞ்சை உருவி உதறி நம்ம முன்னாலேகொட்டுறாங்க.

‘சார், இது அரக்குச் சிவப்பு, இது குங்குமச் சிவப்பு, இது அடர்சிவப்பு, இது குருதிச் சிவப்பு, இது ,நெருப்புச் சிவப்பு, இது ஒயின்சிவப்பு’.

‘என்ன ஒயின் சிவப்பா, பார்த்த மாதிரி இருக்கே’ என்று நினைத்துக்கொண்டு , ‘அந்த ஒயின் சிவப்பை விரித்துக் காண்பிம்மா ‘ என்றவுடன், அதை ருசித்துப் பார்த்து, இல்லை, ரசித்துப் பார்த்து, எடுத்து அங்கிருந்த படியே மனைவியிடம் காண்பிக்கிறோம்.

அவங்க அங்கிருந்தபடியே, சைகை காண்பிக்கிறாங்க. ‘அதைஅங்கேயே வச்சுட்டு இங்கே வரவும்’ , என்ற உத்தரவு. நாம பேசாமஅந்த ஒயினை அதாவது அந்த ஒயின் கலர் சேலையை அங்கேயேவச்சுட்டு அதை திரும்பி திரும்பி பார்த்தபடி திரும்புகிறோம் ,

அந்த சேல்ஸ் கேர்ள் ஒருவித எரிச்சலோடு நம்மைப் பார்க்கிறாள். அந்த ஐம்பது சேலையையும் திரும்பி மடித்து வைக்க வேண்டுமே. நம்ம வேற சும்மா இல்லாம , எல்லா சிவப்பு கலரும் தெரிஞ்சமாதிரி, அந்தச் சேலைகளை எல்லாம் பிரிச்சுப் பார்த்து ‘கிய்யாகிய்யா தாம்பாளம்ல ‘ விளையாண்டு குப்பையா ஆக்கிட்டுவந்திருக்கோம். அந்த அம்மாவோட எரிச்சல் முகத்தைப் பார்க்காமமனைவி கிட்ட அவசரமா வந்து சேர்றோம் .

அவங்க ரெண்டு கையிலும் ரெண்டு சேலைகள். ‘ ஏங்க . இந்தவெந்தய மஞ்சள் நல்லா இருக்கா, இல்ல, இந்தக் கோமேதகக்கலர் நல்லா இருக்கா, ‘, ‘நம்ம வெந்தயத்தையே பாத்தது இல்லே, கோமேதகம் எங்கே பார்க்கிறது’. கண்ணை, லேசா மூடிக்கிட்டு , விரலை நீட்டுறோம். அது கோமேதகம் மேலே காட்டியிருக்கும்போலிருக்கு.,

‘கோமேதகமா, சாரிங்க. எனக்கு, இந்த வெந்தயக் கலர்தான்புடிச்சிருக்கு. ‘ ‘வெந்தயக் கலர் புடிச்சிருந்தா அப்புறம் என்னவெங்காயத்திற்கு என்னைக் கேட்டே ‘ என்று மனதிற்குள்தான்நினைக்க முடிந்தது. கல்யாணம் ஆனவர்களுக்குத் தெரியும். இதைஎல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதுன்னு.

‘சரி பில்லைக் கொடு’ன்னு கேட்டா கொடுக்கிறாங்க, ஏழு பில்லை . ‘என்னம்மா ஒரு வெந்தயச் சேலைக்கு ஏழு பில்லா’ என்று நாம்அப்பாவி போல் கேட்க , சொல்றாங்க. ‘இல்லைங்க. இந்த ஆறுகலர்களும் நல்லா இருந்துச்சுங்க. இந்த கத்திரி ஊதா , ஆகாயஆரஞ்சு, பழுப்பு மஞ்சள், வெண்கல நிறம், பன்னீர் ரோஜா, இருள்சாம்பல், எண்ணைக் கருப்பு ‘ அதுவும் இந்த இருள் சாம்பலும் இந்தஎண்ணைக் கருப்பும் உங்களுக்கு ரெம்பப் பிடிக்குமே. ‘

என்ன இருள் சாம்பல், எண்ணைக் கருப்பா, இந்த கலர்களை நான்கனவிலே கூட பார்த்தது இல்லையே , ஒருவேளை, நம்ம கலரைகிண்டல் செய்றாளா , சேச்சே அப்படி எல்லாம் இருக்காது என்றுசமாதானம் செய்து கொண்டு, ஏழு பில்களுக்கும் பணத்தைக்கட்டிவிட்டு, ஊபர் டாக்ஸிக்கு புக் பண்ணிட்டு, எல்லாலக்கேஜையும் தூக்கிட்டு மனைவி பின்னால் நடந்து வர்றோம் .

அப்ப, ஊபர் டிரைவரிடம் இருந்து போன். ‘ சார் போரம் மால் சைடுஎன்ட்ரன்ஸ் வந்துட்டேன். என்னோட காரோட கலர் கடற் பச்சை ‘ .

2 Comments on “கலர் பார்க்கும் கலை”

  1. கலர் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது டூரிங் கொட்டாயில் விற்கும் சோடேகலர் தான்! அதில் மட்டும் என்ன நிறப் பானம் இருந்தாலும் கோலி மட்டும் கரு நீலம்! அது ஏன் என்று ;சொல்ல முடியுமா? சூப்பர் வியாசம்!பட்! இதை மனைவி படிச்சா கன்னத்துல கலர் ஏறிடும்!
    சிறகு இரவி!

Comments are closed.